தலைவலி, டென்ஷன், சந்தோஷன், திடீர் பசி இப்படி பல நேரங்களில் மனிதர்களுக்கு முதலில் நினைவுக்கு வருவது காபி தான். உலகம் முழுவதுமே காபி அருந்தும் பழக்கம் பரந்து விரிந்து கிடக்கிறது. ஆனால், காபியை ஒவ்வொரு நாட்டில் ஒவ்வொரு மாதிரி பருகிறார்கள். அதை அறிந்துகொள்வதும் ஒரு சுவாரஸ்யம் தான்.


ஸ்வீடன்: 
ஸ்வீடன் நாட்டில் காபி குடிப்பதற்கு என ஒரு கலாச்சாரம் வைத்துள்ளனர். போகிற போக்கில் ஒரு காபியை குடிப்போரைக் காண முடியாது. ஒரு இடைவேளை நேரத்தில் குழுவாக அமர்ந்து பேசிக் கொண்டே காபி அருந்துவதை அவர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்த கலாச்சாரத்திற்கு ஃபிகா என பெயர் வைத்துள்ளனர்.




இத்தாலி: 
இத்தாலி நாட்டில் காபி குடிப்பதை பூஜையைப் போல் செய்கின்றனர். காப்பசினோவை ஒரு போதும் இரவில் அருந்த மாட்டார்கள். காலை முதல் மாலை வரை தான அங்கு காப்பசினோ அருந்தப்படுகிரது. இல்லாவிட்டால் பகல் பொழுதில் எஸ்ப்ரஸோ அருந்துகின்றனர். எஸ்ப்ரஸோ என்றால் வேகமாக என்று அர்த்தம். அதனை ஆற அமர்ந்து குடிக்க மாட்டார்கள். நின்றுகொண்டே அருந்துகிறார்கள். பகல் பொழுதில் சிறு கோப்பைகளில் கிடைக்கும் பாய்ஸன் அருந்துகின்றனர். அட விஷம் இல்லீங்க.. காபியின் பெயர் அது.


துருக்கி:
துருக்கி நாட்டில் காபிக்கு ஒரு கவிதையே வைத்துள்ளனர். ஒரு கோப்பை காபி நரகத்தைப் போல் கருமையாக, சாவைப் போல் கடினமாக, காதலைப் போல் இனிமையாக இருக்க வேண்டும் என்று கூறுகின்றனர். அடேங்கப்பா ஒரு கோப்பை காபிக்கா இத்தனை கற்பிதம் என நம்மை வாய்பிளக்க வைக்கிறார்கள் துருக்கியர்கள். அவர்கள் காபியை வெண்கலப் பாத்திரத்தில் தயாரிக்கிறார்கள். அதனை கெஸ்வே என அழைக்கிறார்கள். சற்றே கசப்பாக இருக்கும் இந்த காபியை துருக்கி இனிப்புடன் சேர்ந்து அருந்துகின்றனர்.


எதியோபியா:
ஆப்பிரிக்காவின் எதியோபியா தான் காபியின் தாய்நாடு. அராபிகா என்ற செடியில் இருந்து தான் காபி கொட்டைகள் எடுக்கின்றனர். அங்கே ஜெபேனா எனப்படும் மண் குவளையில் தான் காபியை தயாரிக்கின்றனர். மூன்று விதமாக காபியை பரிமாறுகிறார்கள். முதல் முறை அபோல் எனப்படுகிறது. இது மிகமிக ஸ்ட்ராங் காபி. அடுத்தது டோனா. மூன்றாவது பராக்கா. இவை ஒவ்வொன்றும் அதன் ஸ்ட்ராங் தன்மையில் வேறுபடுகின்றன.




மெக்சிகோ:


மெக்சிகோவில் காபியை களிமண் கோப்பையில் தயாரிக்கின்றனர். காபியை காலையில் எழுந்தவுடன் மட்டுமல்ல தூங்கும் முன்னரும் குடிக்கின்றனர். காபியை கஃபே டே ஓலா என அழைக்கின்றனர். ஓலா என்றால் களிமண் கோப்பை என்ற அர்த்தம். காபியில் நாட்டுச் சர்க்கரை சேர்த்தும், லவங்கப்பட்டை சேர்த்தும் அருந்துகின்றனர்.


அயர்லாந்து:


அயர்லாந்து நாட்டில் காபியை ஆல்கஹாலுடன் சேர்த்து குடிக்கின்றனர். சூடான காபியில் கொஞ்சம் விஸ்கி, சர்க்கரை, விப்ட் க்ரீம் சேர்த்து அருந்துகின்றனர். 1940களில் தான் இந்த முறையை பழக்கத்துக்கு கொண்டு வந்துள்ளனர். அயர்லாந்தின் மேற்கு கரையில் உள் ஃபாய்னஸிலிருந்து நியூஃபவுண்ட்லாண்ட் நோக்கிச் சென்ற கப்பல் ஒன்று பாதி வழியிலேயே திரும்ப நேர்ந்தது. அப்போது பயணிகள் சோர்ந்து போயினர். உடனே கப்பலில் இருந்த தலைமை சமையல்காரரான ஜோ ஷெரிடன் காபியில் விஸ்கியை சேர்த்து புதுமையான பானம் உருவாக்கினர். பயணிகள் உற்சாகமடைந்தனர். அப்படித்தான் காபியில் விஸ்கியை அயர்லாந்து நாட்டு மக்கள் வரவேற்றுப் பழக்கமாக்கிக் கொண்டனர்.




வியட்நாம்


ஆசிய நாடான வியட்நாம் மக்கள் நாள்தோறும் காபி அருந்துகின்றனர். காலை, மதியம் என்றெல்லாம் அவர்களுக்குக் கண்க்கில்லை. அலுமினியம் அல்லது ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் பாத்திரத்தில் காபியை அவர்கள் செய்கின்றனர். ரோபஸ்டா காபி பீன்ஸைத் தான் பயன்படுத்துகின்றனர். அதிலிருந்து கெட்டியான டிக்காஷன் தயார் செய்கின்றனர். தேவைக்கேற்ப சர்க்கரை, பால் சேர்த்து அருந்துகின்றனர். பெரும்பாலும் கடுங்காப்பி அருந்துகின்றனர். பால் என்றால் கன்டன்ஸ்ட் மில்க் தான் சேர்க்கின்றனர்.