தேங்காய் சட்னி மட்டும் அல்ல. தேங்காய் வைத்து லட்டு, பிஸ்கட் உள்ளிட்டவற்றை செய்து அசத்தலாம்.


தேங்காய் குக்கீஸ்


என்னென்ன தேவை?


தேங்காய் துருவல் - 2 கப்


துருவிய பாதாம் - 20 


நெய் - கால் டேபிள் ஸ்பூன்


ஏலக்காய் - 1/4 டீஸ்பூன்


உப்பு - ஒரு சிட்டிகை


வெல்லம் - 1 கப்


செய்முறை:


தேங்காய் துருவல் தயாரிக்க செய்ய வேண்டியது, தேங்காயை துருவி எடுப்பதற்கு முன் தேங்காயை அதன் ஓடு பகுதியில் இருந்து தனியே எடுக்கவும். ப்ரவுன் நிற அடி பகுதியை அகற்றவும். இதை மிக்ஸி ஜாரில் போட்டு துருவல் போல அரைத்து எடுக்கவும். பாதம் துருவி தனியே வைக்கவும். கொதிக்கும் தண்ணீரில் வெல்லத்தை கரைத்து பாகு பதத்திற்கு வந்ததும் அதை ஆற வைக்கவும்.


இப்போது ஒரு பாத்திரத்தில் தேங்காய் துருவல், பாதாம் துருவல், ஏலக்காய் பொடி, உப்பு, வெல்ல பாகு எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக கலக்கவும். நெய் சேர்த்து நன்றாக உருண்டையாக எடுத்து அதை பிஸ்கட் போல தட்டையாக உருவாக்கி Air Fryer அல்லது மைக்ரோவே ஓவனில் 170 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் 15-10 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும். சுவையான தேங்காய் குக்கீஸ் தயார். 


தேங்காய் பர்ஃபி பிடிக்கும் என்பவர்கள் இந்த ரெசிபியையும் செய்து பார்க்கலாம். ரோஸ் தேங்காய் லட்டு.


என்னென்ன தேவை?


தேங்காய் துருவல் - ஒரு கப்


கன்டன்ஸ்டு மில்க் - ஒரு கப்


துருவிய பாதாம், முந்திரி,பிஸ்தா - அரை கப் 


ரோஸ் சிரப் - சிறிதளவு


நெய் - சிறிதளவு


குல்கந்த் - ஒரு கப்


செய்முறை


ஒரு பாத்திரத்தில்  துருவிய தேங்காய், கன்ட்ன்ஸ்டு மில்க் சேர்த்து நன்றாக கலக்கவும். இனிப்புக்கு முழுக்க முழுக்க இதை மட்டுமே சேர்க்கிறோம். வெள்ளை சர்க்கரை இல்லை என்பதால் இனிப்புக்கு ஏற்றவாறு சேர்க்கவும். கொஞ்சம் நெய் சேர்க்கலாம். ரோஸ் எசன்ஸ் சேர்க்கலாம் அல்லது காய்ந்த நாட்டு ரோஜா மலர்கள் பிடிக்கும் என்றால் அதையும் சேர்ந்தது சுவை எப்படியிருக்கும் என்று பார்க்கலாம். 


இதை மூன்றையும் நன்றாக கலக்கவும்.  இதோடும், துருவிய பாதாம், பிஸ்தா, முந்திரி உள்ளிட்டவற்றை குல்கந்த் உடன் நன்றாக கலந்து வைக்கவும். இப்போது லட்டு தயாரிக்கலாம். தேங்காய் கலவையில் இருந்து சிறிதளவு எடுத்து அதன் நடுவே நட்ஸ் கலவையில் சிறிதளவு எடுத்து வைத்து லட்டு போல உருட்டவும். நெய் சிறிதளவு சேர்க்கலாம். தேங்காய் ரோசா லட்டு ரெடி.


தேங்காய் அவ்வளவு நன்மைகளை கொண்டுள்ளது. இதில் மோனோ லாரிக் அமிலம் உள்ளது. இது குடல் புண் பாதிப்பை குணப்படுத்தும். தேங்காய் பால் ஆப்பம், பொட்டுக் கடலை, தேங்காய் துருவல் மற்றும் வெல்லம் சேர்த்து சாப்பிட்டால் உடலுக்கு ஆரோக்கியம் தரும்.