மாலை மயங்கினால் மனது ஏதாவது ஸ்நாக்ஸுக்கு அலையும். ஸ்நாக் டைமில் தினமும் ஒரே டிஷ்ஷை சாப்பிட குழந்தைகளுக்கு மட்டுமல்ல யாருக்குமே பிடிக்காது தான். அதனால் தான் விதவிதமான ஸ்நாக்ஸை தேடி அலைவோம். மாலை வேளையில் வடைக் கடை தொடங்கி பானி பூரி கடை வரை கூட்டம் களை கட்ட நம் நாக்குகள் தான் காரணம்.
சீஸ் கொண்ட ஸ்நாக்ஸ் வெளியில் கிடைப்பது கொஞ்சம் கடினம். அலைந்து திரிந்துதான் வாங்க வேண்டும். வீட்டிலேயே நினைத்தவுடன் சீஸ் ஸ்நாக்ஸ் செய்வது எல்லாம் வடை சுடுவது போல் நம்மூரில் இன்னும் இயல்பாகவில்லை.
அப்படி சீஸ் ஸ்நாக்ஸ் ரெசிபி தெரியாதவர்களுக்காக 4 ரெசிபிக்களை பட்டியலிடுகிறோம்.
1. சீஸி ப்ரெட் ரோல்:
இதற்கான ஸ்டஃபிங்கை தயார் செய்வோம். வேகவைத்த உருளைக்கிழங்கு 3 எடுத்துக் கொள்ளுங்கள். அதில் கொஞ்சம் இஞ்சி பேஸ்ட், தேவையான அளவு மிளகாய் தூள், கரம் மசாலா, சாட் மசாலா சேர்த்துக் கொள்ளுங்கள். அரை டீஸ்பூன் ஜீரகப் பவுடரும் சேர்த்துக் கொள்ளுங்கள். எல்லாவற்றையும் நன்றாக கலந்து கொண்டு அதில் உப்பு, வேகவைத்த பட்டானிகள், மல்லி இலை சேர்த்து மீண்டும் பிசையவும். அவ்வளவு தான் கலவை ரெடி. பின்னர் பிரெட்டின் ஓரங்களை வெட்டிவிட்டு அதை லேசான நனைத்துப் பிழியவும். பின்னர் அதன் மீது சீஸ் ஸ்ப்ரெட்டை வைத்து அதில் ஸ்டஃபிங் வைத்து பேன் ஃப்ரை செய்யவும். சீஸ் பிரெட் ரெடி.
2. மசாலா சீஸி பாவ்
தேவையான பொருட்கள்: 4 பீஸ் பாவ் (பன்)1/2 கப் நறுக்கிய வெங்காயம், 1/2 கப் நறுக்கிய தக்காளி, 1/2 கப் நறுக்கிய குடை மிளகாய், ஒரு டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு மற்றும் சில்லி பேஸ்ட், தேவையான அளவு வெண்ணெய், 1 டீஸ்பூன் பாவ்பாஜி மசாலா, கொஞ்சம் மஞ்சள் பொடி, அரை டீஸ்பூன் மிளகாய்ப் பொடி சுவைக்கு உப்பு. மேலே கூறிய பொருட்களை எல்லாம் வெண்ணெய்யில் வதக்கிக் கொள்ளவும். பச்சை வாசம் போகும் வரை சிறிது தண்ணீர் ஊற்றி வதக்கவும். பின்னர் பாவ் பன்னை டோஸ்ட் செய்து அதன் மீது மசாலாவை வைத்து தோய்த்து எடுக்கவும். சுடச்சுட பறிமாறவும்.
3. செஸ்வான் சீஸ் பால்ஸ்:
இதற்கு முதலில் தேவையான அளவு உருளைக்கிழங்கு எடுத்துக் கொள்ளவும். அதை வேகவைத்து மசித்து அதை ஒரு பவுலில் சேகரிக்கவும். பின்னர் உருளைக் கிழங்குக்கு ஏற்றவாறு வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், சோளம் சேர்த்துக் கொள்ளவும். பின்னர் அதில் செஸ்வான் சாஸ் ஊற்றி கலந்து கொள்ளவும். இப்போது பால் செய்யவும். அதற்கு ஆல்பர்பஸ் ஃப்ளார் கொண்டு மாவு பிசைந்த அதை உருண்டையாக உருட்டிக் கொள்ளவும். அதன் மீது சீஸ் வைத்து உள்ளே ஸ்ட்ஃபிங்கை வைக்கவும். பின்னர் பந்து போல் உருட்டிக் கொண்டு பொரித்து எடுக்கவும்.
4. பாஸ்தா கட்லட்:
ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு ஆல் பர்போஸ் ஃப்ளார் சேர்க்கவும். பின்னர் அதை இளஞ்சூட்டில் வறுக்கவும். அடுப்பை ஆஃப் செய்துவிட்டு மாவை சூடு தணியச் செய்யவும். பின்னர் அதில் பால் சேர்த்து கட்டிபடாமல் கலந்து கொள்ளவும். அதில் சிவப்பு மிளகாய் தூள் சேர்க்கவும். தேவையான அளவு உப்பு, மிளகுத்தூள், ஆரிகானோ சேத்துக் கொள்ளவும். பின்னர் அதில் வேகவைத்த மாக்ரோனியை சேர்க்கவும். பின்னர் எல்லாவற்றையும் சேர்த்து வேக வைக்கவும். வெந்ததும் அதை ஆற விடவும். ஆறிய பின்னர் ஒரு ட்ரேவில் ஊற்றி ஃப்ரீசரில் வைக்கவும். பின்னர் அதை எடுத்து சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். பின்னர் ஒரு முட்டையை உடைத்து கலக்கி அதில் இந்த துண்டுகளை முக்கி எடுக்கவும், பின்னர் பிரெட் க்ரம்ப்ஸில் தோய்த்து வறுத்தெடுக்கவும். பொன்னிறமானவும் சுவைக்கலாம்.