தமிழ் வருட பிறப்பு என்றாலே ஸ்பெஷல் தான். அப்போ இனிப்பும் ஸ்பெஷலா இருக்கணும் தானே. நீங்க வழக்கமாக செய்யும் கேசரி பாயாசம் வேண்டாம். இப்போ ஒரு புதுமையான முறையில் அடை பாயாசம் எப்படி செய்வது என்று தான் பார்க்க போறோம். நாளைக்கு இந்த பாயாசத்தை செய்து அசத்துங்க. 


அரை கப் பச்சரிசியை அரை மணி நேரம் ஊற வைத்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்க்கவும். இதனுடன் 3 ஸ்பூன் சர்க்கரை, 3 எலக்காய், 3 தேங்காய் துண்டுகளை சேர்த்து மைய அரைத்துக் கொள்ளவும். இதை வடிகட்டி கொண்டு வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். இப்போது அடுப்பில் கடாய் வைத்து அதில் இரண்டு பெரிய டம்ளர் அளவு தண்ணீர் சேர்த்து தண்ணீரில் ஸ்டாண்டு வைத்து அதன் மீது ஒரு அகலமான தட்டு வைத்து இதில் அரைத்து வைத்துள்ள மாவை பாதியளவு சேர்த்து மீடியம் சைஸ் தோசை அளவு தடிமனில் ஊற்றிவும். இதை ஒரு மூடி போட்டு 8 லிருந்து 10 நிமிடம் வேகவைத்து பின் இந்த தட்டை எடுத்து ஆற வைத்து இந்த அடையை எடுத்து சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். மீதம் இருக்கும் மாவை இதே முறையில் மீண்டும் ஒருமுறை வேக வைத்து எடுத்து சிறு சிறு துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளவும். 


இப்போது அடுப்பில் ஒரு நான் ஸ்டிக் பான் அல்லது அடி கனமான பாத்திரத்தை வைத்து அதில் முக்கால் கப் அளவு வெல்லம் சேர்த்து, ஒரு கப் தண்ணீர் சேர்த்து வெல்லம் உருகியதும். அடுப்பில் இருந்து இறக்கி வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். ( உங்களுக்கு வேண்டுமென்றால் சர்க்கரை அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்) பின் இந்த வெல்லப் பாகை அதே பாத்திரத்தில் சேர்த்து பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் வெட்டி வைத்துள்ள அடைகளை சேர்க்கவும். இப்போது இரண்டு கொதி வந்ததும். இரண்டு ஸ்பூன் அரிசி மாவை தண்ணீரில் கரைத்து வெல்லப் பாகுடன் சேர்க்கவும். இரண்டு நிமிடம் கொதித்ததும் ஒரு கப் திக்கான தேங்காய் பால் சேர்த்து ஒரு நிமிடம் வெந்ததும் அடுப்பை அணைத்து விட்டு இதை இறக்கி கொள்ளவும். பின் அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்து அதில் 10 முந்திரி, நறுக்கிய கால் கப் தேங்காய், 15 காய்ந்த திராட்சை சேர்த்து வறுத்து பாயாசத்தில் சேர்த்து கலந்து விடவும். அவ்வளவு தான் சுவையான அடை பாயாசம் தயார்.