நம்முடைய இந்தியாவைப் பொறுத்தவரை பருவ காலங்களுக்கு ஏற்ற வகையில் உணவெடுத்துக் கொள்ள வேண்டும் என குழந்தை பருவத்தில் இருந்தே பழக்கப்படுத்தப்படுகிறோம். ஆனால் சில சமையல் பொருட்கள் அனைத்து காலத்திலும் பயன்படக்கூடியவை. எனினும் பருவ காலத்தைப் பொறுத்து அதன் அளவை சரியாக எடுக்க வேண்டும். அப்படியாக குளிர்காலத்தில் அதிகமாக உப்பு சாப்பிடுவது எலும்புகள் பலவீனமடைதல், சிறுநீரக பாதிப்பு, தோல் பிரச்சினைகள், அதிகரித்த இரத்த அழுத்தம் மற்றும் எடை அதிகரிப்பு போன்ற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என சொல்லப்படுகிறது. அதனைப் பற்றிக் காணலாம். 

Continues below advertisement

மழைக்காலம், குளிர் போன்ற இதமான நேரங்களில் மக்கள் வெளியில் சாப்பிட அதிகம் விரும்புகிறார்கள். குறிப்பாக சூடாக, சுவையுடன் விதவிதமான உணவுகளை முயற்சிக்கிறார்கள். சிப்ஸ், சமோசாக்கள் மற்றும் சூடான பக்கோடாக்கள் போன்ற வறுத்த உணவுகள் அதிகமாக விற்பனையாவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இத்தகைய உணவுகள் பெரும்பாலும் உப்பு நிறைந்தவை. இவை ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். பல நோய்களுக்கு ஆளாக்கும் இந்த விஷயத்தில் நாம் சரியாக செயல்பட வேண்டும் என சொல்லப்படுகிறது. 

Continues below advertisement

இந்திய உணவு வகைகளில் உப்பு மிக முக்கியமான ஒன்றாகும். உப்பில்லாத பண்டம் குப்பையிலே என்ற நிலையில் நாம் அதனை அளவுக்கு மீறி சில சமயங்களில் எடுக்கிறோம். அதிகமாக உப்பு சாப்பிடுவது எலும்புகளை பலவீனப்படுத்தும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். இது  உடலில் கால்சியம் குறைபாட்டை ஏற்படுத்துகிறது. உணவில் அதிக உப்பு உட்கொள்வது உங்கள் சிறுநீரகங்களில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். 

சிறுநீரகங்கள் சோடியத்தை வடிகட்ட கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். உப்பு அதிகமாக சேர்த்தால் அது ஆரோக்கியத்தை சேதப்படுத்துகிறது. மேலும் குளிர்காலத்தில் நமது சருமம் வறண்டு அதிகமாக உப்பு சாப்பிடுவதால் உடலில் உள்ள நீர் சமநிலையை சீர்குலைக்கிறது. இதனால் முகத்தில் சுருக்கங்கள் விரைவாக தோன்றும்.

அதிக உப்பு உட்கொள்வது உங்கள் இதயத்தைப் பாதிக்கும் எனவும் சொல்லப்படுகிறது. இது இரத்தத்தில் உள்ள நீரின் அளவை அதிகரித்து செல்கள் மீதான அழுத்தத்தை அதிகரிக்கிறது. எனவே குளிர்காலத்தில் பக்கோடா, சமோசா, சாட் போன்ற வறுத்த உணவுகள் அதிகமாக உட்கொள்வதை தவிருங்கள். குளிர்காலத்தில் உடல் செயல்பாடு குறைவதாலும், உப்பு அதிகரிப்பதாலும் எடை அதிகரிப்பும் இருக்கும்.குளிர்காலத்தில் தாகம் குறைவாக இருக்கும் நிலையில் உடல் செயல்பாடுகள் மந்தம் ஏற்படுகிறது. அதிகமாக உப்பு சாப்பிடுவதால் உடலில் நீர் தேங்கி  முகம், கைகள் மற்றும் கால்களில் வீக்கம் ஏற்படுகிறது.

(இவை உடல் நல குறிப்புகள் அடிப்படையில் சொல்லப்பட்டுள்ளது. ஏதேனும் சந்தேகம் இருந்தால் உடனடியாக உங்கள் மருத்துவரை தொடர்பு கொள்ளுங்கள்)