உலகளாவிய அளவில் சமையலுக்கு நிறைய பாத்திரங்களை மக்கள் பயன்படுத்துகிறார்கள்.இரும்பு,அலுமினியம்,வெண்கலம், செம்பு,டெப்லான்,செராமிக் என நிறைய பாத்திரங்களை பயன்படுத்துகிறார்கள்.இந்த பாத்திரங்கள் நம் உடலுக்கு நன்மையை தருகிறதா அல்லது தீமையை தருகிறதா என்பதை கண்டறிந்து, அதற்கு ஏற்றாற்போல் பாத்திரங்களை பயன்படுத்த வேண்டும்.


 உலோகங்களை பாத்திரங்களாக பயன்படுத்தும் காலத்திற்கு முன்பிருந்தே, உலகின் பல பகுதிகளில் இருக்கும் மக்கள் மண்ணினால் செய்யப்பட்ட பாத்திரங்களைத்தான் பயன்படுத்தினர்.இன்றளவும் கூட தென்னிந்தியாவில்,குறிப்பாக தமிழகத்தில், மண்ணினால் செய்யப்பட்ட பாத்திரங்களில் சமைப்பது என்பது, தொன்று தொட்டு இருந்து வருகிறது.


என்னதான் உலோகங்கள் கண்டுபிடிக்கப்பட்டாலும் கூட,இந்த உலோகப் பாத்திரங்களில் சமைக்கும்போது,நன்மைகள் கிடைக்கும் அதே நேரத்தில், தீமைகளும் அதிகமாக இருக்கத்தான் செய்கின்றன. இத்தகைய உலோகப் பாத்திரங்களில்  எவ்விதமான   நன்மைகள் இருக்கின்றன என்பதை காணலாம். இதன் மூலம் எந்த பாத்திரத்தில் சமைப்பது ஆகச் சிறந்தது என்பதை தெரிந்துகொள்ளலாம். 


எவர்சில்வர் பாத்திரங்கள்:


 இன்று பெரும்பான்மையான வீடுகளில் இத்தகைய எவர்சில்வர் பாத்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.இந்த பாத்திரங்களில் பெரிய அளவில் தீமைகள் இல்லை என்றாலும் கூட எவர்சில்வர்  பாத்திரத்தில் கலக்கப்பட்டு இருக்கும்,குரோமியம் நிக்கல் போன்றவற்றின் தாக்கத்தால் உணவு பொருள்களில் சிறிய மாறுபாடு இருப்பது தவிர்க்க முடியாதது. இந்த பாத்திரங்களை சுத்தம் செய்வது மிகவும் எளிதானது இத்தகைய பாத்திரங்களில் கீறல்விழாது.அதிக வெப்பநிலையில் சமைப்பதற்கு எவர்சில்வர் பாத்திரங்கள்  சிறப்பானதாகும். பொதுவாக எவர்சில்வர் பாத்திரங்கள் (மண் பாத்திரங்களை தவிர்த்து) ஏனைய பாத்திரங்களோடு ஒப்பிடும்போது சிறப்பானது . அதிக அளவில் தீமைகளை கொண்டிருக்கவில்லை. வேறு ஏதாவது ஒரு பாத்திரத்தில் சமைத்தால் கூட, எவர்சில்வர் பாத்திரத்தில் பாதுகாப்பாக எடுத்து வைப்பது சிறப்பானதாகும்.


அலுமினிய பாத்திரம்:


உலகளாவிய அளவில் அலுமினிய பாத்திரங்கள் நிறைய மக்களால் பயன்படுத்தப்படுகிறது.இத்தகைய அலுமினிய பாத்திரங்களை பயன்படுத்துவதனால்,மூளையில் உள்ள நியூரான்கள் அழிந்து போகும் அபாயம் உள்ளது என கூறப்படுகிறது.மேலும் இத்தகைய பாத்திரங்களை பயன்படுத்தும் போது, ஆஸ்துமா,காச நோய் மற்றும் சுவாசக் கோளாறுகள் ஏற்படுகிறது. அலுமினிய பாத்திரத்தை கழுவும் போது,அதில் கருப்பாக ஒரு கலவை படியும்,அது,அந்த பாத்திரத்தில் இருந்து வெளிப்படும் அலுமினியம் ஆகும். இத்தகைய அலுமினிய துகள்கள் தொடர்ந்து நம் உடம்பில் சேரும்போது,அல்சர் பாதிப்பு ஏற்படும். அலுமினிய பாத்திரத்தில், அமிலத்தன்மை கொண்ட தக்காளி போன்ற உணவுகளை சமைக்கும் போது பாத்திரத்துடன் வினைபுரிந்து இதில் இருக்கும் அலுமினியம் மற்றும் வேதிப்பொருட்கள்  சிறுநீரகம் மற்றும் தசைகளில் படிகிறது. ஒருவேளை அலுமினிய பாத்திரத்தில் சமைப்பதை தவிர்க்க முடியாவிட்டால், சமைத்து முடிந்தவுடன்,வேறு பாத்திரத்தில் மாற்றுவது பாதுகாப்பானது.


