வாழைப்பத்தில் சுவையாக ஒரு டெசர்ட் செய்யலாம் என நீங்கள் நினைத்தால், உங்களுக்கு பான்கேக், வாழைப்பழ வால்நட் கேக் என ஏராளமான தெரிவுகள் உள்ளன. ஆனால், வாழைப்பழத்தை வைத்து சுவையான பாரம்பரியமான ஒரு ரெசிபியையும் செய்ய முடியும்.  கேரளாவைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏதாவது திருவிழாவோ அல்லது விருந்து கொண்டாட்டங்களோ என்றால் இந்த அப்பம் தவறாமல் இடம் பிடிக்கும். இந்த அப்பத்தை செய்ய குறைவான பொருட்களே போதுமானது. 


குறைந்த நேரத்திலேயே இந்த ரெசிபியை செய்து விட முடியும். இதில் சேர்க்கப்படும் தேங்காய் மற்றும் ஏலக்காய் இந்த ரெசிபிக்கு சுவையூட்டும். இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த அப்பத்தின் இனிப்பு சுவைக்காக சர்க்கரை  வேண்டியதில்லை. சிறிது பனை வெல்லம் சேர்த்தால் போதும். நாவில் எச்சில் ஊற வைக்கும் சுவை உங்களுக்கு கிடைக்கும். இதை எண்ணெயில் பொரித்து எடுக்க வேண்டிய அவசியமும் இல்லை. அப்பம் அல்லது பணியாரம் செய்யும் தவாவை பயன்படுத்தினாலே போதும். தாவாவில் மாவை ஊற்றுவதற்கு முன் கொஞ்சமாக எண்ணெய் அல்லது நெய் தடவிக் கொள்ள வேண்டும். 


இந்த அப்பம் செய்வதற்கு மொத்தமே 20-25 நிமிடங்கள் தான் ஆகும் அப்பத்திற்கான மாவு தயாரிக்க வெகு நேரம் ஆகும் என்று நீங்கள் கவலைப்பட வேண்டாம். பனைவெல்லம், தேங்காய் உள்ளிட்டவை சேர்த்து சமைக்கப்படுவதால் இது உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது. இப்போது இந்த பாரம்பரிய அப்பத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க. 


அப்பம் செய்முறை


முதலில் நன்கு பழுத்த வாழைப்பழத்தை தேர்ந்தெடுத்து நன்கு மசித்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு பெரிய பாத்திரம் எடுத்துக் கொண்டு அதில் நீங்கள் பிசைந்து வைத்திருக்கும் வாழைப்பழம், அரிசி மாவு, தேங்காய், பனை வெல்லம், ஏலக்காய் தூள் ஆகியவற்றை சேர்த்து ஒன்றாக கலந்துக்கொள்ள வேண்டும். சுவைக்காக கொஞ்சம் உப்பு, கொஞ்சம் தண்ணீரை சேர்த்துக் கொள்ள வேண்டும். சரியான பதம் வரும் வரை கிண்டி கொண்டே இருக்க வேண்டு. சிறிது நேரத்தில் மாவு கெட்டியான பதத்திற்கு வந்து விடும்.


மிதமான தீயில் அப்பம் சுடும் தவாவில், எண்ணெயை தடவி, சூடானதும் ஸ்பூன் அளவு மாவை எடுத்து ஒவ்வொரு குழியிலும் நிரப்ப வேண்டும். மாவை குழி முழுவதும் நிரப்பி விடக்கூடாது. முகால்வாசி நிரப்பினால் போதும். அடிப்புறம் பொன்னிறமாக மாறியதும் அடுத்த பக்கத்தை திருப்பி வேகவைக்க வேண்டும். அப்பம் அனைத்து பக்கங்களிலும் பொன்னிறமாக மாறியதும் அதை தவாவில் இருது எடுத்து எண்ணெய் காயும் வரை பேப்பரில் வைக்க வேண்டும். அவ்வளவுதான் சுவையான வாழைப்பழ அப்பம் தயாராகி விட்டது.