சின்னச்சின்ன உபாதைகளுக்கு எல்லாம் மருத்துவரிடம் ஓட முடியாது. அதேவேளையில் சின்ன உபாதை திரும்பத்திரும்ப தொடர்ந்து கொண்டிருந்தாலும் அஜாக்கிரதையாக இருக்க முடியாது. நம் உடல் நம்மிடம் பேசும் மொழிதான் வலி. எப்போது அதற்கு சிகிச்சை தேவைப்படுகிறதோ அப்போது அதுவே பெரியளவிலான சமிக்ஞைகளைக் கொடுத்துவிடும்.
அதனால் சின்னச்சின்ன உபாதைகள் குறிப்பாக அழற்சி நீக்க பண்புகள் கொண்ட எளிதில் கிடைக்கும் சில மூலிகைகள் பற்றிக் காண்போம். ஊட்டச்சத்து நிபுணர் லவ்நீத் பத்ரா இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியுள்ளார். அழற்சி ஏற்படுதல் என்பது உடல் தொற்றுகளுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தின் வெளிப்பாடு. அந்த அழற்சிகளைப் போக்க நாம் உண்ணும் உணவு மிகவும் முக்கியப் பங்கு வகிக்கும். உணவில் சில மூலிகைகளை தவறாமல் பயன்படுத்துவதால் நமக்கு சீரான ஆரோக்கியத்தைப் பேணுவது சாத்தியமாகும்.
அஸ்வகந்தா:
அஸ்வகந்தா ஆயுர்வேதத்தில் உள்ள மிக முக்கியமான மூலிகைகளில் ஒன்றாகும். “அஸ்வகந்தா” என்பது சமஸ்கிருதத்தில் “குதிரையின் வாசனை” என்பதாகும். அஸ்வகந்தா மன அழுத்தத்தைக் குறைக்கும் திறனுக்காக மிகவும் பிரபலமானது.அஸ்வகந்தா சப்ளிமெண்ட்ஸ் மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை போக்க உதவும் என்று பல ஆய்வுகள் காட்டுகின்றன.அஸ்வகந்தா சப்ளிமெண்ட்ஸ் சில ஆய்வுகளில் விந்தணுக்களின் செறிவு அதிகரிக்கவும், டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிப்பதாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. உடலின் நோய் எதிர்ப்பு செல்களைத் தூண்டவல்லது.
இஞ்சி:
இஞ்சி ஒருவரின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் அழற்சி எதிர்ப்பு பண்புகளின் சக்தியாக உள்ளது. இதனால் பாக்டீரியா மற்றும் வைரஸ்களை நாம் எளிதாக விரட்டலாம். குளிர்ந்த காலங்களில் எந்த நோயையும் சமாளிப்பதை இது நிச்சயமாக எளிதாக்கும். இஞ்சியை காலையில் சாப்பிட்டால் உங்கள் உடலில் இரத்த ஓட்டம் சீராக இருக்கும். பசியுணர்வு அதிகரிக்கும். சிறிது இஞ்சியை அரைத்து பேஸ்ட் செய்து, நீரில் கலந்து நெற்றியில் தடவினால், ஒற்றைத் தலைவலி நீங்கும். ஆஸ்துமா நோயாளிகள் தினமும் இஞ்சி சாற்றில் தேன் கலந்து குடித்து வர, ஆஸ்துமா பிரச்சனையில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும். இஞ்சி உடலின் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது. இது உடலில் சரியான அளவில் இன்சுலினை உற்பத்தி செய்ய உதவுகிறது. மேலும், நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. பெண்களின் மாதவிடாய் காலத்தில் உண்டாகும் வலியைக் குறைக்க இஞ்சி தேநீர் பயன்படுத்தப்படுகிறது. இஞ்சியில் உள்ள ஆன்ட்டி ஆக்ஸிடன்டுகள், இந்த வலிக்கு நிவாரணம் அளிக்கிறது. இஞ்சிக்கு ஒவ்வாமை உள்ள நபர்களுக்கு நாக்கில் வீக்கம், உடலில் அரிப்பு போன்ற சிக்கல்களை இது ஏற்படுகிறது. அத்தகையவர்கள் இஞ்சி உட்கொள்வதை நிறுத்த வேண்டும்.
துளசி:
துளசி இலையில் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவது உள்ளிட்ட பல நன்மைகள் உள்ளன. அவை ஒருவரின் சுவாச மண்டலத்துக்கு புத்துயிர் அளிப்பதோடு நமது நுரையீரலையும் சுத்தப்படுத்துகின்றன. துளசியின் இன்னொரு பெயர் பிருந்தை. 300க்கும் மேற்பட்ட துளசி வகைகள் இருந்தாலும், வெண்துளசியைத்தான் நாம் அதிகம் பயன்படுத்துகிறோம். துளசி இலையை எலுமிச்சை சாறு விட்டு விழுது போல் அரைத்து, தோல் நோய்களுக்கு பற்றுப் போடலாம். இதனால் சொரி, சிரங்கு போன்றவை குணமாகும்.
மஞ்சள்
மஞ்சள் அதன் குணப்படுத்தும் பண்புகளுக்கு நன்கு அறியப்பட்டதாகும். இது ஒவ்வொரு சமையலறையிலும் காணக்கூடிய ஒரு மந்திர மூலப்பொருள். இது அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளது. இந்த குளிர்காலத்தில் நீங்கள் ஆரோக்கியமாக இருக்க விரும்பினால் மஞ்சளை உங்கள் தினசரி உணவில் உட்செலுத்துவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஒருவரின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, தொண்டை புண் போன்ற பிரச்சனைகளிலிருந்தும் நிவாரணம் அளிக்கும். மஞ்சளில் உள்ள ஒரு ஆன்ட்டி ஆக்ஸிடன்ட் பொருள்தான் குர்குமின். ஆனால், குர்குமின் அதிகமாக சாப்பிட்டால் இரும்புச் சத்து குறைபாடு உண்டாகும். அதுமட்டுமன்றி தலைவலி, அஜீரணக் கோளாறு, தோல் வெடிப்பு , சரும பாதிப்புகள் , வயிற்றுப் புண். வயிற்று தசை வீக்கம் , குடல் அல்லது கல்லீரல் புற்றுநோய் ஆகியவை ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
மிளகு:
உங்கள் உணவில் கருப்பு மிளகு சேர்த்துக்கொள்வது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மட்டுமில்லாமல் வழக்கமான வைரஸ் தொற்றுகளை எதிர்த்துப் போராடுவும் செய்யும். நெஞ்சுச்சளி, ஜலதோஷம், நுரையீரல் மற்றும் செரிமான மண்டல உறுப்புகளின் செயல்திறனைக் கூட்டும் பங்கு மிளகுக்கு உண்டு. ஆஸ்துமாவால் அவதிப்படுபவர்கள் தினமும் ஐந்து மிளகை மென்று தின்பது நல்லது. மிளகுத்தூளுடன் தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் இருமல் உடனே நிற்கும்.