வெண்கல பாத்திரம்:


இத்தகைய பாத்திரத்தை பயன்படுத்துவது சமையலுக்கு உகந்தது.இருப்பினும் வெண்கல பாத்திரத்தை சரியாக கழுவி வெயிலில் காய வைத்துத்தான் பயன்படுத்த வேண்டும்.ஒருவேளை வெண்கல பாத்திரத்தை முறையாக சுத்தம் செய்து காய வைக்காமல் விட்டு விட்டால்,அதில் களிம்பு படலம் உண்டாகும்.இது உணவில் நச்சுத்தன்மையை ஏற்படுத்தும்.இந்த பாத்திரத்தில் சமைக்கும் போது, உடல் சோர்வு நீங்குகிறது.வெண்கல பாத்திரத்தில் சமைத்த உணவுப் பொருட்கள்,நீண்ட நேரம் கெடாமல் இருக்கும்.


செம்பு பாத்திரம்:


 செம்பு பாத்திரத்தில் சமைப்பது ஆகச் சிறந்தது.மண் பாத்திரத்திற்கு அடுத்தபடியாக,சிறப்பான நன்மைகளை செப்பு பாத்திரம் கொண்டுள்ளது.இதில் இருக்கும் ஒரே ஒரே பிரச்சனை,இந்த பாத்திரங்களின் விலை அதிகமாக இருக்கிறது. பித்த நோய்,கண் நோய் மற்றும் சுவாசக் கோளாறுகள் அனைத்தையும் குணமாக்கும் தன்மை,செப்பு பாத்திரத்திற்கு உண்டு. செம்பு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து அருந்தினால், அதில் இருக்கும் கிருமிகள் அழிக்கப்படுகிறது.ஆகவே கூடுமானவரை சமையலுக்கு மண் பாத்திரத்திற்கு,பிறகு செம்பு பாத்திரத்தை பயன்படுத்துங்கள்.


ஈயப் பாத்திரம்:


ஈயப்பாத்திரங்கள் என்று தனியாக பாத்திரங்கள் செய்யப்படுவதில்லை. வெண்கல பாத்திரம் மற்றும் அலுமினிய பாத்திரத்தில் ஈய பூச்சு பூசப்படுகிறது. ஆஸ்துமா நாள்பட்ட சளி மற்றும் இருமல் போன்றவை டீ எம் பூசப்பட்ட, பாத்திரத்தில் சமைத்த உணவை சாப்பிடுபவர்களுக்கு உண்டாகிறது.


டெப்லான், பீங்கான் மற்றும் செராமிக் பாத்திரங்கள்:


டெப்லான் என்பது ஒரு விதமான செயற்கை பிளாஸ்டிக் பொருளாகும். இரும்பு பாத்திரங்களில் மேற்புறம் பூச்சாக இது பூசப்படுகிறது. இத்தகைய பாத்திரங்கள் நான் ஸ்டிக் பாத்திரங்கள் என்று அழைக்கப்படுகிறது.இதன் மூலம் எண்ணெய் இல்லாமல் சமைக்கலாம், என்ற நன்மை இருந்த போதிலும் கூட, உணவுப் பொருட்களை கரண்டி கொண்டு வதக்கும்போது,இந்த பாத்திரத்தில் இருக்கும் பூச்சானது உதிர்ந்து,சமைக்கும் பொருளோடு கலக்கிறது.இதனால் சுவாசக் கோளாறுகள் மற்றும் புற்றுநோய் போன்றவை ஏற்படும் அபாயம் இருக்கிறது.ஆகவே கூடுமானவரை டேப்லான் பூச்சு பூசப்பட்ட பாத்திரங்களை தவிர்க்க வேண்டும். இதைப் போலவே பீங்கான் மற்றும் செராமிக் பாத்திரங்களும் அதில் கலக்கப்படும் லெட் மற்றும் காட்மியம் போன்ற பொருட்களால் புற்றுநோய் அபாயத்தை கொண்டிருப்பதாக தெரியவந்துள்ளன.


மண் பாத்திரங்கள்:


தமிழர் பாரம்பரியத்தில்,நீங்காத இடம் பிடித்திருக்கும் இந்த மண் பாத்திரங்கள்,சமையலுக்கு ஆக சிறப்பானதாகும். இதில் சமைக்கும் உணவு பொருட்கள்,நீண்ட நேரம் கெடாமல் இருப்பதோடு, உடலுக்கு எவ்விதமான தீங்கையும் ஏற்படுத்துவதில்லை. மண் பாத்திரத்தில் சமைக்கும் போது, வெப்பமானது,சீராக பாத்திரம் முழுமைக்கும் பரவுகிறது. மேலும் இதில் சமைக்கும் உணவில் உள்ள, இரும்பு,பாஸ்பரஸ்,கால்சியம் மற்றும் தாது உப்புக்கள், விட்டமின்கள் ஆகியவற்றை அப்படியே தக்க வைத்துக் கொள்கிறது.மேலும் உணவுப் பொருளில் இருக்கும் அமிலத்தன்மையை சரி செய்கிறது. மண் பாத்திரங்களில் வைத்து தண்ணீரை அருந்தும் போது அவை உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது. இதில் இருக்கும் ஒரே பிரச்சனை என்னவெனில்,இது உடையும் தன்மை கொண்டிருப்பதால் கவனமாக கையாள வேண்டும்.இதை தவிர்த்து, மண் பாத்திரமானது,நூற்றுக்கு நூறு சதவீதம்,எல்லாவிதமான உணவுப் பொருட்களையும் சமைப்பதற்கு, சிறப்பானதாக இருக்கிறது.