நவராத்திரி விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தசரா, துர்கா பூஜை என பல்வேறு பெயர்களில் கொண்டாடும் முறைகளில் வேறுபாடு இருக்கிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் அதற்குரிய கலாச்சார பண்பாட்டு விழுமியங்கள் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் கோயில்களில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், அலங்காரம் என ஒன்பது நாள்களும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். சில கோயில்களில் கொலு வைக்கும் பழக்கமும் உண்டு.
இதேபோன்று வீடுகளிலும் கொலு வைத்து வழிபடுவது வழக்கம். அம்மன் இவ்வுலகில் எல்லாமுமாக விளங்குவதாக நம்படுவதால் அதை உணர்த்தும்விதமாக நவராத்திரி கொண்டாடப்படுகிறது. புரட்டாசி மாதம் அமாவாசைக்கு அடுத்த நாள் முதல் தொடங்கு ஒன்பது நாட்கள் வரையில் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. விஜயதசமியையும் சேர்த்து மொத்தம் 11 நாட்கள் நவராத்திரி விழாவாக கொண்டாடப்படும். ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை வழிபாடுடன் நவராத்திரி விழா நிறைபெறும்.
நவராத்திரி விழா நாள்களில் ஒவ்வொரு நாள்களும் கோலங்கள், தானியங்கள் என ஒன்பது விதமாக சிறப்பு பூஜைகள் எல்லாம் நடத்தப்படும். வீடுகளில் கொலு வைத்து விதவிதமான பொம்மைகளால் அலங்கரித்து, வீட்டிற்கு வருபவர்களை நன்றாக உபசரித்து அனுப்புவர். நவராத்திரி முதல் மூன்று நாள்கள் லட்சுமிக்கும் அடுத்த மூன்று நாள்கள் சக்திக்கும் கடைசி மூன்று நாள்கள் சரஸ்வதிக்கும் உரியதாக தமிழ்நாட்டில் கொண்டாடப்படுகிறது. இந்த விழா காலத்தில் கோயில்களில் கொலு வைத்து சிறப்பு வழிபாடு இருக்கும். ஒன்பது மலர்கள், பழங்கள், ஒன்பது தானியங்கள், ஒன்பது பிரசாதங்கள் என ஒன்பது விதமான அலங்காரங்கள் என அம்மனை வழிபடுவர். நவராத்திரி விழாவின்போது விரத நாட்களில் வீட்டில் செய்ய இனிப்பு, நைவேத்தியம் என்ன செய்வது என தினமும் என்ன செய்வது என திட்டமிடுவது கொஞ்சம் சிரமமாக இருக்கும். அந்த லிஸ்டில் திருநெல்வேலி திரிபாகம் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம். (திரிபாகம் என்பது மருவி திருப்பாகம் என்றாகிவிட்டது.) சமையலில் அறையில் உள்ள பொருட்களை வைத்து குறைந்த நேரத்தில் செய்துவிடலாம். இதோ திரிபாகம் ரெசிபி.
என்னென்ன தேவை?
கடலை மாவு – 1 கப்
காய்ச்சாத பால் – 1 கப்
சர்க்கரை – 2 கப்
முந்திரி - அரை கப் (பொடித்தது அல்லது மிக்ஸியில் கொரகொரப்பான பதத்தில் அரைத்தது )
குங்குமப்பூ – சிறிதளவு
பச்சை கற்பூரம் – மிளகு அளவு
செய்முறை
பாலில் குங்குமப்பூவைப் போட்டு கால் மணி நேரம் ஊறவைக்க வேண்டும். சல்லித்த கடலை மாவைப் பாலில் கொட்டி, கட்டி விழாத பதத்துக்குக் கரைக்க வேண்டும். கொரகொரப்பாகப் பொடித்த முந்திரியை எடுத்துக்கொள்ளவும்.
அடுப்பில் ஒரு கனமான பாத்திரத்தை வைத்து மிதமான தீயில் கடலைமாவு - பால் கரைசலை கொட்டி நன்றாக கிளறிக்கொண்டேயிருக்க வேண்டும். கடலை மாவு கலவை இறுகிவரும்போது, சர்க்கரையை சேர்க்க வேண்டும். சர்க்கரை சேர்த்ததும் கலவையில் அளவு அதிகரிக்கும். குறைந்த தீயில் தொடர்ந்து கிளறிக்கொண்டேயிருக்க வேண்டும். கலவை இறுகிவரும்போது, சிறிது சிறிதாக நெய் சேர்க்கவும். பொடித்த முந்திரியையும், கையால் பொடித்த பச்சைக் கற்பூரத்தையும் இனிப்பை அடுப்பிலிருந்து இறக்குவதற்கு முன் சேர்க்க வேண்டும். 20 நிமிடங்களில் சுவையான திரிபாகம் தயார்.
திரிபாகம் நன்றாக வரவேண்டுமெனில் குறைந்த தீயில் மட்டும் இதை செய்ய வேண்டும். அடி கனமான பாத்திரத்தில் மட்டும் செய்யவேண்டும். தொடர்ந்து கை விடாமல் கிளறிக்கொண்டே இருப்பதுதான் முக்கியம்.
’திருநெல்வேலி’ என்றதும் வற்றா நதி தாமிரபரணி, அல்வா, சொதி என பிரசித்திபெற்றவை என்று பட்டியல் நீளும். திரிபாகம் என்பதும் பிரசித்த பெற்ற இனிப்புதான். நவராத்திரி விழா காலத்தில் ஒரு நாளில் இதை செய்து அசத்தலாம். இனிப்பு பிரியர் என்றால் தோணும்போதெல்லாம் செய்து சாப்பிடுங்க.