போர்க் விண்டலூ என்பது இந்தோ போர்சுகீஸ் உணவாகும். போர்க் விண்டலூவில் இருக்கும் விண் என்ற சொல் வைன் அல்லது வினிகரை குறிக்கும். இது கோவாவில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு உணவாக உள்ளது. பன்றி இறைச்சியில் புரத சத்து அதிகமாக உள்ளது. அதுமட்டுமின்றி அதில் சிங், செலினியம், விடமின் பி6, விடமின் பி12 ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கு தேவையான சத்துக்களை வழங்கும் என கூறுகின்றனர். பன்றி இறைச்சியில் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகம்.


போர்க் விண்டலு செய்ய தேவையான பொருட்கள்:



  • பன்றி இறைச்சி

  • காய்ந்த சிவப்பு மிளகாய்

  • மல்லி

  • சீரகம்

  • பட்டை

  • கிராம்பு

  • ஏலக்காய்

  • மிளகு

  • கடுகு

  • வெந்தயம்

  • இஞ்சி

  • பூண்டு

  • மிளகாய்

  • மஞ்சள் தூள்

  • விநிகர்

  • வெங்காயம்

  • தேங்காய் எண்ணெய்

  • உப்பு


போர்க் விண்டலு செய்முறை:


முதலில் பன்றி இறைச்சியை தேவையான அளவு எடுத்துக்கொண்டு நன்கு சுத்தம் செய்ய வேண்டும். பின் போர்க்கை மேரினேட் செய்ய பிரத்யேக மசாலா ஒன்று தயார் செய்ய வேண்டும். ஒரு வானலியில் எண்ணெய் சேர்க்காமல் (1/2 கிலோ போர்க் விண்டலூவிற்கான அளவு) 5 முதல் 6 காய்ந்த மிளகாய், ½ டீஸ்பூன் கடுகு, ½ டீஸ்பூன் வெந்தயம், ½ ஸ்பூன் மல்லி, மிளகு காரத்திற்கு ஏற்றவாறு, பட்டை, 4 கிரம்பு, 3 ஏலக்காய், ½ ஸ்பூன் சீரகம் ஆகியவற்றை நிறம் மாறும் வரை வறுத்து ஆர வைக்க வேண்டும். பின் அதே வானலியில் தேங்காய் என்ணெய் 2 ஸ்பூன் சேர்த்து அதில் 8 பல் பூண்டு, ஒரு இன்ச் அளவு இஞ்சி ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும். பின் அதில் காரத்திற்கு ஏற்றது போல் பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். நன்கு வதங்கிய பின் இந்த கலவையும் தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.


மிக்ஸி ஜாரில் ட்ரை ரோஸ்ட் செய்த மசாலா பொருட்களை சேர்த்து பொடியாக அரைத்து எடுக்க வேண்டும் பின் அதே மிக்ஸி ஜாரில் மசாலா பொடியுடன் 2 ஸ்பூன் அளவு வயிட் விநிகர் மற்றும் வதக்கி வைத்த இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் சேர்த்து மையாக அரைக்க வேண்டும். இந்த மசாலா பேஸ்டை போர்க் இறைச்சியுடன் சேர்த்து 2 மணி நேரம் மேரினேட் செய்ய வேண்டும். பின் மேரினேட் செய்த இறைச்சியை குக்கரில் சிறிது அளவு தண்ணீர் சேர்த்து 4 முதல் 5 விசில் வரை வேக வைக்க வேண்டும். குக்கரில் பிரஷர் முழுமையாக இறங்கிய உடன் தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். பின் ஒரு கடாய் அல்லது மண் சட்டியில் தேங்காய் எண்ணெய் ஒரு குழி கரண்டி சேர்த்து சூடானதும் பொடியாக நறுக்கி வைத்த இரண்டு பெரிய வெங்காயம், ½ டீஸ்பூன் மஞ்சள் தூள், ½ ஸ்பூன் காஷ்மீர் மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்க வேண்டும். நன்கு வதங்கிய பின் வேகவைத்த இறைச்சியை அப்படியே சேர்த்து 10 நிமிடம் கொதிக்கவிட்டால் சுண்டி இழுக்கும் போர்க் விண்டலு தயார். பன்றி இறைச்சி பிடிக்காதவர்கல் பீப், மட்டன் அல்லது சிக்கனை பயன்படுத்தி சமைக்கலாம்.