ஆப்பிள் பன்னீர் பாயசம்


ஆப்பிள்- ஒன்று, காய்ச்சி ஆற வைத்த பால் - கால் லிட்டர், சர்க்கரை – கால் கப், பன்னீர் - 6 துளிகள், நெய் – சிறிதளவு, முந்திரி -5, திராட்சை - 5. 


செய்முறை


நெய்யில் முந்திரி, திராட்சையை வறுத்துக் கொள்ளவும். ஆப்பிளை தோல் நீக்கி துண்டுகளாக்கி, சிறிதளவு காய்ச்சிய பால் சேர்த்து, மைய அரைத்து எடுத்துக் கொள்ளவும். மீதமுள்ள பாலை மிதமான தீயில் பாதியாக சுண்டும் வரை காய்ச்ச வேண்டும்.  இதனுடன் சர்க்கரை, அரைத்த ஆப்பிள் விழுது, ஏலக்காய்த்தூள், சேர்த்து, கொதிக்கவிட்டு இறக்கவும் . இப்போது இதனுடன்  பன்னீர் துளிகள், முந்திரி, திராட்சை சேர்த்துப் பருகலாம். 


ஃப்ரூட்ஸ் கேசரி


தேவையான பொருட்கள்:


ரவை- ஒரு கப், சர்க்கரை - ஒரு கப், நெய் -அரை கப், கேசரி கலர் பொடி – ஒரு சிட்டிகை, பொடியாக நறுக்கிய விருப்பமான பழத் துண்டுகள் – அரை கப், முந்திரி, திராட்சை – அலங்கரிக்க தேவையான அளவு.


செய்முறை:


ஒரு டீஸ்பூன் நெய் விட்டு முந்திரி, திராட்சையை வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதே நெய்யில் ரவையை வறுத்து எடுத்துக் கொள்ளவும். அடிகனமான பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் விட்டு, கேசரி கலர் பொடி சேர்த்துக் கொதிக்கவிட வேண்டும். பின்  இதனுடன் ரவையை சேர்த்துக் கிளற வேண்டும்.  முக்கால் பங்கு வெந்த பின் சர்க்கரை, நெய், பழ வகைகள் சேர்த்துக் கிளறி இறக்க வேண்டும்.  இப்போது இதில் முந்திரி திராட்சையை அலங்கரித்து பரிமாறலாம். 


ரங்கோலி சுண்டல்


தேவையான பொருட்கள்:


வெள்ளை கொண்டைக்கடலை, பட்டாணி, வேர்க்கடலை, கறுப்பு கொண்டைக்கடலை, ராஜ்மா – தலா ஒரு சிறிய கப், கடுகு, பெருங்காயம் – தாளிக்க தேவையான அளவு, தேங்காய் துருவல் - ஒரு கப், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.


பொடி செய்வதற்கு:


கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன், தனியா –-ஒரு டீஸ்பூன், மிளகு, சீரகம் – தலா அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 5, 


செய்முறை:


பொடி செய்ய கொடுத்துள்ளவற்றை வறுத்து மிக்ஸியில் பொடித்துக்கொள்ள வேண்டும். கடலை வகைகளை முதல் நாள் இரவே ஊற வைத்து, மறு நாள் வேக வைக்க வேண்டும். கடாயில் எண்ணெயை காயவிட்டு கடுகு, பெருங்காயம் தாளித்து,  வேக வைத்த கடலை வகைகள், மிக்ஸியில் அரைத்து வைத்த பொடி, தேங்காய் துருவல், உப்பு சேர்த்துக் கிளறி இறக்கினால்,  கலர்ஃபுல்லான ரங்கோலி சுண்டல் தயார். 


மேலும் படிக்க 


Fried Poha : இட்லி, தோசை சாப்பிட்டு போரடிச்சு போச்சா? வறுத்த அவல் ரெசிப்பியில் கலக்குங்க..