காலை வேளைகளை சிறப்பான முறையில் தொடங்குவதால் உண்மையில் நம் ஆரோக்கியம் மேம்படும். இந்தக் காலை வேளைகளை ஆரோக்கியம் நிறைந்ததாக மாற்ற வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்ளும் பல ஆரோக்கியமான பானங்கள் உள்ளன.


எலுமிச்சை, தேன் தண்ணீரில் இருந்து மூலிகைகள் மற்றும் விதைகள் கலந்த நீர் வரை, உங்கள் தேவைக்கேற்ப பானங்களை நீங்கள் தேர்வு செய்யலாம். இந்த ஆரோக்கியமான பானங்கள் அனைத்தும் ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் நமக்கு நிச்சயம் பலனளிக்கும்.


ஒரு பானத்தை முந்தைய நாளே தயார் செய்து வைத்து, காலையில் படுக்கையை விட்டு எழுந்த உடனேயே குடித்து உற்சாகமாக உங்கள் நாளைத் தொடங்க விரும்புகிறீர்களா?


காலையை உற்சாகமாக்கும் பானங்கள்


உங்கள் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவது மட்டுமின்றி, உங்கள் செரிமான அமைப்பை சீராக இயங்க வைப்பதோடு, ஆரோக்கியமான முடி மற்றும் சருமத்தையும் உங்களுக்கு வழங்கும் இரண்டு பானங்கள் அவற்றின் செய்முறை விளக்கத்தை இங்கே பார்க்கலாம்.


உணவியல் நிபுணர் அகன்ஷா ஜே.சாரதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காலையை உற்சாகமாகத் தொடங்குவதற்காக இந்த டிடாக்ஸ் தண்ணீர் ரெசிபிகளை அறிமுகப்படுத்தியுள்ளார். அவை பின்வருமாறு:


பெருஞ்சீரக விதைகள் (Saunf) நீர்


இந்த பானம் வீக்கத்திற்கு எதிராகப் போராடும். செரிமான அமைப்பை மேம்படுத்த உதவுகிறது மற்றும் அசிடிட்டி (acidity) போன்ற பிரச்னைகளைத் தடுக்கிறது.


துளசி விதைகள் நீர்


இந்த பானம் மலச்சிக்கல், அமிலத்தன்மை மற்றும் நெஞ்செரிச்சல் ஆகியவற்றைத் தடுக்கிறது. மேலும், உடலில் குளிர்ச்சியை ஏற்படுத்தும்.


உணவியல் நிபுணரான அகன்க்ஷா ஜே.ஷார்தாவின் கூற்றுப்படி, இந்த இரண்டு விதை நீர் பானங்களும் வலுவான, ஆரோக்கியமான முடி மற்றும் ஒளிரும் சருமத்தை அடைய உதவுகின்றன.


செய்முறை


ஒரு டீஸ்பூன் பெருஞ்சீரக விதைகள் அல்லது துளசி விதைகளை எடுத்து அதனை நன்கு கிளறி, விதைகளின் ஊட்டச்சத்துக்கள் இறங்கும்படி இரவு முழுவதும் தண்ணீரில் ஊற விடவும். மறுநாள் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் இந்த பானத்தைப் பருகவும்.


இந்தத் தண்ணீரில் சியா விதைகளையும் பயன்படுத்தலாம்.


 






இந்த டிடாக்ஸ் பானங்கள் மூலம் ஆரோக்கியம் தரும் இந்த விதைகளை உங்கள் உணவின் தினசரி பகுதியாக மாற்றி பலன் பெறுங்கள்.