உலகம் முழுவதிலும் சர்க்கரை நோய் என்பது வயது வித்தியாசம் இல்லாமல்,பிறந்த குழந்தை முதல் முதியவர்கள் வரை என வியாபித்து நிற்கிறது. இது நோய் என்று எடுத்துக் கொள்ளாமல்,வாழ்க்கை முறையில் தேவைப்படும் உணவு மாற்றம் என்று நாம் எடுத்துக் கொள்ளும் போது, இதை கட்டுப்பாட்டில் வைப்பது எளிதாக இருக்கிறது.


சரியான உணவு பழக்க வழக்கம், ஓய்வு மற்றும் சிறிய அளவிலான உடற்பயிற்சி ஆகியவை,இந்த சர்க்கரை நோயை நமது கட்டுப்பாட்டில் வைக்க மிகப்பெரியது உதவி செய்கிறது.


சிலர் உணவு பழக்க வழக்கங்களை தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்திருப்பார்கள்.ஏதாவது விருந்திற்கு சென்றால் அவர்களின் மனது,இனிப்பு மற்றும் மாவு சத்து நிறைந்த உணவுகளை நோக்கி சென்றாலும் கூட ,அவர்கள்  கட்டுப்பாட்டுடன்  ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகாரிக்காத வண்ணம்  சத்து நிறைந்த ,சிறிய அளவிலேயே உணவுகளை எடுத்துக் கொள்வார்கள்.ஆனாலும் எல்லா  மனிதர்களாலும், அவர்களுடைய நாவின் ருசியை கட்டுப்படுத்த முடிவதில்லை.


மேலும் இந்தியா போன்ற நாடுகளை எடுத்துக் கொண்டால்,அரிசி சோறு என்பது தவிர்க்க முடியாத ஒரு உணவாக இருக்கிறது.இதிலும் மதியம் மற்றும் இரவு என இரண்டு வேளையும்,அரிசி சோறு உண்ணும் நபர்கள் தமிழகத்தில் மிக அதிகம். இவ்வாறு இரு வேளையும் அரிசி சோறு  எடுத்துக் கொள்ளும்போது, ரத்தத்தின் சர்க்கரை அதிகரிக்கிறது.


இந்த நிலையில் சமீபத்தில் ,அரிசி சோற்றை குளிர்சாதன பெட்டியில் வைத்து 24 மணி நேரங்களுக்கு பிறகு உண்ணும் போது,அது ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது என கண்டறிந்துள்ளனர். இது கேட்பதற்கு வியப்பான செய்தியாக  இருந்தாலும் கூட அனுபவ ரீதியாக உறுதி செய்யப்பட்டுள்ளது.


 அரிசி சோற்றை முதல் நாள் வடித்து,   குளிர்சாதன பெட்டியில் வைத்து 24 மணித்தியாலங்களுக்கு பிறகு,அதை எடுத்து மீண்டும் சூடு படுத்தி, சாப்பிடும் போது,சாப்பிட்ட ஒன்றரை மணித்தியாலங்களுக்கு பிறகு ரத்தத்தின் சர்க்கரை அளவின் கிளைசெமிக் குறியீட்டு எண் குறைவாக இருக்கிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. 
 
(கிளைசெமிக் குறியீடு என்பது ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை குறிப்பிடும் குறியீடாகும். இதன்படி ரத்தத்தில் மிக அதிகப்படியான  குளுக்கோஸின் அளவை 100 என்று குறியீடாக வைத்துக்  கொண்டு,அதன் அடிப்படையில் கிளைசெமிக் குறியீடு அதாவது ஜி ஐ அளவு நிர்ணயம் செய்யப்படுகிறது. சாப்பிடும் எந்த ஒரு உணவின் சர்க்கரையின் அளவு 50 gi களுக்கு மேல் இல்லாமல் இருப்பது நீழ்வு நோயாளிகளுக்கு நன்மை பயக்குவதாகும்)


அரிசி,உருளைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு மற்றும் ஸ்டார்ச் நிறைந்த பொருட்களை சமைத்து 24 மணி நேரங்கள் குளிர்சாதன பெட்டியில் வைக்கும்போது,ரேட்டோ கிரேடேஷன் எனப்படும் செயல்முறை நடைபெறுகிறது.அதன்படி இந்த மாவு பொருட்களில் உள்ள ஸ்டார்ச் ஆனது உடைக்க முடியாத ஸ்டார்சாக   மாறுகிறது.  இப்படி மாறிய உணவுப் பொருளை உண்பதன் மூலம், செரிமானம் நன்றாக நடைபெற்று, அந்த உணவில் இருக்கும் சக்தியை உடலானது ஆற்றலாக மாற்றிக் கொண்டாலும் கூட உடைக்க முடியாத ஸ்டார்ச் ஆனது ரத்தத்தின் சர்க்கரை அளவை உயர்த்துவதில்லை.
வழக்கமாக சாப்பிடும் அரிசி மற்றும் மாவுப்பொருட்களில் செரிமானம் ஆகக்கூடிய மாவுப்பொருள்தான் செரிமானம் அடைந்து ரத்தத்தில் சர்க்கரையாக கிளைசெமிக் குறியீட்டை உயர்த்துகிறது.


ஆகவே சர்க்கரை நோயாளிகள் ஸ்டார்ச் நிறைந்த மாவுப்பொருளை எடுத்துக்கொள்ள விரும்பினால்,24 மணி நேரங்களுக்கு முன்னர்,அதை குளிர்சாதன பெட்டியில் வைத்து, பின்னர் அதை எடுத்து சூடு படுத்தி, மிகக் குறைந்த அளவில் உண்ணும் போது ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கிறது.