எதுவுமே அளவுக்கு மிஞ்சினால் ஆபத்துதான். அது உணவுக்கு ரொம்பவே அதிகமாகப் பொருந்திவிடும். அந்த வகையில் பார்த்தால் புரதத்தை அதிகம் உட்கொண்டாலும் ஆபத்து என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். 


உணவில் புரத சத்து நிறைந்திருப்பது முக்கியமான ஒன்றாகும். நம் உடலில் ஒவ்வொரு செல்லும், திசுக்களும், சதையும், ரத்தமும் புரதத்தினால் ஆனது. உங்கள் ஹார்மோன், என்சைம், நோய் எதிர்ப்பு செல்களும் உருவாக அடிப்படை தேவை புரதமே. புரத சத்து சரியான அளவு இருந்தால் மட்டுமே நம்மால் இயங்க முடியும்.


ஆனால் சமீப காலமாக ஜிம், ஒர்க் அவுட், ப்ரோட்டீன் ட்ரிங் என்பதெல்லாம் ரொம்பவே பிரபலமாகிவிட்டது. அதிகமான அளவில் புரதத்தை உட்கொண்டால் அது பல்வேறு உபாதைகளுக்கும் வழிவகுக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.


உடல் எடை அதிகரித்தல்: 


அளவுக்கு அதிகமாக புரதம் எடுத்துக் கொண்டால் அது உடல் எடையை அதிகரிக்கச் செய்யும். கார்போஹைட்ரேட்ஸுக்குப் பதிலாக புரதத்தை மட்டும் அதிகம் உட்கொண்டால் எடை அதிகரிக்கும் என்று 2016லேயே ஒரு ஆய்வறிக்கை வெளியானது.


சுவாசத்தில் துர்நாற்றம்:


அதிகமான அளவு புரதம் உட்கொள்ளும்போது கீட்டோஸிஸ் என்ற செயல்பாடு அதிகமாகும். இது அழுகிய பழத்தின் நாற்றத்தை வாயில் உண்டாக்கும்.


மலச்சிக்கல்: 


அதிகமாக புரதம் உட்கொள்பவர்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனையும் ஏற்பாடுகிறது. காரணம் அவர்கள் குறைந்த அளவில் நார்ச்சத்து உணவை உட்கொள்வதே ஆகும்.


வயிற்றோட்டம்:


மலச்சிக்கல் சிலருக்கு ஏற்படுவது போல் இன்னும் சிலருக்கு வயிற்றோட்டமும் ஏற்படும். அதிகப்படியான பால் பால் சார்ந்த பொருட்கள் உட்கொள்ளும்போது இதற்கு வாய்ப்பு அதிகம்.


சிறுநீரக செயலிழப்பு:


அதிகமான அளவு புரதம் உட்கொள்ளும்போது சிறுநீரக செயலிழப்பு ஏற்படலாம். ஏற்கெனவே சிறுநீரக பிரச்சினை இருப்பவர்களுக்கு அது உயிருக்கு ஊறு விளைவிக்கும் அளவிற்கு பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.
 
புற்றுநோய் பாதிக்கும்: 


இறைச்சி சார்ந்த அதிகப்படியான உணவை உண்ணும் போது அது சில வகையான புற்றுநோய்களுக்குக் கூட வழிவகுக்கலாம்.


இதய நோய் பாதிப்பு:


அதிகப்படியான சிவப்பு இறைச்சி, பால் சார்ந்த பொருட்களை உண்ணும்போது இதய நோய் அதிகமாகும். அதனால் அளவுக்கு மிஞ்சாமல் புரதத்தை டயட்டில் சேர்க்கவும்.


ஆரோக்கியமாக இருக்க, ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவை நாம் எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். இது தவிர, நம்மை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் உடற்பயிற்சியும் முக்கிய பங்கு வகிக்கிறது. நமது உடல் ஆரோக்கியமாக இருக்க புரதம் தேவை. உங்கள் தசைகளின் வளர்ச்சிக்கும் புரதம் மிகவும் முக்கியமானது. தசை வளர்ச்சிக்காக, சிலர் அதிக புரதத்தை உட்கொள்ளும் பழக்கம் உள்ளது. அதிகப்படியான புரதத்தை சாப்பிடுவது உடலுக்கு நிறைய தீங்கு விளைவிக்கும். ஜிம், எனர்ஜி ட்ரிங் எல்லாம் ஓகே தான். ஆனால் அதற்காக அளவுக்கு மிஞ்சி ஆபத்தை விலைக்கு வாக்கக் கூடாதல்லவா?