பெண்கள் அழகான சருமம் பெற வேண்டும் என்றால் சணல் விதைகளை உட்கொள்ளுங்கள் என ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர். 


புரோட்டீன்கள், கொழுப்புகள், தாதுக்கள், அமிலங்கள் என அனைத்து சத்துகளும் இருக்கும் ஒரு பொருள்தான் சணல் விதை. உடலுக்கு தேவையான அனைத்து சத்துகளும் இருப்பதால் தான் சணல் விதை, இதயத்துடன் ஒப்பிட்டு பேசப்படுகிறது. உடலுக்கு எப்படி இதயம் முக்கிமான வேலையை செய்கிறதோ அதுபோல, சணல் விதையும் உடலுக்கு தேவையான சத்துகளை கொடுக்கிறது. ஆனால், பெரும்பாலானோருக்கு சணல் விதை என்ற ஒரு அருமருந்து இருப்பது தெரிவதில்லை. 


தெளிவான மற்றும் வறண்ட மண் உள்ள நிலத்தில் விளையும் சணல் விதை மழைக்காலங்களில் அதிகம் பயிரிடப்படுகிறது. சணல் விதைகளில் அதிகமான ஊட்டச்சத்துகள் இருப்பதால் உணவில் சேர்த்து கொள்ளலாம். பெரும்பாலானோருக்கு தெரியாத இந்த சணல் விதைகளின் நன்மைகள் குறித்து ஊட்டச்சத்து நிபுணரான பத்ரா தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் சில குறிப்புகளை பதிவிட்டுள்ளார்.


சணல் விதைகளின் மருத்துவ பலன்கள்


அதன்படி, சணல் விதைகளில் இருக்கும் லினோலிக் அமிலம் மற்றும் காமா லினோலினிக் அமிலம் கொழுப்பை குறைக்கவும் இதயத்தையும் பாதுகாக்கவும் உதவும் என்றும், காமா லினோலிக் அமிலம் தோல் ஆரோக்கியம் மற்றும் ஹார்மோனை சமநிலையில் வைத்திருக்கும் என கூறப்பட்டுள்ளது. சில பெண்களுக்கு மாதவிடாய்க்கு முன்பு சில அறிகுறிகள் ஏற்படும். வயிறு அல்லது கால் வலி, கோபம், ஒருவித அசவுகரியம் ஆகியவற்றை உணரும் பெண்கள் சணல் விதைகளை சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்குமாம். 


சணல் விதைகளில் 25 சதவீதத்துக்கும் அதிகமாக புரதங்கள் உள்ளன. அதில் உள்ள விட்டமின் ஏ, பாஸ்பரஸ், விட்டமின் ஈ மற்றும் ஜிங் பொட்டாசியம், இரும்பு, கால்சியம், துத்தநாகம் போன்ற ஊட்டச்சத்துகள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்த கூடியது. இதில் உள்ள அமிலேஸ் மற்றும் லிபேஸ் போன்றவை கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புகளை செரிக்க உதவுகிறது. மேலும் ஊட்டச்சத்து உறிஞ்சுதலுக்கும் அமிலேஸ் பயன்படுகிறது.


சாப்பாட்டை கட்டுப்படுத்த முடியாமல் சிலர் உடல் எடையை குறைக்க விரும்புவார்கள். அவர்களுக்கு சணல் விதைகள் ஒரு வரப்பிரசாதம் என்றே கூறலாம். ஏனெனில் சணல் விதைகள் பசியை அடக்கி கட்டுப்படுத்துவதுடன், உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது. சணல் விதைகளில் இருக்கும் விட்டமின் ஈ ஆரோக்கியமான ஆக்சிஜனேற்றத்துக்கு உதவுகிறது. நோய் எதிர்ப்பை அதிகப்படுத்துவதுடன் தோலை பாதுகாத்து சருமத்தை அழகாக வைத்திருக்கவும் உதவுகிறது. வறட்சியான சருமத்தை உள்ளவர்கள் சரும பாதுகாப்புக்கும், அழகான சருமத்தை பெறவும் சணல் விதைகளை பயன்படுத்தலாம். 


சணல் விதைகளை பயன்படுத்தும் முறை


இப்படி பல நன்மைகளை கொண்டுள்ள சணல் விதைகளை நன் முன்னோர்கள் மருந்துகளாக சாப்பிட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. சணல் விதைகளை எப்படி சாப்பிடுவது என்ற சந்தேகம் பலருக்கு ஏற்படலாம். சணல் விதைகளை பச்சையாக சாப்பிடலாம். காய்கறிகள் நிறைந்த சாலட்டில் சணல் விதைகளையும் சேர்த்து சாப்பிடலாம். சணல் விதைகளை முளைக்கட்டியும் சாப்பிடலாம். சணல் விதைகளில் எண்ணெய் எடுத்து அதில் உணவு சமைத்து சாப்பிடலாம். குழந்தைகளுக்கு சணல் விதைகளில் பால் எடுத்து குடிக்க கொடுக்கலாம். அப்படி கொடுத்தால் குழந்தைகளில் இதயம் பலப்படுவதுடன், உடல் வளர்ச்சிக்கும் உதவும். 


சீன, ஆப்பிரிக்க மக்கள் விரும்பும் சணல் விதை


சணல் விதைகளின் நன்மையை அறிந்து இருந்ததால் தான் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சீனா, சணல் விதை எண்ணையை உணவிலும், மருந்துவத்திலும் பயன்படுத்தி வருகிறது. இதனால் என்னமோ சீன பெண்கள் அழகாக இருக்கின்றனர். சணல் விதைகள் நல்ல செரிமானத்தை கொடுப்பதால் ஆப்பிரிக்க நாடுகளில் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துக்காக சணல் பால் கொடுக்கப்படுகிறது. 


இப்படி பல நன்மைகளை கொண்டுள்ள சணல் விதைகளை அலட்சியம் செய்யாமல் பயன்படுத்தி உடல் ஆரோக்கியத்தைப் பெறலாம்.