'இந்தியாவை வடிவமைப்பவர்’ என்று செல்லமாகக் குறிப்பிடப்படுபவர் டயட்டீஷியன் ருஜூதா திவாகர். அனில் அம்பானி முதல் கரீனா கபூர் வரை இந்தியாவின் டாப் மோஸ்ட் பிரபலங்கள் எப்போது, என்ன சாப்பிட வேண்டும் என்று தீர்மானிப்பவர் இவர்தான். சர்வதேச அளவில் அதிகம் பின்பற்றப்படுகிறவர்களின் ஊட்டச்சத்து நிபுணரான ருஜூதாவின் புத்தகங்களும், டயட் பற்றிய வீடியோக்களும் எப்போதும் பலத்த வரவேற்பைப் பெறுபவை. உணவுத்துறையில் 20 ஆண்டுக்கும் மேலான அனுபவம்மிக்க ருஜூதா திவாகர், சமீபத்தில் ஜவ்வரிசியில் செய்யப்படும் கிச்சடியின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு அதனை பெண்களுக்கு எவ்வளவு நன்மை, எந்த பிரச்சனைக்கு எப்படி, எவ்வளவு உட்கொள்ள வேண்டும் என்று விளக்கியுள்ளார். 100 கிராம் ஜவ்வரிசியில் 351 கிலோ கலோரிகள், 87 கிராம் கார்போஹைட்ரேட், 0.2 கிராம் கொழுப்பு மற்றும் 0.2 கிராம் புரதம் உள்ளது. கனிமங்கள், வைட்டமின்கள், கால்சியம், இரும்புச்சத்து மற்றும் நார்ச்சத்துக்கள் குறைந்த அளவிலேயே இதில் காணப்படும். இருப்பினும் பால், காய்கறி மற்றும் கடலை பருப்புடன் இதனை சேர்த்து உட்கொண்டால், விட்டுப்போன இந்த ஊட்டச்சத்துக்கள் நமக்கு கிடைக்கும்.



இப்போது இந்த ஜவ்வரிசி கிச்சடியை எப்படி செய்வதென்று சுருக்கமாக பார்க்கலாம். முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, வரமிளகாய், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு சேர்த்து நன்கு தாளிக்க வேண்டும். பின்னர் அதில் பெருங்காயத்தூள், இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். அடுத்து அதில் ஜவ்வரிசியை கழுவி சேர்த்து, தேவையான அளவு உப்பு தூவி, 2 நிமிடம் கிளறி விட வேண்டும். ஜவ்வரிசியானது நன்கு வெந்ததும், அதில் வேர்க்கடலையை தூவி கிளறி இறக்கி, கொத்தமல்லியை தூவினால், சுவையான ஜவ்வரிசி கிச்சடி ரெடி. இந்த ஜவ்வரிசி கிச்சடியை நாம் எப்படி உட்கொண்டால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்று ருஜுதா திவாகர் குறிப்பிட்டவைகள் கீழே. 







  1. நாக்கில் சுவை மொட்டுக்களை தூண்டுவதற்கு, பக்கவாதம் தவிர்ப்பதற்கு, பசியைத் தூண்டுவதற்கு, மற்றும் காய்ச்சல் போன்றவற்றிலிருந்து விரைவாக மீள 1 சிறிய கிண்ணத்தில் ஒரு முறை எடுத்துக்கொள்ளலாம்.

  2. மெனோபாஸ் மற்றும் எண்டோமெட்ரியோசிஸ் ஆகியவற்றின்போது அதிக இரத்தப்போக்கு ஏற்படுவதைத் தடுக்க வாரத்திற்கு ஒரு முறை ஒரு கிண்ணம் எடுத்துக்கொள்ளலாம். இரத்தப்போக்கு அதிகமாக இருந்தால் மாதவிடாயின் 4 வது அல்லது 5 வது நாளில் எடுத்துக் கொள்ளலாம்.

  3. குழந்தை பெற விரும்பும் பெண்கள், கருவுறுதல் அளவை மேம்படுத்த. முட்டைகளை உறைய வைக்கத் திட்டமிடுபவர்கள் வாரத்திற்கு இரண்டு முறை, நீங்கள் விரும்பிய நேரத்தில் உட்கொள்ளலாம்.

  4. மாதவிடாய் நின்ற பிறகு, மாதவிடாய்க்கு சற்று முன்பு தலைவலி/அதிக சோர்வு ஏற்பட ஆரம்பித்தால், ஒரு கிண்ணம் எடுத்துக்கொள்ளலாம்.

  5. கருமுட்டை வலுவாக இருக்கும், மாதவிடாய் இல்லாத காலத்தில் ரத்தம் வெளியேறினால், அப்போது ஒரே ஒரு முறை இதனை எடுத்துக்கொள்ளலாம்.

  6. PMS எனப்படும் மாதவிடாய்க்கு முந்தைய மற்றும் பிந்தைய காலங்களில், மற்றும் பசி இல்லாமல் இருக்கும் காலங்களில் மதிய உணவு நேரத்தில் தயிருடன் சேர்த்து உட்கொள்ளலாம்.