மோர் என்பது எல்லோர் வீட்டிலும் தயாரிக்கப்படும் மிகவும் பிரபலமான பானமாகும். கோடை காலத்தில் பலரும் விரும்பி குடிக்கும் பானமாக இது உள்ளது. உடலை குளிர்ச்சி ஆக்கும் என்பதற்காகவும், அடிக்கும் வெயிலை தணிக்கும் என்பதற்காகவும் இதனை பலரும் விரும்புகிறார்கள். அதுமட்டுமின்றி இது கோடை அல்லாத காலங்களிலும், பொதுவாகவே பலர் வீட்டில் இருக்கும் பானமாகிவிட்டது. வலுவான எலும்புகளை உருவாக்கவும், ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த அழுத்த அளவைக் குறைக்கவும் இந்த பானம் உதவுகிறது. பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குவதைப் போலவே, இதனை அதிகமாக உட்கொள்வது சிலருக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்தவும் வாய்ப்புகள் உள்ளன.
மோரின் பக்க விளைவுகள்
லாக்டோஸ் சகிப்புத்தன்மை
மோர் ஒரு பால் பொருள் என்பதால், அதில் உள்ள ஒரு வகை சர்க்கரையான லாக்டோஸ் சிலருக்கு பிரச்சனையைத் தரலாம். லாக்டோஸ் சகிப்புத்தன்மை இல்லாதவர்கள் மோர் உட்கொண்டால் வயிற்று உப்புசம், வாயு மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற செரிமான கோளாறுகள் ஏற்படலாம்.
அலர்ஜி
சிலருக்கு பால் புரோட்டீன்கள் அல்லது மோரில் உள்ள ஒரு சில விஷயங்களில் அலர்ஜி இருக்கலாம். இது தோல் வெடிப்பு, அரிப்பு அல்லது சுவாச பிரச்சினைகள் போன்ற எதிர்விளைவுகளுக்கு வழிவகுக்கும். எனவே, இதனை உட்கொள்ளும் முன் மருத்துவரின் வழிகாட்டுதல்களை பெறவும்.
அதிக கலோரிகள்
பாலுடன் ஒப்பிடும்போது மோரில் பொதுவாக கலோரிகளில் குறைவுதான். ஆனால் மோர் தற்போது சுவையூட்டப்பட்டும் கிடைக்கின்றன. அதில் சில கூடுதல் சர்க்கரையுடன் தயாரிக்கப்படுகின்றன. அவற்றில் கலோரிகள் அதிகமாக இருக்கும். அதிக கலோரி கொண்ட மோர் அதிகமாக உட்கொள்வது எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும்.
சோடியம்
கடையில் கிடைக்கும் மோர்களில் உப்பு சேர்க்கப்படுகிறது. இது உயர் இரத்த அழுத்தம் அல்லது இதய பிரச்சினைகள் கொண்ட நபர்களுக்கு சோடியம் குறைவாக பயன்படுத்த அறிவுறுத்தப் பட்டிருந்தால், அவர்களுக்கு பிரச்சனை ஏற்படுத்த வாய்ப்புகள் உண்டு. சோடியம் அளவைக் கட்டுப்படுத்த விரும்பினால் மசாலா மோர் குடிப்பதைத் தவிர்க்கவும்.
சென்சிடிவிட்டி
சில நேரங்களில் மோரில் சேர்க்கப்படும் மசாலா போன்றவை சிலருக்கு இரைப்பை குடல் அசௌகரியம் அல்லது பிற பிரச்சினைகளை ஏற்படுத்த வாய்ப்புகள் உண்டு.
அதிகப்படியான நுகர்வு
மோர் கொஞ்சமாக குடித்தால் நல்லது தான். ஆனால் அதிகப்படியாக எடுத்துக்கொண்டால், எதிர்பாராத விளைவுகள் ஏற்பட வழிவகுக்கும். எந்தவொரு உணவு அல்லது பானத்தையும் நியாயமான அளவில் எடுத்துக்கொள்வது சிறந்தது. எல்லோருக்கும் இந்த பக்க விளைவுகள் பொருந்தாது. மோர் கொஞ்சமாகவும், கவனத்துடன் உட்கொண்டால், நிறைய நன்மை அளிக்கும் பானம்தான்.
பொறுப்புத்துறப்பு : இந்த உள்ளடக்கம் பொதுவான தகவல்களை உள்ளடக்கியது. இது மருத்துவ ரீதியான அறிவுரையோ, கருத்தோ அல்ல. தனிப்பட்ட உடல்நலம் சார்ந்த தகவல்களுக்கு மருத்துவரை அணுகுவது மட்டுமே சரியான தீர்வாகும். ஏபிபி பொதுத் தகவல்களுக்கான பொறுப்பை ஏற்காது.