நம்மில் பெரும்பாலானோர் இளைமையான தோற்றத்தையே விரும்புவோம். வயதானவர்கள் கூட மேக்கப் செய்து, தங்களை நேர்த்தியாக காட்டிக் கொள்ளவே விரும்புகின்றனர். இளமையிலேயே வரும் இளநரை மன உளைச்சலை ஏற்படுத்துவதாக சொல்லப்படுகின்றது. இளநரைக்கு உணவு , மரபியல் உள்ளிட்ட பல காரணங்கள் உள்ளன. இளநரையை தடுக்க எந்த மாதிரியான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என பார்க்கலாம்.
இளநரைக்கு என்ன காரணம்?
மெலனின் உற்பத்தி குறைவது அல்லது இல்லாதது முடியின் இயற்கையான நிறத்தை இழக்க செய்வதாக சொல்லப்படுகின்றது. மரபியல், மன அழுத்தம், சுற்றுச்சூழல் காரணிகள், வாழ்க்கை முறை காரணிகள் போன்றவையும் முன்கூட்டிய நரையை ஏற்படுத்தும் என சொல்லப்படுகிறது. ஆனால் இவை எப்போதும் நம் கட்டுப்பாட்டில் இருக்காது. ஊட்டச்சத்துள்ள உணவை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம் என்கின்றனர் உட்டச்சத்து நிபுணர்கள்.
இளநரையை தடுக்க உதவும் 4 முக்கிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள்:
1. ஃபோலிக் அமிலம்
ஃபோலிக் அமிலம் இளநரையை தடுக்க உதவுவதாக சொல்லப்படுகின்றது. கீழ்க்கண்ட உணவுகளை எடுத்துக்கொள்வதன் மூலம் நம் உடலுக்குத் தேவையான ஃபோலிக் அமிலம் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.
அடர்ந்த இலை காய்கறிகள்: பாலக் கீரை, வெந்தய கீரை, கடுகு கீரைகள், போன்றவை எடுத்துக் கொள்ளலாம்.
பருப்பு வகைகள்: பீன்ஸ், கொண்டைக்கடலை, பருப்பு மற்றும் பட்டாணி வகைகளை சாப்பிடலாம்.
கொட்டைகள் மற்றும் விதைகள்: வேர்க்கடலை, பாதாம், சூரியகாந்தி விதைகள் மற்றும் பூசணி விதைகள் உள்ளிட்டவற்றை எடுத்துக் கொள்ளலாம்.
பழங்கள்: ஆரஞ்சு, திராட்சைப்பழம், எலுமிச்சை போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.
2. வைட்டமின் பி12:
வைட்டமின் பி12 சிவப்பு இரத்த அணுக்கள் மற்றும் மெலனின் உற்பத்திக்கு உதவுகின்றது என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள். முட்டையின் மஞ்சள் கருக்கள், பால் பொருட்களில் உள்ள வைட்டமின்கள் முடியின் நிறமிக்கு உதவுகின்றன.
3. தாமிரம்:
மெலனின் உற்பத்திக்கு தாமிரமும் முக்கியமானது என்று சொல்லப்படுகின்றது. இது எள், முந்திரி, பாதாம், முழு தானியங்கள் மற்றும் பிற உணவுப் பொருட்களில் உள்ளது. அசைவ உணவு உண்பவர்கள் இறைச்சிகள், மட்டி மற்றும் நன்னீர் மீன்களைத் தேர்வு செய்யலாம் என சொல்லப்படுகிறது.
4. துத்தநாகம்:
துத்தநாகம் மயிர்க்கால்கள் சேதத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள உதவுவதாக சொல்லப்படுகின்றது. புதிய முடி செல்கள் உற்பத்தியிலும் இது பங்கு வகிக்கிறது. பூசணி, சூரியகாந்தி, தர்பூசணி, கருப்பு எள் போன்ற விதைகளை உட்கொள்வது துத்தநாகத்தை தக்க வைக்க உதவும் என சொல்லப்படுகின்றது. மேலும் நீங்கள் உங்கள் உணவில் பிஸ்தா, பாதாம், உளுந்து போன்றவற்றையும் சேர்த்துக் கொள்வது உங்கள் முடி வளர்ச்சிக்கு நல்லது என சொல்லப்படுகின்றது.