பனீர் – 100 கிராம், உருளைக்கிழங்கு - 2 , பூண்டு - 2 , இஞ்சி -கட்டைவிரல் அளவு, மசாலாப்பொடி - 1/2 ஸ்பூன், கரம் மசாலா பொடி 1/4 ஸ்பூன்,
முந்திரிப் பருப்பு - 2 (பொடியாக நறுக்கியது) ,கிஸ்மிஸ் - 10 , உப்பு - தேவையான அளவு, சோள மாவு - தேவையான அளவு.
கறி தயாரிக்க
பெரிய வெங்காயம் - 1 , தக்காளி - 3 ,மசாலா பொடி - 2 ஸ்பூன்,கரம் மசாலா பொடி - 1 ஸ்பூன், இஞ்சி -கட்டை விரல் அளவு, பூண்டு - 4 ,முந்திரிப் பருப்பு - 7, கசகசா - 1 1/2 ஸ்பூன், கொத்தமல்லி - ஒரு கொத்து, ப்ரெஷ் கிரீம் -5 ஸ்பூன், சர்க்கரை - 1 ஸ்பூன், கடலை எண்ணெய் – தேவையான அளவு, உப்பு – தேவையான அளவு.
தாளிக்க
நல்லெண்ணெய் – 5 ஸ்பூன், மிளகு – ஒரு ஸ்பூன், சீரகம் 1/4 ஸ்பூன், பட்டை சிறிதளவு, கறிவேப்பிலை – 4 கீற்று, ஏலக்காய் – 2 , கிராம்பு – 4 , பிரிஞ்சி இலை – 1.
செய்முறை
உருளைக்கிழங்கை அவித்து தோல் உரித்து மசித்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பன்னீரை துருவிக் கொள்ள வேண்டும்.
இஞ்சி, பூண்டு பேஸ்ட் அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். முந்திரிப்பருப்பு மற்றும் கசகசாவை ஒரு பாத்திரத்தில் போட்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து ஆற விட்டு, பின் தண்ணீரை வடித்து விட வேண்டும். வேக வைத்த கசகசா மற்றும் முந்திரி பருப்பை மிக்சியில் அரைத்துக் கொள்ள வேண்டும்.
பெரிய வெங்காயம் மற்றும் தக்காளியை சதுர துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். மல்லி இலை மற்றும் கறிவேப்பிலையை நறுக்கி கொள்ள வேண்டும்.
கடாயில் மூன்று ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து அதில் மிளகு, சீரகம்,கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். பின் நறுக்கிய வெங்கயாத்தை சேர்த்து வதக்க வேண்டும்.
பின் இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்க வேண்டும். இதனுடன் வெட்டி வைத்துள்ள தக்காளியை சேர்த்து நன்கு வதக்கியவுடன், மசாலா பொடி, கரம் மசாலா பொடி சேர்த்து வதக்க வேண்டும்.
பின் அரைத்து வைத்துள்ள முந்திரி, கசகசாவை இதனுடன் சேர்த்து பின் இதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும். இது கொதித்து கெட்டியானதும் இதை ஆற விட வேண்டும்.
மீண்டும் சிறிது வெங்காயம், தக்காளியை வதக்கி ஆறியதும் மிக்சியில் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
துருவிய பனீரை வாயகன்ற பாத்திரத்தில் போட்டு, அதில் மசித்த உருளைக்கிழங்கை சேர்க்க வேண்டும். இதனுடன் இஞ்சி, பூண்டு விழுது, மசாலா பொடி, கரம் மசாலா பொடி, உடைத்த முந்திரித்துண்டுகள், தேவையான உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
இந்த கலவையை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும். இந்த உருண்டையின் நடுவில் கிஸ்மிஸ் பழம் ஒன்றை வைத்து உருட்டிக் கொள்ள வேண்டும். உருண்டைகளை சோள மாவில் லேசாக பிரட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி நன்றாக காய்ந்ததும், அதில் ஒவ்வொரு உருண்டைகளாக சேர்க்க வேண்டும். அடுப்பை மிதமான தீயில் வைத்து உருண்டைகளை பொன்னிறமாக பொறித்து எடுக்க வேண்டும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, அதில் அரைத்த வெங்காய, தக்காளி விழுதை சேர்த்து ஒரு கொதி விட வேண்டும், பின் தீயை குறைத்து விட்டு, அதில் வெள்ளை சர்க்கரையை சேர்த்து கிளறவும்.
இதனுடன் ப்ரஷ் கிரீமில் பாதியைச் சேர்த்துக் கிளறி, இதனுடன், நறுக்கிய கொத்த மல்லி இலையைத் தூவி கிளற வேண்டும். முந்திரி கசகசா சேர்த்து கொதிக்க வைத்துள்ள கலவையையும் இதனுடன் சேர்த்து விட வேண்டும். பின் பொரித்து வைத்துள்ள கோப்தா உருண்டைகளை இந்த கறியில் சேர்த்து, மீதமுள்ள ப்ரஷ் கிரீமைச் சேர்க்க வேண்டும். அவ்வளவு தான் சுவையான மலாய் கோப்தா தயார்.