ஊறுகாய் என்று சொல்லும்போதே வாய் ஊறிவிடும். நல்ல ருசியான, தரமான ஊறுகாய் கிடைப்பது தான் பெரிது. நாம் சந்தையில் வாங்கும் எல்லா ஊறுகாய்களிலும் ப்ரிசர்வேடிவ் இருக்கும். அதனால், ஊறுகாய்களை செய்யக் கற்றுக்கொண்டால் தேவைக்கேற்ப கொஞ்சமாக வீட்டிலேயே ஊறுகாய் செய்து கொள்ளலாம். மேலும், தரமான எண்ணெய் பயன்பாடு, நமக்குத் தேவையான அளவில் உப்பு, காரம், எண்ணெய் என எல்லாவற்றையும் கஸ்டமைஸ் செய்து கொள்ளலாம்.


தற்போது ஒரு கிலோ தக்காளி வெறும் ரூ.10க்கு தான் விற்பனை செய்யப்படுகிறது. இந்த மாதிரி விலை குறைந்த சீசனில் தக்காளியை வாங்கி ஊறுகாய் செய்து வைத்துக் கொள்ளலாம். விரும்பினால் பெண்கள் தங்கள் அக்கம், பக்கத்தினருக்கு செய்து கொடுத்து சிறு தொகையையும் ஈட்டலாம்.


சரி இனி எப்படிச் செய்வது தக்காளி ஊறுகாய் என்று பார்ப்போம். 


தேவையான பொருட்கள்: தக்காளி ஒரு கிலோ, பூண்டு 10 பல், எண்ணெய் 100 மில்லி, கடுகு, வெந்தயம், பெருங்காயம், கருவேப்பிலை, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள்.




செய்முறை: 


முதலில் ஒரு கிலோ தக்காளியை நன்றாக கழுவி துடைத்துக் கொள்ளவும். பின்னர், அவற்றின் கண் பகுதியை நீக்கிவிட்டு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். அடி கனமான பாத்திரத்தில் தக்காளியைக் கொட்டி ஒரு மூடி போட்டு மூடி வைக்கவும். அதை அவ்வப்போது திறந்து கிளறிவிடவும். அது ஒருபுறம் இருக்க ஒரு எலுமிச்சை பழம் அளவிலான புளியை ஊற வைத்து அதனை கெட்டியான கரைசலாக தயார் செய்து வைத்திருக்கவும். தக்காளி நன்றாக வதங்கியதும், அந்தப் புளிக்கரைசலை தக்காளியில் ஊற்றம். தக்காளியும், புளியும் சேர்ந்து வெந்து வரும் வரை காத்திருக்கவும். அது வெந்ததும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.


10 தக்காளிகள் அடங்கிய இந்தக் கலவைக்கு ஒரு டீஸ்பூன் வெந்தயம், ஒரு டீஸ்பூன் கடுகு எடுத்துக் கொள்ளவும். அடி கனமான பாத்திரத்தை வைத்து, அது சூடேறியவுடன் அதில் ஒரு டீஸ்பூன் வெந்தயத்தைப் போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும், அதேபோல் கடுகையும் நன்றாக வறுத்து அதையும் ஆற வைக்கவும். இரண்டும் ஆறிய பின்னர் மிக்ஸர் ஜாரில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.


இப்போது ஊறுகாயின் மிக முக்கிய ஸ்டேஜ். நல்ல அடி கனமான ஈரமில்லாத பாத்திரத்தில் 100 மில்லி நல்லெண்ணய் ஊற்றவும். ஊறுகாய்க்கு எப்போதும் நல்லெண்ணெய்யே சிறந்தது. இல்லாவிட்டால் ரிஃபைண்டு எண்ணெய் ஊற்றலாம். தேங்காய் எண்ணெய் மற்றும் ஊற்றக்கூடாது. ஏனெனில் ஊறுகாயை நாம் ஃப்ரிட்ஜில் ஸ்டோர் செய்தால், தேங்காய் எண்ணெய் கெட்டியாகிவிடும். சரி, ஊற்றிய நல்லெண்ணெய் சூடானதும் வெறும் 10 வெந்தயம், ஒரு டீஸ்பூன் கடுகு, 2 வர மிளகாய் (சிறிய துண்டுகளாக கிள்ளியது), கொஞ்சம் கருவேப்பிலை சேர்த்து நன்றாக பொறியவிடவும். பின்னர் ஸ்டவ்வை அனைத்துவிட்டு அதே எண்ணெய்யில் மஞ்சள் தூள், பெருங்காயம் தலா ஒரு டீஸ்பூன், மிளகாய்ப்பொடி உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப (இங்கே 10 தக்காளிகளுக்கு ஒரு டேபிள் ஸ்பூன் மிளகாய்த் தூள்) போட்டு நன்றாக கிளறிவிடும். அந்த சூட்டில் மிதமாக வெந்துவிடும். பின்னர். ஏற்கெனவே செய்துவைத்த தக்காளி, புளி மசியலை எடுத்து இந்தக் கலவையில் போட்டு நன்றாக வதக்கவும். பாத்திரத்தை பக்கவாட்டில் சாய்த்தால் தொக்கு ஒரு பந்துபோல் உருண்டோட வேண்டும். அந்தப் பதம் வரும் வரை ஊறுகாயை வதக்கவும்.


அவ்வளவுதான் சுவையான ஊறுகாய் தயார். ஒரு கண்ணாடி பாட்டிலை சுத்தம் செய்து ஈரப்பதம் இல்லாமல் எடுத்துக் கொள்ளவும். ஊறுகாய் முழுமையாக ஆறியவுடன் அதனை பாட்டிலில் அடைத்துக் கொள்ளவும். எப்போது ஊறுகாயை எடுத்தாலும் ஈரமில்லாத ஸ்பூர் பயன்படுத்தி எடுக்கவும். உங்களுக்குத் தேவையான தக்காளி ஊறுகாய் தயார்.