தேவையான பொருட்கள்


கோதுமை மாவு - ஒரு கப், அரிசி மாவு - கால் கப், ஏலக்காய் தூள் – அரை ஸ்பூன், சமையல் சோடா - ஒரு சிட்டிகை, உப்பு - ஒரு சிட்டிகை, தேங்காய் துருவல் - கால் கப், பழுத்த வாழைப்பழம் - ஒன்று, பொடித்த வெல்லம் - ஒரு கப், தண்ணீர் - 1 1/4  கப்.


செய்முறை


கோதுமை அப்பம் செய்வதற்கு ஒரு கப் கோதுமை மாவுடன், கால் கப் அளவிற்கு அரிசி மாவு சேர்க்க வேண்டும்.


பின்னர் வாசனைக்கு ஏலக்காய் தூள் அரை ஸ்பூன் அளவிற்கு சேர்த்துக் கொள்ளுங்கள். அப்பம் உப்பி வருவதற்கு ஒரு சிட்டிகை அளவிற்கு சமையல் சோடா சேர்த்துக் கொள்ள வேண்டும். எப்பொழுதும் எந்த ஸ்வீட் வகையாக இருந்தாலும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து செய்யும் பொழுது அதன் சுவையை தூக்கி காட்டிக் கொடுக்கும் எனவே ஒரு சிட்டிகை தூள் உப்பு போட்டுக் கொள்ளுங்கள். பின்னர் துருவிய தேங்காய் கால் கப் அளவிற்கு சேர்த்துக் கொள்ளுங்கள். ஒரு வாழைப்பழத்தை நன்கு பிசைந்து கூழாக்கி சேர்க்க வேண்டும். பின்னர் அடுப்பில் ஒரு கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி அதில் ஒரு கப் அளவிற்கு பொடித்த வெல்லத்தை சேர்த்து நன்கு கரைத்துக் கொள்ளுங்கள். வெல்லம் கரைந்ததும் அடுப்பை அணைத்து அதை அப்படியே சிறிது நேரம் ஆற விட்டு விடுங்கள்.


ஐந்து நிமிடம் கழித்து நீங்கள் தயார் செய்து வைத்துள்ள மாவுடன் இந்த வெல்ல கரைசலை வடிகட்டி சேர்த்து கால் கப் அளவிற்கு தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றிக் கொண்டே கலந்து விட வேண்டும். அப்பம் சுடுவதற்கு சரியான பதத்தில் மாவு இருக்க வேண்டும். இல்லையேல் எண்ணெய் அதிகம் குடித்து விடும் அல்லது அப்பம் போடும் பொழுது மாவு தனியாக பிரிந்து சென்று விட வாய்ப்புகள் உண்டு. எனவே தண்ணீரை சிறிது சிறிதாக ஊற்றி பதம் பார்த்து சரியாக கலந்து விட்டுக் கொள்ளுங்கள்.


அடுப்பில் வாணலி ஒன்றை வைத்ததில் தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு நன்கு காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் அடுப்பை மீடியமாக வைத்துக் கொண்டு ஒவ்வொரு குழி கரண்டி மாவை எடுத்து எண்ணெயில் ஊற்றுங்கள். ஒருபுறம் லேசாக வெந்து மேலே எழும்பும்போது திருப்பி போடுங்கள். இது போல எல்லா மாவையும் ஊற்றி அப்பம் சுட்டு எடுத்து சாப்பிட்டு பாருங்கள், அவ்வளவு அருமையாக பாட்டி சுட்டது போலவே சூப்பரான டேஸ்ட்டில் இருக்கும். நீங்களும் இதே மாதிரி ட்ரை பண்ணி அசத்துங்க!