கோடை காலத்தில் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க பல வகையான ஆரோக்கியமான உணவுகள் மற்றும் பானங்களை உணவில் சேர்த்துக் கொள்கிறோம். அதில் இளநீரும் ஒன்று. சாலையோரக் கடைகளில் . மலிவு விலையில் விற்கப்படும் இந்த இளநீரைப் பருகுவது உடலுக்கு புத்துணர்ச்சியையும் குளிர்ச்சியையும் தருவது மட்டுமல்லாமல், ஒரு சிறந்த ஆற்றல் ஊக்கியாகவும் செயல்படுகிறது. இதன் நுகர்வு இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதிலும், சிறுநீரக கற்கள் அபாயத்தைக் குறைப்பதிலும் பயனுள்ளதாக இருக்கும். இளநீர் பருகுவது சருமத்திற்குப் பொலிவைத் தரும்.


ஊட்டச்சத்துக் களஞ்சியம்:


இளநீரில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் எலக்ட்ரோலைட்டுகள் இயற்கையாகவே கிடைக்கப் பெறுகின்றன.மேலும் உடலை நீரேற்றமாக வைத்திருக்க மிகவும் உதவியாக இருக்கும். மெடிக்கல் நியூஸ் டுடே என்கிற இதழின் தகவலின்படி, இளநீர் ஊட்டச்சத்துக்களின் களஞ்சியமாகும். கோடை காலத்தில் இளநீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பல...அவற்றைப் பார்ப்போம்!


இரத்தச் சர்க்கரை - சர்க்கரை நோயாளிகள் கோடைக் காலத்தில் சர்க்கரை கலந்த பானங்களை அருந்துவதற்குப் பதிலாக இளநீரைக் குடிப்பது நன்மை தரும். சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இளநீர் குடிப்பதால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்படும். இளநீரில் இயற்கையான சர்க்கரை கூறுகள் உள்ளன, எனவே அதை அதிகமாக உட்கொள்வது நீரிழிவு நோயாளிகளுக்கும் தீங்கு விளைவிக்கும். எனவே அதை அளவோடு வைத்திருப்பது நல்லது.


சிறுநீரக கல் - இளநீரைத் தொடர்ந்து உட்கொள்வது உங்கள் சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்தும். ஒரு ஆய்வின் படி, சிறுநீரகத்தில் கற்கள் இல்லாதவர்களுக்கு இளநீர் கொடுக்கப்பட்டது, அவர்கள் சிறுநீர் கழிக்கும் போது அதிக சிட்ரேட், பொட்டாசியம் மற்றும் குளோரைடுகளை இழந்தனர். இளநீர் கற்களை அகற்ற அல்லது உருவாகுதலைத் தடுக்க உதவும் என்பது இதன்மூலம் தெரியவருகிறது.


இதய ஆரோக்கியம் - இளநீர் இதய ஆரோக்கியத்திற்கு ஏற்றது. இதில் உள்ள பொட்டாசியம் கூறுகள் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. இளநீர் குடிப்பதால் இதயம் சம்பந்தமான நோய்கள் வரும் அபாயம் குறைகிறது என்று சில ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.


சரும ஆரோக்கியம் - இளநீர் நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். இது உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கி, சருமத்திற்கு பொலிவைத் தருகிறது. இளநீர் பருகுதல் உங்கள் உடலை ஹைட்ரேட் செய்கிறது அல்லது சருமத்தில் தடவுவது மாய்ஸ்சரைசராக செயல்படுகிறது. இளநீரை தொடர்ச்சியாக உட்கொள்வது சருமத்திற்கு நன்மை பயக்கும்.


மன அழுத்தம்: இளநீரில் ஃப்ரீ ரேடிக்கல்கள் வைட்டமின்கள், தாதுக்கள், பொட்டாசியம், எலக்ட்ரோலைட்டுகள் மற்றும் அமினோ அமிலங்கள் உள்ளன. இவை மன அழுத்தம் போன்ற மனநலன் சார்ந்த பாதிப்புகளுக்கு எதிராகச் செயல்படும்.