பால்... குழந்தையின் முதல் உணவு. தாய்ப்பாலில் தொடங்கும் மனித உணவு வயதிற்கும் வாயின் ருசிக்கும் ஏற்ப மாறிக் கொண்டே இருக்கலாம். ஆனால் திரவ உணவு என்று வரும்போது பெரும்பாலானோரின் முதல் பால் அல்லது பால் சார்ந்த பானங்கள் தான்.


பாலில் கால்சியம், வைட்டமின்கள், மினரல்கள் இருக்கின்றன. குழந்தைகள் முதல் முதியவர் வரை அனைவருக்கும் பாலை பரிந்துரைக்கும் நிபுணர்கள் அசைவ உணவுடன் பால் உட்கொள்வதை பெரும்பாலும் யாரும் பரிந்துரைப்பதில்லை.


ஆயுர்வேத நிபுணர் சொல்வதென்ன?


இது குறித்து ஆயுர்வேத நிபுணர் டாக்டர் நிகிதா கோலி கூறுவது என்னவென்று பார்ப்போம். சில உணவுகளை சேர்த்து உண்பதால் ஜீரண மண்டலத்தில் அசவுகரியம் ஏற்படும் என்பது உணவு அறிவியலில் நிரூபிக்கப்பட்ட உண்மை எனக் கூறுகிறார் நிகிதா.


அசைவ உணவை உண்ட பின்னர் பால் அருந்தினால் அது ஜீரண மண்டலத்தில் உபாதைகள் ஏற்படுத்துவதுடன் சொரியாஸிஸ், விடிலிகோ போன்ற சரும பாதிப்புகளையும் ஏற்படுத்துமாம். ஆகையால் அசைவ உணவுடன் பால் அருந்துவதை நிச்சயமாக தவிர்க்க வேண்டும் என்று கூறுகிறார் ஆயுர்வேத நிபுணர் டாக்டர் நிகிதா கோலி.




இன்ஸ்டாகிராம் வீடியோ:


ஆயுர்வேத நிபுணர் டாக்டர் நிகிதா கோலி அண்மையில் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவைப் பகிர்ந்தார். அதில் இது பற்றி அவர் விரிவாகப் பேசியுள்ளார். வெவ்வேறு ஜீரண சக்தி தேவைப்படும் உணவுகளை நாம் வெவ்வேறு நேரத்தில் தான் உண்ண வேண்டும். அதேபோல் பகலில், இரவில் உண்ணத்தக்க உணவு எவை என்பது பகுப்பாய்ந்து உண்ண வேண்டும். அப்படிச் செய்தால் உணவால் வரும் ஒவ்வாமை, அரிப்பு, வயிற்று உபாதைகள் என பலவற்றிலும் இருந்து தப்பிக்கலாம் என அவர் கூறுகிறார். கபம், வாதம், பித்தம் ஆகிய மூன்று தோஷங்களின் அளவு மிகுந்தாலும், குறைந்தாலும் தொந்தரவே. இவை சரிசமமாக இருக்கும் அளவில் வகையில் தான் நம் உணவுப் பழக்கவழக்கமும் இருக்க வேண்டும்.


சிக்கனும் பாலும் ஓகேவா?


இவ்வளவு சொல்லியும் கூட சிலர் சிக்கனும் பாலும் சேர்த்து சாப்பிடலாமா? எனக் கேட்கக் கூடும். கோழி இறைச்சியில் அதிகப்படியான புரதம் உள்ளது. பாலில் அதிகப்படியான கால்சியம் உள்ளது. இவை இரண்டையும் ஒன்றாக உட்கொண்டால் உடலில் நச்சு உருவாகும். அது உடலில் நீண்ட காலம் தங்கலாம். இவை இரண்டு ஜீரணம் ஆகாமல் இருக்கலாம். இதனால் வயிற்றுவலி, குமட்டல், உப்புசம், வாயுத் தொல்லை, வாய் துர்நாற்றம், மலச்சிக்கல் ஆகியன ஏற்படலாம். ஒருவேளை நான் அசைவம் சாப்பிட்டுவிட்டேன் ஆனால் இரவில் நான் பால் அருந்தாமல் இருக்க முடியாது என்று நினைப்பவர்கள் குறைந்தது 2 மணி நேர இடைவெளிக்குப் பின்னர் பால் எடுத்துக் கொள்ள வேண்டும்.