குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் ஏதேனும்  சூடாக, மொறுமொறுன்னு சாப்பிட கொடுக்க வேண்டும் என்றால் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த நூடுல்ஸில் பக்கோடா செய்துகொடுக்கலாம்.


வீடுகளில் உள்ள பெரும்பாலான குழந்தைகள் மாலை  நேரம் என்றாலே ஏதாவது ஸ்நாக்ஸ் வேண்டும் என்று அடம்பிடிப்பார்கள். குழந்தைகளிக் அழுகையை நிறுத்த அவர்களது அம்மாக்கள் என்ன தான் செய்துகொடுத்தாலும், வேறு எதுவும் இல்லையா? என்ற கேள்வி தான் அதிகளவில் இருக்கும். எனவே வித்தியாசமாக ஏதாவது ரெசிபி டிரை பண்ணனும்னு நினைச்சா, குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த நூடுல்ஸில் பக்கோடா செய்துகொடுங்கள்.


ஏற்கனவே நூடுல்ஸ் என்றாலே குழந்தைகள் விரும்பிச் சாப்பிடும் போது, அதனைப்பயன்படுத்தி மொறு மொறுன்னு நூடுல்ஸ் பக்கோடா செய்து பாருங்கள்.. இது சற்று வித்தியாசமாக இருந்தாலும், சுவையாகவும் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்ததுமாக இருக்கும். எனவே இந்த ரெசிபியை இப்படி  செஞ்சு பாருங்களேன். உங்களது குழந்தைகள் மீண்டும் மீண்டும் உங்களிடம் கேட்பார்கள்.. இதோ அந்த  ரெசிபி டிப்ஸ் உங்களுக்காக…



மொறுமொறு நூடுல்ஸ் பக்கோடா செய்யும் முறை:


தேவையான பொருள்கள்:


நூடுல்ஸ் பாக்கெட் – ஒன்று


மேகி மசாலா - 1
பெரிய வெங்காயம் - 1
குடைமிளகாய் - பாதி
முட்டை கோஸ் – உங்களது தேவைக்கு ஏற்ப


பச்சை மிளகாய் - 1
கொத்தமல்லி - தேவையான அளவு
கடலை மாவு - 4 டேபிள் ஸ்பூன்
சீரகப் பொடி, மிளகாய் பொடி, ரவை, உப்பு - தேவையான அளவு





செய்முறை:


முதலில் வெங்காயம், குடை மிளகாய், முட்டை கோஸ், பச்சை மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்

இதனையடுத்து கடாயில் தண்ணீர் ஊற்றி சூடானதும், அதனுடன் மேகி மசாலாவை சேர்க்க வேண்டும். இதோடு நூடுல்ஸ் சேர்த்து வேக வைத்து தனியாக வைக்க வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயம், குடை மிளகாய், பச்சை மிளகாய், கொத்த மல்லி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகத்தூள் போன்று வதக்கிக்கொள்ள வேண்டும். இதோடு இரண்டு டீஸ்பூன் ரவை, உப்பு சேர்த்துக்கொள்ள வேண்டும்.


சிறிது வெந்ததும் வேக வைத்த நூடுல்ஸை சேர்த்து நன்றாக பிசைந்துக்கொள்ள வேண்டும். இந்த கலவையுடன் கடலை மாவு சேர்த்து வடை செய்வதற்குப் பிசைவது போல நன்றாக பிசைந்துகொள்ள வேண்டும். இறுதியாக ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நன்றாக சூடானதும், கலவையை உருண்டையாக பிடித்து வறுத்து எடுத்தால் சுவையாக நூடுல்ஸ் பக்கோடா ரெடியாகிவிடும்.