குழந்தை பிறந்ததற்கு பிறகு பெரும்பாலான பெண்களுக்கு உடல் பருமனாகி தோற்றம் மாறி விடுகிறது. பிரசவத்திற்கு பிறகு பருமனான உடலை எப்படி குறைப்பது என தெரியாமல் பெண்கள் மருத்துவர்களையும், ஊட்டச்சத்து நிபுணர்களையும் அணுகி வருகின்றனர்.
ஒவ்வொரு பெண்ணிற்கு அவரது திருமண வாழ்வில் குழந்தை என்பது முக்கியமான ஒரு பகுதியாக உள்ளது. குழந்தை பிறப்பது உடலும், மனமும் சார்ந்து இருப்பதால் பெண்கள் அதிகமான பிரச்சனையை சந்தித்து வருகின்றனர். பிரசவத்திற்கு பிறகு ஒவ்வொருவரின் உடல் மற்றும் மனதை பொருத்து அவர்களின் உடலமைப்பு தோற்றத்தில் மாற்றம் ஏற்படுகிறது. சில பெண்களுக்கு பிரசவத்திற்கு முன்பு எடுத்துக்கொண்ட ஊட்டச்சத்து மருந்துகள் மற்றும் உணவு முறைகளால் உடல் எடை கூடுகிறது.
கர்ப்பம் தரித்ததில் இருந்து பிரசவம் வரை ஒவ்வொரு பெண்ணிற்கும் சராசரியக 10 முதல் 12 கிலோ வரை உடல் எடை கூடும். அதில், குழந்தையின் எடையும் அடங்கும். பிரசவத்திற்கு பிறகு விரிந்து குழந்தையை தாங்கி இருந்த கர்ப்பப்பை காலியாக இருப்பதால், அதில் கொழுப்புகள் சேர்ந்து சிலருக்கு தொப்பை போட்டுவிடலாம். பிரசவத்திற்கு பிறகு முன்பு இருந்ததை விட சிலருக்கு 5 முதல் 6 கிலோ வரை எடை அதிகரித்தே காணப்படும். பிரசவ காலத்தில் ஹார்மோன் மாற்றம், உடல் எடை அதிகரிப்பு, மனச்சோர்வு, வலி, பாலூட்டுதல், குழந்தையை பராமரித்தல் உள்ளிட்ட காரணங்களால் பெண்களின் இயல்பு நிலை மாறி அவர்களது உடலில் மாற்றம் ஏற்படுகிறது.
இந்த காரணங்களால் பிரசவத்திற்கு பிறகு எளிதில் பெண்களுக்கு எளிதில் உடல் எடை அதிகரித்து விடுகிறது. அவ்வாறு உடல் எடை அதிகரிப்பதை அலட்சியமாக விடாமல், தனது உடலின் மீது பெண்கள் கவனம் செலுத்துவது அவசியமாகிறது. குழந்தை, குடும்பம், வேலை என நேரத்தை செலவிட்டாலும் தனது உடலை ஆரோக்கியமாக பார்த்துக்கொள்ள பெண்கள் முயற்சி செய்ய வேண்டும்.
பிரசவத்திற்கு பிறகு அதிகரித்த உடல் எடையை குறைக்க உணவுகளில் டயட் கடைப்பிடிப்பது, உடற்பயிற்சி செய்ய ஜிம்மிற்கு செல்வது என பெரும்பாலான நடுத்தர குடும்ப பெண்களால் முடியாது. அவர்கள் எளிதில் வீட்டில் இருக்கும் சமையல் பொருட்களை வைத்தே தனது உடலை கட்டுக்கோப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்கலாம். அப்படிப்பட்ட அருமருந்தான 5 பொருட்களின் நன்மைகளை தெரிந்து கொள்வோம்.
