’சமோசா’- ன்னா யாருக்குதான் பிடிக்காது. அதுவும் சூடான சமோசாவுடன் ஒரு க்ளாஸ் டீ.. அடடே.. அதுவும் சுவையான டீ-க்கான கடை கடையா அலைந்த கதைகள் நம்மிடம் இருக்கும், இல்லையா. அதுவும் சமோசா, டீ இரண்டுமே ருசியாக சாப்பிட்ட கதையை நாம மறக்க மாட்டோம்தானே! 


சமோசா, இருவரின் வாழ்கையையே மாற்றிவிட்டது என்று சொன்னால், நம்புவீங்களா? நம்பும்படியாகவே அவர்களின் கதையும் இருக்கிறது. சமோசா விற்பனை மூலம் ஒரு நாளை ரூ.12 லட்சம் வருமானம் கிடைப்பதாக சொல்றாங்க இந்த இளம் தம்பதியர்.


சமோசா விற்பனை மூலம் ஆண்டுக்கு 45 கோடி ரூபாய் வருமானம் ஈட்டி வரும் பெங்களூருவைச் சேர்ந்த காதல் ஜோடி. அவர்களின் வெற்றிக் கதை அனைவரையும் பிரம்மிப்பில் ஆழ்த்தியுள்ளது. இளம் தலைமுறையினர் தொழில் தொடங்குவதில் பெரிதும் ஆர்வமுடன் இருக்கின்றனர். அதற்கு இந்த நிதி சிங் மற்றும் ஷிகர் வீர் சிங் இருவரின் கதையும் சாட்சி. 


பணியாளர் டூ தொழில்முனைவோர் பயணம்:


நிதி சிங் மற்றும் ஷிகர் வீர் சிங்  இருவரும் கல்லூரில் காலத்தில் காதலித்துள்ளனர்.பின்னர், இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். நிதி பி.டெக் பட்டதாரி; ஷிகர் பயோடெக்னாலஜி படித்துள்ளார். கல்லூரி நாட்களிலேயே ஷிகருக்கு சமோசா பிசினஸ் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்திருக்கிறது. ஆனால், நிதி அவரை ஆய்வாளர் பணிக்கு செல்லுமாறு அறிவுரை செய்துள்ளார். அவரும் அப்படியே செய்துள்ளார். நிதியும் மருத்துவ நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்துள்ளார். இருவருக்கும் கை நிறைய சம்பளம் என்ற நிலையில், வேலை விட்டனர். அதற்கு காரணம் சமோசா விற்பனை செய்ய வேண்டும் என்பதுதான். 




ஷிகர் சமோசா வேண்டும் என்ற அழுத குழந்தையை பார்த்துள்ளார். இதனால் அவருள் இருந்த கனவு சிறகடிக்க தொடங்கியது. சமோசா பிசினஸ் செய்ய திட்டமிட்டார் ஹிகர். இவரோடு நிதியும் இணைந்தார். 


இருவரும் வேலை, தங்கள் கனவு வீடு உள்ளிட்ட பலவற்றை தொழிலுக்காக, சமோசா கடைக்காக விட்டுக்கொடுத்துள்ளனர். ஆம். ஐ.டி. நிறுவனங்கள் அதிகம் இருக்கும் சிலிக்கான் ஆஃப் வேலி, என்று சொல்லப்படுகிற மெட்ரோ சிட்டியான பெங்களூருவில் சமோசா கடை திறக்க திட்டமிட்டனர்.


பெங்களூருவில் உணவகம் திறப்பதற்காக, வாங்கி கொஞ்ச நாட்களேயான ரூ.80 லட்சம் மதிப்புள்ள ப்ளாட்டை விற்றனர். அந்த பணத்தை வைத்து சமோசா, டீ, ஸ்நாக்ஸ் கடை ஒன்றை திறந்துள்ளனர். இப்போது 40 கடைகள் அளவுக்கு வளர்ந்திருக்கிறது. சமோசா கிங் கடை மிகவும் பிரபலமாக இருக்கிறது. 


சமோசா கிங் கடையின் மெனு


இந்தியாவில் எல்லாருக்கும் பிடித்த ஸ்நாக்ஸ் என்றால் அது சமோசா. கடாய் பன்னீர் சமோசா, பட்டர் சிக்கன் சமோசா, என வகை வகையாக ருசியாக சமோசா விற்பனை செய்து வருகின்றனர்.ஒரு நாளைக்கு முப்பதாயிரம் சமோசாவிற்கு மேல் தயாரிப்பதாக சொல்கின்றனர். கனவுக்காக, வேலை விட்டு வந்தவர்கள் வெற்றிநடையோடு தொழிலில் முன்னேறி வருகின்றனர்.


சிங் சமோசா கடையின் வெற்றி கதை சமூக வலைதளங்களில் நெகிழ்ச்சியோடு பகிரப்பட்டு வருகிறது. 80 லட்சம் ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்ட கடை 40 கடைகளாக உயர்ந்துள்ளன. இவர்களின் நம்பிக்கை மற்றும் உழைப்பை அனைவரும் பாராட்டி வருகின்றனர். வாழ்த்துகள் காதல் பறவைகளே!