கோடை காலத்தில் சரளமாக கிடைக்கும் பழங்களில் ஒன்று தான் தர்பூசணி. தர்பூசணி பழத்தில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது. ஆனால் எந்த உணவாக இருந்தாலும் அளவுக்கு மீறினால் நஞ்சு தான். அதேபோல் தான் தர்பூசணி பழமும். இதனை அதிகமாக சாப்பிட்டால் சில உடல் உபாதைகள் ஏற்படும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.


தர்பூசணி சத்துக்கள்:


கோடை காலத்தில் வெயிலின் தாக்கத்திலிருந்து உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் தர்பூசணியில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி1, வைட்டமின் பி2, வைட்டமின் சி, வைட்டமின் பி6, பொட்டாசியம், மக்னீசியம், தாதுப்புக்கள், பீட்டா கரோட்டீன் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளது.


கோடையில் பலருக்கும் அஜீரண கோளாறு அல்லது மலச்சிக்கல் ஏற்படும். அதற்கு முக்கிய காரணம் நீர்ச்சத்து குறைபாடு ஆகும். தர்பூசணியில் 90 சதவீதம் நீர்ச்சத்து நிறைந்திருப்பதால் இந்த பழத்தை சாப்பிடுவது நல்லது. இதில் இருக்கும் நீர்ச்சத்து மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும். மலச்சிக்கல் பிரச்சனை இருந்தாலும் அது சரியாக உதவும்.


தர்பூசணி பழத்தால் ஏற்படும் உடல் உபாதைகள்: 


ஆனால் தர்பூசணியில் பொட்டாசியம் என்ற சத்து நிறைந்துள்ளது. உடலில் பொட்டசியம் சத்து குறைந்தால் ரத்த அழுத்தம் ஏற்படும். அதேபோல் பொட்டாசியம் சத்து அதிகரித்தாலும் சிக்கல் தான். உடலில் பொட்டாசியம் சத்து அதிகரிப்பு இதய துடிப்பை சீரற்றதாக மாற்றும். இதயத் துடிப்பை வேகப்படுத்தும். இதனால் தர்பூசணி அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது இதயப் பிரச்சினைகள் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். 


ஏற்கனவே கூறியது போல் தர்பூசணி பழத்தில் 90% நீர்சத்து நிறைந்துள்ளது. உடலில் ஏற்கனவே நீர் சத்து அதிகம் இருக்கும் நபர்கள் இந்த தர்பூசணியை அதிகம் சாப்பிட்டால் உடல் சோர்வு, கை, கால் வீக்கம் ஏற்படும்.


மது அருந்துபவர்களா நீங்கள்?


மேலும் மது பழக்கம் இருப்பவர்கள் தர்பூசணியை அதிகம் எடுத்துக்கொள்ள கூடாது. குறிப்பாக மது அருந்தும் போது தவிர்ப்பது நல்லது. அப்படி அதிகம் எடுத்துக் கொண்டால் அது கல்லீரல் வீக்கம் மற்றும் கல்லீரல் கொழுப்புப் பிரச்சினைகளை உருவாக்கும் என கூறுகின்றனர்.


தர்பூசணியில் நீர்ச்சத்து அதிகம் இருந்தாலும் சர்க்கரை அளவும் அதிகம் காணப்படுகிறது. அதனால் நீரிழிவு பிரச்சினை உள்ளவர்கள் தர்பூசணியை மிகக் குறைவாக மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும் என ஊடச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். 


வெயிலுக்கு இதமளித்தாலும் தர்பூசணி பழத்தை அளவாகவே எடுத்துக்கொள்ள வேண்டும். அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொண்டால் ஒரு சிலருக்கு உடல் உபாதைகள் ஏற்படும் என்பது தான் உண்மை. இந்த உணவு மட்டுமல்ல நாம் எடுத்துக்கொள்ளக் கூடிய அனைத்துமே அளவாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதே மருத்துவர்களின் அறிவுறையாக உள்ளது.