உணவே மருந்து, என்பதுதான் நம் முன்னோர்களின் கருத்து.  அன்றைக்கு அவர்கள் உண்ட ஊட்டச்சத்து மிக்க உணவுதான் இன்றைக்கும் அவர்களின் ஆரோக்கியத்திற்கு காரணமாக உள்ளது. ஆனால் இன்றைய தலைமுறையினர் மருந்தே உணவு என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதற்கு காரணம் மாறிவரும் உணவுப்பழக்கம்தான். அப்படி நாம் உண்ணும் அரிசி எத்தனையோ விதமாக பாலிஷ் செய்து எடுத்துவரப்படுகிறது. அதனை உண்பது எவ்வளவு கெடுதல் என்பதையும், அது எந்தவிதமான தீங்குகள் விளைவிக்கும் என்பதையும், அதற்கு பதிலாக என்ன சாப்பிடலாம், என்ன சாப்பிட்டால் என்ன நன்மை என்பதையும் குறித்து அறிவுரை செய்கிறார் மருத்துவர் கு. சிவராமன். மருத்துவர் கு. சிவராமன் பல வருடங்களாக இயற்கை விவசாயம் பற்றியும், சிறுதானியங்கள் பற்றியும் பிரச்சாரம் செய்து வரும் முக்கியமான சமூக நல விரும்பிகளில் ஒருவர். நெல் ஜெயராமன், நம்மாழ்வார் போன்றோர்கள் விட்டுச்சென்ற தொண்டுகளை அப்படியே கிடப்பில் போட்டுவிடாமல் அவர்கள் விட்ட இடத்தில் இருந்து துவங்கி, மக்கள் அனைவரிடத்திலும் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். இது குறித்த ஆராய்ச்சுகளிலும் ஈடுபட்டு வருபவர்.



"நாம் முதன்மை உணவாக உண்பது அரிசி வகைகளைதான். அப்படி உண்பது தவறு. நம் பிரதான உணவாக காய்களையே எடுத்துக்கொள்ள வேண்டும். அதாவது குறைவான அரிசி சாப்பாட்டையும் அதிகமான காய்களையும் எடுத்து கொள்ள வேண்டும். அரிசி சாப்பிடுவதை வெகுவாக குறைக்க வேண்டும், நம் கலாச்சாரம் அரிசி சாப்பிட்டு வளர்ந்துவிட்டது. அது மிகவும் தவறு, குறைவான அளவு அரிசியே எடுத்துக்கொள்ள வேண்டும். அதுவும் பொன்னி அரிசி போன்ற வெள்ளை வெள்ளேரென்று இருக்கும் அரிசிகள் உடலுக்கு கேடு. பாரம்பரிய நெல் வகைகளான கருப்பு கவுனி, மாப்பிளை சம்பா, தூய மல்லி, இலுப்பைப்பூ சம்பா, பூங்கார், காட்டுயானம் போன்ற மரபு நெல் வகைகளான அரிசியை இயற்கை முறையில் விளைவிக்கப்பட்டு உண்ண வேண்டும்.



எது இயற்கையாக கிடைக்கிறதோ அதனை உண்ணுங்கள். வெறும் சோறு மட்டும் சாப்பிட வேண்டாம், சிறு தானியங்கள் எடுத்துக்கொள்ளலாம், கம்பு, சோளம், குதிரைவாலி, வரகு, திணை, சாமை, மணிவரகு ஆகியவற்றை எடுத்துக்கொள்ளலாம். இதை ஏன் திரும்ப திரும்ப வலியுறுத்துகிறோம் என்றால் உணவென்றால் அரிசி, கோதுமை என்று ஒரு 100 வருடமாக அதையே பழக்கிவிட்டார்கள். ஆனால் நெல் ஜெயராமன் ஐயா 175 பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டு எடுத்திருக்கிறார். நம்மாழ்வார் போன இடங்களிலெல்லாம் இத்தனை நெல் ரகங்கள் இருக்கிறது என்று பேசியிருக்கிறார். 1998ல் நாங்கள் சிறுதானியங்கள் பற்றி பேசும்போது ஏளனம் செய்தவர்கள் ஏராளம். இன்று அதற்கென தனி துறை ஒதுக்கியுள்ளது மத்திய அரசு,  ஜாயின்ட் செகரக்டரி மில்லட்ஸ் என்று. சிறுதானியங்கள் நமக்கு நல்லது என்பதை தாண்டி மண்ணுக்கு நல்லது, அது விலைவதற்கு தண்ணீர் அதிகம் தேவை இல்லை." என்று பேசினார்.