இந்தியாவின் மேற்கு கடற்கரைப் பகுதியில் மகாராஷ்டிரா மற்றும் கர்நாடாகா எல்லைகளுக்கு இடையே அமைந்துள்ள மிகச்சிறிய மாநிலம் கோவா. இருந்தாலும், உலகத்தாரின் மிக விருப்பமான சுற்றுலா தலங்களில் ஒன்றாக இருக்கிறது. இந்திய மண்ணில் உள்ள பண்டைய போர்ச்சுகீசிய ஆதிக்கத்திற்குரிய பகுதியாகவே கருதுகின்றனர்.
போர்ச்சுகீசியரின் 450 ஆண்டுகால ஆதிக்கத்தின் விளைவாக கோவா லத்தீன் கலாச்சாரத்தின் தாக்கத்தை பெற்று,தனது வேறுபட்ட வடிவங்களை காட்டி நாட்டின் பிற பாகங்களை விட அதிகமாக அயல்நாட்டினரை ஈர்க்கிறது. கோவா மாநிலம் அதன் சிறப்பு வாய்ந்த கடற்கரைகள், தேவாலயங்கள் மற்றும் கோவில்களால் புகழ்பெற்றதாக விளங்குகிறது. இங்குள்ள மற்றொரு சிறப்பு வாய்ந்த இடம் பாம் இயேசு தேவாலயம் ஆகும். இங்குள்ள அகுடா கோட்டையும் முக்கிய சுற்றுலாத் தலம் ஆகும். சமீபத்தில் இந்திய வரலாறு,கலாச்சாரம் மற்றும் பண்பாடு குறித்த மெழுகுச்சிலை காட்சியம் பழைய கோவாவில் திறக்கப்பட்டுள்ளது.
கடற்கரை அழகும், கடல் உணவும் ஈர்க்கும் கோவாவுக்கு நீங்கள் சுற்றுலா சென்றால் இந்த ஐந்து உணவுகளை மறக்கவே மறக்காதீர்கள்.
Sanna (சன்னா)
சன்னா என்பது ஆவியில் வேகவைக்கப்பட்ட அரிசி கேக். இது கோவா மக்களின் முக்கிய உணவாகக் கருதப்படுகிறது. கோவா மக்கள் சன்னாவுடன் போர்க் விண்டாலுவை சாப்பிடுகிறார்கள். போர்க் விண்டாலு என்பது பன்றி இறைச்சி மற்றும் உருளைக்கிழங்குடன் சமைக்கப்படும் உணவு. இதை இனிப்பு உணவாகவும் சமைக்கின்றனர். அதை கோடாச்சி சன்னா என்று அழைக்கின்றனர். இதனை வெல்லம் சேர்த்து சமைக்கின்றனர்.
Ros Omelet (ராஸ் ஆம்லெட்):
ராஸ் ஆம்லெட் என்பது மசாலா ஆம்லெட். சிக்கன் கரி, உள்ளூர் பிரெட் ஆகியன சேர்க்கப்பட்ட உணவு தான் ராஸ் ஆம்லெட். ஆங்கிலத்தில் ராஸ் என்றால் கிரேவி என்று அர்த்தம். இந்த ஆம்லெட் மசாலா நிறைந்த கிரேவியில் தோய்த்து எடுக்கப்படுகிறது. இதை வெங்காயம், தேங்காய் பால், கரிவேப்பிலை, கடுகு இன்னும் சில மசாலாக்களை சேர்த்து சமைக்கின்றனர்.
Pork Vindaloo (போர்க் விண்டாலு)
போர்க் விண்டாலு என்பது கோவா உணவுகளில் தனிச்சிறப்பானது. இதை பூண்டு, வினிகர், மிளகாய் சேர்த்து சமைக்கின்றனர். இந்த உணவு போர்ச்சுகலில் இருந்து வந்தது என்றும் கூறலாம். 18 ஆம் நூற்றாண்டு உணவாகக் கருதப்படுகிறது.
Gadbad Ice Cream (கட்பட் ஐஸ்க்ரீம்)
கோவாவின் மிக பிரபலமான டெஸர்ட் வகை. இது ஐஸ்க்ரீம், ஃபலூடா, வெர்மிசெல்லி, ஜெல்லி, ஜேம் ஆகியன சேர்க்கப்பட்டு தயாரிக்கப்படுகிறது. இது பெரிய ஜார்களில் தரப்படுகிறது. கோடைவந்துவிட்டால் கோவாவில் இந்த கட்பட் ஐஸ்க்ரீம் ரொம்ப ஃபேமஸ்.
Prawn Balchao (ப்ரான் பல்சாவ்)
இது பார்த்தாலே வாய் ஊறவைக்கும் உணவு. இதனை தயாரித்துவிட்டால் ஒரு மாதம் கூட ரெஃப்ரிஜிரேட்டரில் வைத்து பயன்படுத்தலாம். இது ஊறுகாய் போன்ற கலவை. ஸ்பைஸியாகவும் இருக்கும் டேங்கியாகவும் இருக்கும். அதாவது புளிப்பு காரம் சேர்ந்த சுவையில் இருக்கும்.
கோவா இரண்டு விதமான சுற்றுலா பயணிகளுக்கு உகந்த காலங்களைக் கொண்டுள்ளது. ஒன்று குளிர்காலம் மற்றது கோடைக்காலம். குளிர்காலத்தில் அயல்நாட்டில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள்(குறிப்பாக ஐரோப்பாவினர்) அதன் சிறப்பான தட்பவெப்ப சூழலை அனுபவித்து மகிழ வருகின்றனர். கோடைகாலத்தில்இந்தியாவைச் சார்ந்த சுற்றுலாவினர் தங்கள் விடுமுறையை கழிக்க வருகின்றனர்.
ஆகையால் நீங்கள் எந்த சீசனில் கோவா சென்றாலும் இந்த 5 வித உணவுகளை சுவைக்கத் தவறிவிடாதீர்கள்.