மனிதனின் அன்றாட வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்று தான் காலை உணவு. ஆரோக்கியமான காலை உணவு இல்லை என்றால் அன்றைய நாள் மட்டுமல்ல அடுத்து வரும் நாட்களும் சுறுசுறுப்பு இல்லாமல், புத்துணர்வு இல்லாமலேயே மந்தமாக காணப்படும். ஆகவே தான் ஒரு மனிதனின் ஆரோக்கியமான சுறுசுறுப்பான வாழ்க்கைக்கு காலை உணவு மிகவும் அவசியமானது என மருத்துவர்கள் கூறுகின்றனர். அதிலும் ஆரோக்கியமான உணவு வகைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.


 காலையில் எடுத்துக் கொள்ளும் உணவானது அதிகளவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாக இருந்தால் மட்டுமே அன்றைய நாள் மட்டுமல்ல அடுத்து வரும் ஒவ்வொரு நாளும் வேகமாக இயங்க முடியும். காலையில் துரித உணவுகளை சாப்பிடுவதை விட்டு ,இயற்கையாக கிடைக்கும் காய்கறி வகைகள், பழங்கள், புரத உணவுகளை  சாப்பிட்டாலே உடல் மிகவும் ஆரோக்கியமான நிலையில் இருக்கும் என கூறப்படுகிறது.  


இயற்கையாக கிடைக்கும் உணவுகளுக்கு பதிலாக , ஊட்டச்சத்து குறைந்த, துரித உணவுகளை எடுத்துக் கொள்ளும்போது உடல் எடை அதிகரிப்பு, வயிற்றுப் பகுதியில் சதை அதிகரிப்பு என உடலில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி பல்வேறு நோய்களுக்கு வழி வகுத்து விடுவதாக கருதப்படுகிறது. ஆகவே உடல் எடை குறைப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் இயற்கையான உணவுகளையும், காய்கறி, பழச்சாறுகளையும் எடுத்துக் கொள்ளும் போது விரைவில் எடை குறைவதை காண முடிகிறது. ஆகவே அதற்கு முதல் அடித்தளம் தான் இந்த ஆரோக்கியமான காலை உணவை எடுத்துக் கொள்வது என மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.


ஆகவே நீண்ட நாள் ஆயுள் ஆரோக்கியத்துடன் வாழ இயற்கை முறையிலான உணவுகளை காலை உணவில் சேர்த்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். 


 


புரதம் நிறைந்த காய்கறி மற்றும் சியா விதைகள் :


பொதுவாக புரதம் என்றாலே எல்லோரும் அசைவ உணவுகளை தான் குறிப்பிடுவார்கள். அவ்வாறு இல்லாமல் புரதச்சத்து நிறைந்த காய்கறிகள், விதைகள் அதிக அளவில் இருக்கின்றன .அசைவ உணவுகளை சாப்பிட விரும்பாதோர் இந்த புரதச்சத்து நிறைந்த காய்கறி வகைகளை‌ காலை உணவில் சேர்த்துக் கொண்டால் சிறந்தது. காலை உணவாக பச்சை காய்கறி சாறுகளை ,அவற்றுக்கு தேவையான உப்பு  காரத்துக்கு மிளகுத்தூள் போன்றவற்றை சேர்த்து சாப்பிடுவது மிகவும் சிறப்பு என கூறப்படுகிறது.
அதேபோல் பெர்ரி, கீரை வகைகள் மற்றும் சர்க்கரை சேர்க்காத பாதாம் பால் போன்றவற்றை காலை உணவாக எடுத்துக் கொள்ளும்போது தேவையான ஊட்டச்சத்து கிடைப்பதாக கூறப்படுகிறது.   சற்று சுவையாக இருக்க வெண்ணிலா, கோக்கோ பழத் தூள் , மற்றும் சியா விதைகள் ஆகியவற்றைச் சேர்த்துக் கொள்ளலாம். இது நன்கு சத்தானதாகவும், சுவையானதாகவும், புரதச்சத்து நிறைந்ததாகவும் இருக்கும். இவற்றை காலை உணவாக எடுத்துக் கொள்ளும் போது சிறந்த ஆக்ஸிஜனேற்றிகளாக செயல்படுகிறது. காய்கறி, பழச்சாறுகளில் அதிகளவாக தாதுக்கள், நார்ச்சத்துக்கள், ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுவதால் இதை காலை உணவாக எடுத்துக் கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இவ்வாறான உணவுகள் உடலுக்கு தேவையான புரதச்சத்தை வழங்கி நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் செயலாற்ற உதவுகிறது.


 


கிரீக் யோகர்ட், உலர் விதைகள் மற்றும் பெர்ரி:


 ஒரு சில நபர்கள் தொடர்ந்து காலை வேளையில் பயணம் செய்யும் நிலை ஏற்படும். ஆகவே ஒவ்வொரு நாளும் காலை உணவை தவிர்க்க வேண்டி ஏற்படுகிறது. ஆகவே உங்கள் பயணத்தின் போது நீங்கள் இலகுவாக உண்ணக்கூடிய சில உணவு வகைகளை நிபுணர்கள் பரிந்துரைத்திருக்கிறார்கள். கொழுப்பு சத்து மற்றும் இனிப்பு சுவை இல்லாத கிரீக் யோகர்ட் சிறந்த காலை உணவாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. மிகக் குறைந்த கார்போஹைட்ரேட், அதிகளவான புரதச்சத்து நிறைந்த இந்த கிரீக் யோகட் ஆனது ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கும் என கூறப்படுகிறது. அத்துடன் உலர் பழ வகைகளான, பாதாம், வால்நட், ஆளி விதைகள், பெர்ரிஸ் போன்ற பழ வகைகளை  சேர்த்துக் கொள்ளலாம். இவற்றில் அளவான புரதம், தேவையான கொழுப்பு சத்து மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருப்பதால் காலை உணவில் எடுத்துக் கொள்வது மிகவும் சிறப்பு என கூறப்படுகிறது.



அவகோடா (வெண்ணெய் பழம்) மற்றும் முட்டை:


காலை வேலையில் அவசரமாக வேலைக்குச் செல்லும் போது மிகவும் எளிமையான முறையில் எடுத்துக் கொள்ளக்கூடிய உணவுதான் இந்த பட்டர் ஃப்ரூட் மற்றும் முட்டையாகும். இதில் போதுமான அளவு புரதச்சத்து நிறைந்திருப்பதாக கூறப்படுகிறது அதைப்போல் உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பையும் இது வழங்குகிறது ‌. உடல் எடை குறைப்பில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு சிறந்த உணவாகவும் அமைகிறது. பட்டர் ஃப்ரூட்டை தனியாக பழச்சாறாகவும் எடுத்துக் கொள்ளலாம் அல்லது முட்டை, தக்காளி சேர்த்து சாலட் ஆகவும் சாப்பிடலாம்.