எந்த நோய்க்கு மருத்துவரிடம் சென்றாலும், மருத்துவர் முதலில் சொல்வது காபி, டீயை விட்டுடுங்க என்பதுதான். ஆனால், நம்மில் பலரும் சொல்லும் ஒரே காரணம் சார் வண்டிக்கு பெட்ரோல் மாதிரி சார் எனக்கு காபி, டீ. காலையில் ஒரு கப் காபியோ, டீயோ குடித்தால் தான் என்னால் இயங்கவே முடியும் எனப் பலரும் சர்வசாதாரணமாக கூறக் கேட்டிருப்போம்.
அப்படித் தோன்றினால் காபி, டீயை விடுவதற்கு 6 எளிய மாற்றுப் பானங்களை சொல்லித் தருகிறோம்.


1.​தண்ணீர்


சரியாத்தான் படிச்சீங்க. வெறும் பச்சைத் தண்ணீரைத் தான் பரிந்துரைத்துள்ளோம். கிராமத்தில் இந்தப் பழக்கம் உண்டு. இது ஒரு நற்பழக்கம். நிறைய தண்ணீர் குடிப்பதால் உடலை எப்போதுமே நீரேற்றமாக வைத்திருருக்க முடியும். உடலின் வழக்கமான செயல்பாட்டை ஊக்குவிக்க தண்ணீர் மிக அவசியம். அதனால் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது நம்முடைய அன்றாடப் பழக்கத்தின் ஒரு பகுதியாக வைத்துக் கொள்ள வேண்டும்.


குறிப்பாக, காலையில் எழுந்தவுடன் நிறைய தண்ணீர் குடிப்பது உடலைத் தூய்மைப்படுத்தவும் உடலின் கழிவுகளை வெளியேற்றவும் உதவியாக இருக்கும். காலையில் வெறும் வயிற்றில் குடலில் அமிலத் தன்மை அதிகமாக இருக்கும். அதை சமன்படுத்தவும் வெறும் வயிற்றில் தண்ணீர் நிறைய குடிக்க வேண்டியது அவசியம்.


2.எலுமிச்சை நீர்


பச்சைத் தண்ணீர் ரொம்ப கஷ்டம் என்பவர்களுக்கு இந்த லெமன் வாட்டர். இதிலென்ன இருக்கு என நினைக்காதீர்கள். இந்த எலுமிச்சையில் வைட்டமின் சி, நார்ச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் நிறைந்திருக்கின்றன. இது நம்முடைய உடலுக்குச் சிறந்த ஆக்சிஜனேற்றி என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். வைட்டமின் சி ஃப்ரீ ரேடிக்கல்ஸில் இருந்து நம்முடைய குடலைப் பாதுகாக்கிறது. உடல் மற்றும் வயிறு உப்புச் சத்தைக் குறைக்க உதவுகிறது. நம்முடைய உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி தொற்று நோய்களில் இருந்து பாதுகாக்கிறது. அதோடு கெட்ட கொழுப்புகளைக் கரைக்கிறது. இத்தனை நன்மைகள் இருப்பதால் உடலை எப்போதும் புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ள முடிகிறது. அதனால் காலை நேரத்தில் ஒரு கப் எலுமிச்சை நீருடன் நாளைத் தொடங்க முயற்சித்துப் பாருங்களேன்.


3. சோம்பு டீ


பால் டீ குடிக்காவிட்டால் டென்ஷனாகுதா? அப்போ இந்த சோம்பு டீயை ட்ரை பண்ணுங்க. இந்த பானத்தில் முதலிடத்தைப் பிடிக்கிறது சோம்பு டீ. சோம்பில் ஜீரணத்தைத் தூண்டும் பல என்சைம்கள் அடங்கியிருக்கின்றன. அதனால் காலையில் வெறும் வயிற்றில் பால் கலந்த டீ, காபி குடிப்பதற்கு பதிலாக, சோம்பு டீ குடித்தால் உடலின் தசைகளைத் தளர்வாக வைத்திருக்க உதவுவதோடு சிறந்த மலமிளக்கியாகவும் செயல்படுகிறது. இதிலுள்ள அதிக அளவிலான நார்ச்சத்துக்கள் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு ஜீரண மண்டலத்துக்கு ரத்த ஓட்டத்தைச் சீராகச் செல்ல உதவியாக இருக்கிறது. குடல் ஆரோக்கியத்தைப் பேண விரும்புவோர் காலை எழுந்ததும் ஒரு கப் சோம்பு டீ குடிப்பதைப் பழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.




4.​ கோதுமைப் புல் சாறு


காலையில் வெறும் வயிற்றில் கோதுமைப் புல் சாறினைக் குடிப்பது உடலின் ஜீரண சக்தியை மேம்படுத்த உதவும். கோதுமைப் புல்லில் உள்ள இதிலுள்ள என்சைம்கள் நாம் உண்ணும் உணவிலுள்ள ஊட்டச்சத்துக்களை முறையாக உறிஞ்சிக் கொள்ள உதவுகிறது. மேலும், வாயுத்தொல்லை, வயிற்று உப்பசம், குடல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், மலச்சிக்கல், அஜீரணக் கோளாறு, வயிறு மந்தம் போன்ற பிரச்சினைகளைத் தீர்க்கிறது.
 
5.கொம்புச்சா டீ


இதை எப்படி செய்வது பெயரே வித்தியாசமாக இருக்கிறதே என்று நினைக்க வேண்டும். கொம்புச்சா என்பது ஒருவகை நொதிக்க வைக்கப்பட்ட தேயிலை. இதில் அதிக அளவில் புரோ பயாடிக் பண்புகள் இருப்பதால் இது வயிற்றுக்கும் குடலுக்கும் இதமளிக்கிறது. குறிப்பாக, காலை நேரத்தில் அதிகமாக புரோ பயோடிக் உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்க முடியும். ஜீரணக் கோளாறு, தொற்றுக்களைச் சரிசெய்து, எடையைக் குறைக்கவும் இது மிகச்சிறந்த பானமாக இருக்கும்.


​6.கற்றாழை ஜூஸ்


கற்றாழை மிகச்சிறந்த மலமிளக்கியாகச் செயல்படும். செரிமானக் கோளாறுகளைச் சரிசெய்து, குடல் எரிச்சல் போன்றவற்றை நீக்குவதோடு வயிற்றுப் பகுதியில் உண்டாகும் அசவுகரியத்தைப் போக்க உதவுகிறது. காலையில் கற்றாழை ஜூஸைக்  குடிப்பது நாள் முழுக்க உங்களுடைய குடலையும் வயிற்றையும் பாதுகாப்பாகவும் குளிர்ச்சியுடனும் வைத்திருக்க உதவும்.


வாரத்தில் 7 நாள் இதில் 6 ரெசிபிக்கள் உள்ளன. இவற்றை ட்ரை பண்ணுங்களேன். பச்சைத் தண்ணீரெல்லாம் ரெசிபிஸா எனக் கேட்காதீர்கள். பச்சைத் தண்ணீரின் மகிமையை நீங்கள் வழக்கப்படுத்திக் கொண்ட பின்னர் அறிவீர்கள்.