உடல் எடையைக் குறைக்க நம்மில் பலரும் செய்யும் முதல் விஷயம் உணவின் அளவைக் குறைப்பது. சிலர் 3 வேளைக்குப் பதில் ஒரு வேளை சாப்பிடத் தொடங்குவார்கள். சிலர் வெறும் ப்ரோட்டீன் டயட், சிலர் வெறும் பழங்கள், காய்கறிகள் டயட் என தங்கள் இஷ்டத்துக்கு அறைகுறையாக அங்குமிங்கும் படித்ததை, கேட்டதை வைத்து ஏதோ முடிவு செய்துவிடுவார்கள். விளைவு உடல் சோர்வு, ரத்த சோகை, இன்னும் பல உபாதைகள் வந்து சேரும்.


உடல் எடையைக் குறைக்க உணவை தவிர்க்க வேண்டியதில்லை. மாறாக ஆரோக்கியமான சரிவிகத சத்து நிறைந்த உணவை சாப்பிடுவதோடு உடற்பயிற்சிகள் செய்தால் போதும். அப்படியான உணவுகள் அடங்கிய பட்டியல் இதோ உங்களுக்காக..


காய்கறி ஹியூமஸ் சாண்ட்விச் (Veggies and Hummus sandwich)


வெஜ்ஜிஸ் அண்ட் ஹியூமஸ் சாண்ட்விச் என்பது மதிய உணவுக்கு நல்ல ஃபைபர் நிறைந்த உணவாகும். ஹியூமஸ் என்பது சமைத்து மசிக்கப்பட்ட கொண்டைக் கடலை, வெள்ளைப்பூண்டு, ஆலிவ் ஆயில், லெமன் ஜூஸ் ஆகியனவற்றுடன் சிறிது உப்பு சேர்த்து செய்யப்படும் ஒருவகை ஸ்ப்ரெட். இத்துடன் குடை மிளகாய், வெள்ளரி, லெட்யூஸ், வெங்காயம், தக்காளி ஆகியனவற்றை துண்டுகளாக்கி சாண்ட்விச் நடுவில் வைத்து உண்ணலாம். வயிறு நிறைவாகவும் இருக்கும். உடல் எடையும் அதிகரிக்காது.


ஓட்ஸ் கிச்சடி (Oats Khichdi)


ஓட்ஸ் கிச்சடி என்பது மிகவும் ஆரோக்கியமான உணவு வகையாகும். ஓட்ஸில் சிலர் கஞ்சி செய்து அருந்துவது உண்டு. சிலர் ஓட்ஸில் கிச்சடி செய்வது உண்டு. ஓட்ஸுடன் கொஞ்சம் பருப்பு, நறுக்கிய கேரட், வெங்காயம், காலிஃபளவர், தக்காளி, பீன்ஸ் ஆகியனவற்றை சேர்த்து சமைக்கலாம். வாசனைக்கு பூண்டும் சேர்த்துக் கொள்ளலாம்.


உப்புமா:


உப்புமா என்றால் பலருக்கும் எட்டிக்காய் போல் முகம் சுளிக்கும். ஆனால் உப்புமா செய்வதும் எளிதும். நார்ச்சத்தும் நிறைந்தது. உப்புமாவை பச்சைப் பட்டானி, கேரட், வெங்காயம் சேர்த்து செய்தால் நிறைவாக இருக்கும். பட்டானியில் புரதம் உள்ளது. இது கலோரி குறைவானது. மேலும் இதில் வைட்டமின் கே அண்ட் சி, மேன்கனீஸ் போன்ற சத்துகள் உள்ளன.


ஓட்ஸ் தோசை:


உடல் எடை குறைப்புக்கு முதலில் பரிந்துரைக்கப்படுவது கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளைக் குறைக்க வேண்டும் என்பதே. ஆகையால் வழக்கமான அரிசி மாவு தோசைக்கு பதில் ஓட்ஸ் மாவில் தோசை செய்யலாம். ஓட்ஸுடன் உளுந்தை சேர்த்து அரைத்து தோசை மாவு செய்து கொள்ளலாம். இரண்டையும் ஒன்றாகவே அரைத்துக் கொள்ளலாம். 10 முதல் 12 மணி நேரம் புளித்தால் போதும். ஓட்ஸ் தோசையுடன் சாம்பார், தேங்காய் சட்னி செய்து சாப்பிடலாம். உளுந்து இல்லாமலும் ஓட்ஸ் தோசை மாவு செய்யலாம். அதற்கான ரெஸிபி வீடியோ கீழே..



பேசன் சில்லா (Besan Chilla)


பேசன் சில்லா என்ற காலை உணவு உடல் எடை குறைப்புக்கு சிறந்த ரெஸிபி. இதை செய்யத் தேவையான பொருட்கள்: 1கப் கடலைமாவு
1டீஸ்பூன் சீரகம்
1/2டீஸ்பூன் மிளகாய்தூள்
1/4டீஸ்பூன் மஞ்சள்தூள்
1பொடியாக நறுக்கிய வெங்காயம்
1பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய்
சிறியதுண்டு இஞ்சி
உப்பு


கடலை மாவில் தேவைக்கேற்ப உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்தூள், சீரகம், வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி சேர்த்து கட்டியில்லாமல் தோசை மாவு பதத்தில் கரைத்து, அரை மணி நேரம் ஊறவைக்கவும். தோசை கல் சூடேறிய பின் கரைத்த மாவை தோசையாக ஊற்றி, மிதமான தீயில் எண்ணெய் சேர்த்து வேக வைத்து எடுக்கவும். 


இந்த ஐந்து உணவுகளௌம் செய்வது எளிது. சுவையும் ஆரோக்கியமும் நிறைந்தது.