ஒவ்வொரு ஊருக்கும் ஒரு உணவை சமைக்கும் முறையில் வேறுபாடு இருக்கும். அதாவது, உணவினை சமைக்க பயன்படுத்தும் பொருட்கள் ஒன்றாக இருந்தாலும் சமைத்த பின்னர் வரும் உணவின் ருசி முற்றிலும் வேறு விதமாக இருக்கும். அப்படியான வகையில்,  தமிழ்நாட்டின் கொங்கு பகுதியில் மிகவும் பிரபளமான கோழிக்கறி  சமைப்பது எப்படி என்பது குறித்து இந்த தொகுப்பில் காணலாம். 


தேவைப்படும் பொருட்கள்


நாட்டுக் கோழி  - ஒரு கிலோ


கடலை எண்ணெய் - 100 மி.லி


சின்ன வெங்காயம் - 150 கிராம் 


தக்காளி - 1 


பூண்டு  - ஒரு முழு பூண்டு


இஞ்சி - 50 கிராம் 


மிளகு - 20 


காய்ந்த மிளகாய் = 20


இளம் பதத்தில் உள்ள தேங்காய் - 1


மஞ்சள் தூள், உப்பு, கடுகு, கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை- தேவையான அளவு


சமைக்கும் முறை; 


பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அது சூடான பின்னர், கடுகு போட்டிக்கொள்ளவும். அதன் பின்னர் உரித்து வைத்துள்ள சிறிய வெங்காயத்தை போடவும், அதன் பின்னர் எடுத்து வைத்துள்ள 20 காய்ந்த மிளகாயை போட்டவும், இதனுடன் கறிவேப்பிலையை சேர்த்து வதக்கவும். தக்காளியை சிறிய துண்டுகளாக வெட்டி போடவும். பின்பு பூண்டு, இஞ்சி மற்றும் மிளகு ஆகியவற்றை இடித்து போட்டு வதக்கவும். இதில் இருந்து பச்சை வாசனை சென்ற பின்னர் உப்பும் மஞ்சள் தூளும் கொஞ்சம் சேர்த்து வதக்கவும். தொடர்ந்து,  நன்கு கழுவிய பின்னர் சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி வைத்துள்ள நாட்டுக் கோழிக்கறியை போட்டி வதக்கவும். முதலில் தண்ணீர் ஊற்ற வேண்டாம். 10 நிமிடங்களுக்குப் பின்னர் தண்ணீர் ஊற்றி கறியை நன்கு வேகவிடவும். 


கறி நன்கு வெந்து வர வர தண்ணீர் குறைந்து கொண்டே வரும்; தேவைப்பட்டால் தண்ணீர் ஊற்றிக்கொள்ளவும். ஊற்றிய தண்ணீர் கறியுடன் சேர்ந்து கொதிக்கும்போது கொஞ்சம் திடமாக அதாவது கெட்டியாக மாறும். அப்போது இளம் பதத்தில் உள்ள தேங்காயை சிறுசிறு துண்டுகளாக வெட்டி போடவும். தேங்காய் கறியுடன் சேர்ந்து நன்றாக வெந்த பின்னர் அடுப்பில் இருந்து பாத்திரத்தை இறக்கி விடவும். கொத்துமல்லி இலையை நறுக்கியோ கிள்ளியோ போட்டு பறிமாறலாம். இந்த நாட்டுக்கோழி வறுவல் இட்லி, சாப்பாடு என டிஃபன் மற்றும் லன்சுக்கு சிறப்பான காம்பினேஷனாக இருக்கும். 


குறிப்பு: நாட்டு கோழியைப் பொறுத்த வரையில் கடையில் கறியாக வாங்கி வந்து சமைப்பதை விட, உயிரோடு வாங்கி வந்து நாமே அதனை சமைக்க தயார் செய்வது சிறப்பு. அதாவது கோழியை கொன்ற பின்னர் அதனை தீயில் வாட்டி அதன் பின்னர் சுத்தம் செய்து சிறிய சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளலாம். கடைகளில் சுடு தண்ணீரைப் பயன்படுத்தி கோழியின் இறகுகளை சுத்தம் செய்வார்கள் என்பதால், இவ்வகையான கறியில் சமைக்கும்போது மிகவும் ருசியாக இருக்காது.