1. மஞ்சள்
அனைவரது வீட்டில் மஞ்சள் பயன்படுத்தப்படாமல் இருக்கவே முடியாது. மஞ்சள் இல்லாத சமையல் முழுமை அடையாது. மஞ்சள் மூலிகை பொருள் என்பதால் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. உடலில் ஏற்படும் வீக்கம், காயம் உள்ளிட்ட நோய்களை குணப்படுத்தும் திறன் பெற்றது. பழங்கால மருத்துவத்தில் மஞ்சளுக்கு என தனி இடம் உண்டு. நினைவாற்றலை அதிகரிக்க கூடியது. இப்படி பல மருத்துவ பயன்களை கொண்ட மஞ்சள் தூளை ஒரு டம்ளர் பாலில் கலந்து, அதனுடன் சிறிது மிளகு தூளை கலந்து இரவு படுக்க செல்லும் முன்பு பெண்கள் குடிக்கலாம். மஞ்சள் கலந்த பாலை குடித்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் குறைக்கப்படும் என கூறப்படுகிறது.
2.வெந்தயம்
மருத்துவ பலன்கள் அதிகம் கொண்ட வெந்தயம் பசியை கட்டுப்படுத்த கூடியது. சர்க்கரை நோய்க்கு சிறந்தது. கர்ப்ப காலத்தில் அதிகளவில் பசி ஏற்படுவது வழக்கம். அதனால், சிலர் எப்பொழுதும் ஏதாவது சாப்பிட்டு கொண்டிருப்பார்கள். வெந்தயம் பசி தூண்டுவதை கட்டுப்படுத்த கூடியது என்பதால் அதை உணவில் சேர்த்து கொள்ளலாம். இரவில் ஒரு ஸ்பூன் வெந்தயத்தை தண்ணீரில் ஊற வைத்து, காலை எழுந்ததும் அதை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடலுக்கு மிகவும் நல்லது என கூறப்படுகிறது
3.பெருஞ்சீரகம்
பெருஞ்சீரகம் செரிமானத்தை தூண்ட செய்வது. மதியம் மற்றும் இரவு உணவுக்கு பிறகு ஒரு ஸ்பூன் பெருஞ்சீரகத்தை வாயில் போட்டு மென்று சாப்பிடலாம். அப்படி செய்தால், சாப்பிட்ட உணவுகள் செரிமானம் அடைந்து விடும். உடலில் தேவையற்ற கொழுப்புகள் தங்காது என கூறப்படுகிறது
4.இஞ்சி
மருத்துவ குணம் நிறைந்த ஒரு பொருள் தான் இஞ்சி. பிரசவத்துக்கு பிறகு செரிமான பிரச்சனைகள் ஏற்படுவது இயல்பு. உடலில் செரிமானத்தை தூண்டவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் இஞ்சியை எடுத்து கொள்ளலாம். காலை, மாலை குடிக்கும் டீயில் ஒரு துண்டு இஞ்சியை சேர்த்து கொள்ளலாம் என கூறப்படுகிறது
5. எலுமிச்சை
எலுமிச்சையில் இருந்து விட்டமின் -சி மற்றும் சிட்ரிக் ஆசிட் உடலை சுறுசுறுப்புடன் வைத்திருகக் உதவும். எலுமிச்சையை உணவில் எடுத்து கொண்டால் உடலில் சேர்ந்த்துள்ள தேவையற்ர கொழுப்பை கரைத்து விடும். ஒரு டம்ளர் நீரில் எலுமிச்சை சாற்றை விட்டு, அதனுடன் சப்ஜா விதையை தூவி குடித்து வரலாம் என கூறப்படுகிறது
இந்த ஐந்து பொருட்களிலும் தினசரி உணவில் பயன்படுத்தி வந்தால் பிரசவத்திற்கு பிறகு பெண்களின் உடலில் நோய் எதிர்ப்பு திறன் அதிகரித்து ஆரோக்கியமாக இருக்கலாம் என ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்
பொறுப்புத்துறப்பு : இந்த உள்ளடக்கம் பொதுவான தகவல்களை உள்ளடக்கியது. இது மருத்துவ ரீதியான அறிவுரையோ, கருத்தோ அல்ல. தனிப்பட்ட உடல்நலம் சார்ந்த தகவல்களுக்கு மருத்துவரை அணுகுவது மட்டுமே சரியான தீர்வாகும். ஏபிபி பொதுத் தகவல்களுக்கான பொறுப்பை ஏற்காது.