பொதுவாக கீரைகளில் எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.அதிலும் பாலக்கீரையில்,போலிக் அமிலம் அதிகளவில் உள்ளதால்,கர்ப்பிணிகள் இதனை அதிகம் எடுத்துக் கொண்டால் நல்லது. குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் தாய்மார்களும்,இதனை சாப்பிட்டால், பால் அதிகம் சுரக்க உதவுகிறது.கண் பார்வை நன்றாக தெரிய இந்த கீரை உதவி செய்கின்றது.இரத்த சிவப்பு அணுக்களை உற்பத்தி செய்வதால், அனிமீயா நோய் வராமல் இருக்க உதவுகிறது.


இரும்புச்சத்து, பீட்டா கரோட்டின், போலிக் அமிலம் மற்றும் கால்சியம் போன்றவை இதில் அடங்கியுள்ளன. மெக்னீசியம், காப்பர் மற்றும் வைட்டமின் கே அதிகளவில் உள்ளதால் எலும்புகள் மற்றும் பற்கள் உறுதியாக்க உதவுகிறது.


கீரையில் புரத சத்து நிறைந்துள்ளது, எனவே இந்த கீரையை தினமும் எடுத்து கொண்டால்,மாரடைப்பு, ரத்த குழாய்கள் அடைப்பு போன்றவை வராமல் நம் உடலை பாதுகாக்கலாம்.


இதைப்போலவே,கருப்பு கொண்டைக்கடலையில் புரதச்சத்து நிறைந்து காணப்படுகிறது. உடல் மெலிவு அடைந்தவர்கள்,இந்த கொண்டைக்கடலையை சாப்பிட்டு வர, உடலானது வலுப்பெறும். சதை பிடிப்பும் ஏற்படும். இதில் இரும்புச்சத்து  அதிகமாக இருப்பதினால்,ஹீமோகுளோபின் அதிகரித்து,ஆண்களுக்கு ஏற்படும் மலட்டுத்தன்மை நீங்குகிறது. மரபணு கோளாறை சரி செய்யும்,கோலின் இதில் இருக்கிறது. இதில் சல்பர் இல்லாத காரணத்தினால்,சிறுநீரகப் பிரச்சினை உள்ளவர்களும் கருப்பு கொண்டை கடலையை தாராளமாக உண்ணலாம்.இதில் சுண்ணாம்பு சத்தும் நிறைந்து காணப்படுகிறது. கொண்டைக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வர,சளி,இருமல் மற்றும் நுரையீரல் சார்ந்த பிரச்சினைகள் குணமாகின்றன. இதில் நார்ச்சத்து நிறைந்து காணப்படுவதால் செரிமான கோளாறுகள் சரியாகின்றன.


பொதுவாக சமையலில் சேர்க்கப்படும் கீரை வகைகளில் பாலக் கீரைக்கென தனித்துவமான குணங்கள் உண்டு. உடலில்  ஹீமோகுளோபினை அதிகரிப்பதன் மூலம் புற்றுநோய்  வருவது கட்டுப்படுத்தப்படும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். அதேபோல்  ஹீமோகுளோபின் குறைவானவர்களுக்கு  அதன் அளவை  அதிகரிக்க பாலக் கீரையை தொடர்ந்து உணவில் சேர்த்து வந்தால் சிறந்த பலன் கிடைக்கும் என ஆய்வுகளில் தெரிய வந்திருக்கிறது.


இப்படி சத்துக்கள் நிறைந்த பாலக்கீரையையும்,கருப்பு கொண்டைக்கடலையையும் சேர்த்து, சுவையான புலாவ் எவ்வாறு செய்வது என்பதை இதில் காணலாம்.


முதலில் தேவையான அளவு சீரக சம்பா அல்லது பாசுமதி அரிசியை முக்கால்வாசி  வேக வைத்து எடுத்து ஆற வைத்துக்கொள்ளவும்.


பாலக் கீரை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சிறிது பச்சை வாசம் போகும் அளவிற்கு வதக்கி தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.


இதே போல கருப்பு கொண்டைக்கடலையை முக்கால்வாசி வேக வைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.


பின்னர் ஒரு வானலியில், நல்லெண்ணெய் அல்லது வெண்ணையை சிறிது விட்டு,அதில் சிறிய அளவில்,சீரகம் போட்டு வருத்தபின்,முக்கால் பதத்தில் இருக்கும் சாதத்தை இதில் கொட்டி கிளறவும்.வெண்ணை சாதத்தில்  நன்றாக கலந்து இருக்கும் படி செய்த பின்,இதில் ஏற்கனவே வதக்கி வைத்திருக்கும் பாலக்கீரையை நன்றாக போட்டு கிளறி, அதனுடன், கருப்பு கொண்டை கடலையும் சேர்த்து கலக்கவும். இதில் தேவையான அளவு சிறு சிறு துண்டுகளாக நறுக்கிய வெங்காயத்தாள்  மற்றும் உப்பை சேர்க்கவும்.பின்னர் நெருப்பை அணைத்துவிட்டு மேற்புறம் முடியாள் மூடி தம் போடவும்.


15 நிமிடங்கள் கழித்து மூடியை திறந்தால், சுவை மிகுந்த பாலக் கொண்டைக்கடலை சாதம் அல்லது புலாவ் தயாராகிவிடும்.


இப்படியாக புலாவ் வடிவத்தில், கீரை மற்றும் கடலையை சேர்த்து செய்து தரும்போது,உங்கள் வீட்டில்  குழந்தைகள் மட்டுமின்றி,பெரியவர்களும் பக்க விளைவு இல்லாத இந்த உணவினை உண்டு மகிழ்வார்கள்.