சேலத்தின் சிறப்புமிக்க உற்பத்தி பொருளாக உள்ள ஜவ்வரிசிக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி சேலம் மாவட்டத்தில் உள்ள சேகோசர்வ் சங்க வளாகத்தில் நடைபெற்றது. சேலம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், சேகோசர்வ் செயலாட்சியர் லலித் ஆதித்ய நீலம், தமிழ்நாடு புவிசார் குறியீடு நோடல் அலுவலர் சஞ்சய் காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சேலம் ஜவ்வரிசிக்கு வழங்கப்பட்டுள்ள புவிசார் குறியீடு சான்றிதழை புவிசார் குறியீடு நோடல் அலுவலர் சஞ்சய் காந்தி, சேகோசர்வ் செயலாச்சிரிடம் வழங்கினார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர் கார்மேகம், சேகோசர்வ் நிறுவனம் அமைக்கப்பட்டதற்குப் பிறகு விவசாயிகள், ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள், வெளி உலக சந்தை ஆகியவை சீராக செயல்பட்டு வருகிறது. இதில் சேலம் ஜவ்வரிசிக்கு புவிசார் குறியீடு சான்றிதழ் வழங்க வேண்டும்மென்று நீண்ட நாட்கள் கோரிக்கையாக இருந்து வந்தது. தமிழ்நாடு முதலமைச்சர் சேலம் மாவட்டத்திற்கு வருகை தந்தபோது, நேரடியாக கிழங்கு எப்படி மாவாக மாறி வருகிறது என்பதை ஆத்தூரில் உள்ள ஜவ்வரிசி ஆலையில் ஆய்வு மேற்கொண்டார்கள். அந்த வகையில் தமிழ்நாடு அரசின் சிறப்பு கவனத்தை பெற்ற உற்பத்தி கேந்திரமாக சேகோசர்வ் நிறுவனமும், மரவள்ளி விவசாயமும், ஜவ்வரிசி ஆலையும் இருந்து வருகிறது என்றார்.
பாரம்பரியமிக்க ஜவ்வரிசிக்கு சேலம் சேகோ (ஜவ்வரிசி) என்ற பெயரில் புவிசார் குறியீடு பெறும் முயற்சியில் ஈடுபட்டு தற்சமயம், சேலம் சேகோ (ஜவ்வரிசி) என்ற புவிசார் குறியீடு கிடைக்கப்பெற்றுள்ளது. இந்தியாவில் 5.5 மில்லியன் டன் ஜவ்வரிசி உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் பெரும்பாலான ஜவ்வரிசி உற்பத்தி தமிழ்நாடு சார்ந்து இருக்கின்றது. இந்நிறுவனத்தின் மூலம் 2.17 லட்சம் மூட்டைகளை தேக்கி வைக்கக்கூடிய மின்னணு ஏலம் வசதி உள்ள நிறுவனம். சேகோசர்வ் நிறுவனம் 2022-2023 ஆம் ஆண்டில் ரூ.402 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. தமிழ்நாடு அரசு நிறுவனமான சேகோசர்வ் நிறுவனம் அதன் உறுப்பினர்களுக்கும், விவசாயிகளுக்கும் மரியாதையை மற்றும் பாராட்டை வழங்கியுள்ளது. சேகோசர்வ் தெற்கு ஆசியாவிலேயே மிக பெரிய தொழிற்கூட்டுறவு சங்கமாகும். சேகோசர்வில் நாளது தேதியில் 374 உறுப்பினர்கள் உள்ளார்கள். இந்தியாவிலேயே ஜவ்வரிசிக்கு என்று ஒரே ஒரு விற்பனை கேந்திரமாக சேகோசர்வ் சங்கம் செயல்பட்டு வருகிறது. ஜவ்வரிசியானது ஒரு பாரம்பரியமிக்க ஒரு உணவு பொருளாகும். ஜவ்வரிசியானது வடமாநில மக்களால் புனிதமிக்க உணவு பொருளாக மிகமுக்கியமான நவராத்திரி, துர்காபூஜா போன்ற திருவிழா காலங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்று கூறினார்.
சேலம் சேகோவுக்கான புவியியல் குறியீடு சான்றிதழ், உணவுப் பொருள் வகைப்பாட்டு பிரிவு 30 இன் கீழ் பெறப்பட்டுள்ளது பழனி பஞ்சாமிர்தம், சேலம் மல்கோவா மாம்பழம் மற்றும் திருப்பதி லட்டு போன்ற பிரபலமான தயாரிப்புகளுடன் சேலம் சேகோவும் தற்போது இணைந்துள்ளது. இது சேகோ தயாரிப்பின் தனித்துவத்தையும் நம்பகதன்மையையும், மேம்படுத்தவும், புதிய சந்தை வாய்ப்பை உருவாக்கவும், சேகோ மற்றும் சேகோ சார்ந்த உற்பத்தி பொருட்களுக்கு தேசிய மற்றும் சர்வதேச சந்தைகளில் முக்கியதுவம் அளித்து பொருளாதார மேம்பாட்டிற்கு உதவுகிறது. புவிசார் குறியீடு பெற்றதின் மூலம் ஜவ்வரிசிக்கு உரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதனால் மரவள்ளிக்கிழங்கு பயிரிடும் அனைத்து விவசாயிகளுக்கும் நல்ல விலை கிடைக்கும். ஜவ்வரிசி மற்றும் மரவள்ளிக்கிழங்கு மாவிலிருந்து தயாரிக்கப்படும் பல்வேறு வகையான மதிப்பு கூட்டப்பட்ட பொருள்களின் மதிப்பும் அதிகரிக்கும். மேலும் ஜவ்வரிசியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அதிகளவில் வாய்ப்பு உள்ளது. இதனால் இந்திய பொருளாதாரமும் மற்றும் உலக பொருளாதாரமும் மேம்படும் நிலை ஏற்படும் என்றார்.