வாழ்வில் நம் இலக்குகளை அடைய நம் உடல் நலம் ஒத்துழைக்க வேண்டும். நாம் உடல் ரீதியாக ஆரோக்கியமாக இருந்தால் நம் மனம் மிகவும் திறமையாக செயல்படுகிறது. உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் வலுவாக இருக்க, சரியான டயட் தேவை. அந்த டயட்டில் மிக அவசியமானது காலை உணவு.

சத்தான காலை உணவு உடலுக்கு நாள் முழுவதும் தேவையான ஊட்டச்சதுத்தை வழங்குகிறது. ஆனால் காலையில் என்ன சாப்பிடுகிறோம் என்பது மிக அவசியம். காலையில் சாப்பிடுவதால் உடலுக்கு சில உபாதைகளை ஏற்படுத்தும் உணவுகள் உண்டு.

தயிர்

தயிரில் புரோபயாடிக் கால்சியம் அதிகம் இருப்பதாக அறியப்படுகிறது. இதனால் பற்கள் மற்றும் உடலுக்கு நல்லது என்று கூறப்படுகிறது. இருப்பினும், அதை வெறும் வயிற்றில் சாப்பிடும்போது, வயிற்றில் உருவாகும் அமிலம், அதிலுள்ள நன்மை பயக்கும் பாக்டீரியாக்களை அழித்து அவற்றை பயனற்றதாக மாற்றுகிறது. எனவே, வெறும் வயிற்றில் தயிர் சாப்பிடுவது பயனற்றதாகும். அதோடு உடலுக்கு அமிலத்தன்மையை ஏற்படுத்தும்.

காரமான உணவு

கண்டிப்பாக காலை வேளையில் காரமான உணவுகளை தவிர்க்க வேண்டும். வெறும் வயிற்றில் சாப்பிடும் போது அது அதிக வலியை உண்டாக்கும். அவை உங்கள் வயிற்றுக்கு தீங்கு விளைவிப்பதோடு, அசௌகரியத்தையும் ஏற்படுத்தும். இதனால் வயிற்றில் தொந்தரவு மற்றும் செரிமான பிரச்சனைகள் ஏற்படலாம். அதிக காரம் மூலமாக, அஜீரணம் மற்றும் அசிடிட்டி போன்றவை பாதிக்கும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்: IND vs IRE 1ST T20: ஆடாம ஜெயிச்சோமடா..! அயர்லாந்தை வீழ்த்திய இந்தியா.. 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

சர்க்கரை அதிகம் கொண்ட உணவு

சர்க்கரை அதிகம் கொண்ட உணவுகளை காலையில் தவிர்க்க வேண்டும். அவை வயிற்றில் அதிக பிரக்டோஸ் உற்பத்தி செய்து சுமையை உண்டாக்குகின்றன. இதனால் சர்க்கரை வெறும் வயிற்றில் நுழையும் போது, உடலில் இன்சுலின் கடினமாகிறது. இதனால் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.

சிட்ரஸ் பழங்கள்

சிட்ரஸ் பழங்களை தவிர்க்க வேண்டும். இவற்றில் சிட்ரிக் அமிலம் அதிகம் இருப்பதால் அவை புளிப்பு சுவையுடன் இருக்கும். சிட்ரஸ் பழங்களை உட்கொள்வதால் வயிற்றில் அதிகப்படியான அமிலம் உற்பத்தியாகிறது. நெஞ்செரிச்சல் மற்றும் பிற பிரச்சினைகள் இதனால் ஏற்படலாம்.

குளிர் பானங்கள்

நாம் குளிர் பானங்களை பொதுவாகவே அதிகம் விரும்புகிறோம். ஆனால் முடிந்த வரை, காலையில் வெறும் வயிற்றில் அதனைத் தவிர்க்க முயற்சி செய்ய வேண்டும். நாம் குளிர்ச்சியாக ஏதாவது குடிக்கும்போது, நம் உடல் வெப்பநிலையை அதிகரிக்க மேலும் கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். இதனால் நம் உடல் ஆற்றலை இழக்கும் அபாயம் உண்டு. 

எண்ணெய் உணவுகள்

காலையில் எண்ணெய் உணவுகளை சாப்பிடுவது உடலுக்கு தீங்கு விளைவிக்கும். குறிப்பாக கோடையில் மிக கவனமாக இருக்க வேண்டும். எண்ணெயில் வறுத்த அல்லது பொறித்த உணவுகளை காலையில் சாப்பிட்டால், அது வெப்பமான காலத்தில், உடலில் நீரிழப்பை ஏற்படுத்தலாம். அதனால் தான் காலையில் தோசை சாப்பிட்டால் தண்ணீர் தாகம் அதிகம் எடுப்பதாக பலர் கூறுவார்கள்.

பொறுப்புத்துறப்பு : இந்த உள்ளடக்கம் பொதுவான தகவல்களை உள்ளடக்கியது. இது மருத்துவ ரீதியான அறிவுரையோ, கருத்தோ அல்ல. தனிப்பட்ட உடல்நலம் சார்ந்த தகவல்களுக்கு மருத்துவரை அணுகுவது மட்டுமே சரியான தீர்வாகும். ஏபிபி பொதுத் தகவல்களுக்கான பொறுப்பை ஏற்காது.