குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே குல்ஃபி பிடிக்கும். அதில் சேர்க்கப்படும் பாலின் சுவை குல்ஃபிக்கு தனி சுவையை கொடுக்கும்.தெருவில் விற்ற குல்ஃபியை நாம் எல்லோருமே வாழ்வில் ஒரு முறையேனும் ஆசையாக ஓடிச் சென்று வாங்கி சாப்பிட்டிருப்போம்.
தேவையான பொருட்கள்
பால் – 1 லிட்டர், பாதாம் – 15, பிஸ்தா – 10, ஏலக்காய் – 3 , கண்டன்ஸ்டு மில்க் -¼ கப், குங்குமப்பூ – 1 சிட்டிகை (பாலில் ஊற வைத்தது), சர்க்கரை – ¼ கப்.
செய்முறை
1 லிட்டர் தண்ணீர் சேர்க்காத திக்கான பாலை ஒரு பாத்திரத்தில் சேர்த்து மிதமான தீயில் காய்ச்ச வேண்டும். பால் 1/2 லிட்டராக குறையும் வரை நன்றாக காய்ச்ச வேண்டும். பால் அடிபிடிக்காதவாறு அவ்வப்போது கிண்டி விட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.
ஒரு மிக்ஸி ஜாரில் 16 பாதாம், 12 பிஸ்தா, 4 ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து அதை கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் பாலில் ¼ கப் கண்டென்ஸ்டு மில்க் சேர்த்து மிக்ஸ் செய்ய வேண்டும். 1 சிட்டிகை குங்குமப் பூவை சிறிது நேரம் பாலில் ஊறவைத்து அதன் பின்னர் சேர்த்து கொள்ள வேண்டும். இப்போது கொர கொரப்பாக அரைத்து வைத்துள்ள பாதாம் பிஸ்தாவை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இந்த பாலை 2 நிமிடங்களுக்கு மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும். இதனுடன் கால் கப் சர்க்கரை சேர்த்து மிக்ஸ் செய்ய வேண்டும். சர்க்கரை பாலில் கரைந்த பின் ஆற வைக்க வேண்டும்.
பால் ஆறியதும், டீ கிளாஸ் அல்லது பேப்பர் கப்பில் இந்த பாலை ஊற்றிக் கொள்ள வேண்டும். இதை அலுமினியம் பாயில் அல்லது பிளாஸ்டிக் பேப்பர் கொண்டு மூட வேண்டும்.இதன் நடுவில் ஐஸ்க்ரீம் குச்சியை செருக வேண்டும்.
இதை ஃப்ரீசரில் 8 மணி நேரம் அல்லது இரவு முழுவதும் வைக்க வேண்டும். பின்னர் ஃப்ரீசரில் இருந்து குல்ஃபியை எடுத்து 20 வினாடிகள் வரை தண்ணீரில் வைக்க வேண்டும். இப்போது மெதுவாக வெளியே எடுத்தால் சில் குல்பி தயார்.