தீபாவளி சமயத்தில் ஆரோக்கியமான இனிப்பு வகைகளை செய்ய வேண்டும் என்ற திட்டம் இருந்தால்..கேரட் அல்வா செய்து அசத்துங்க. கேரட் அல்வா செய்வது எளிதானது. கேரட் அல்வா சுவையாக இருக்க சில டிப்ஸ்.

கேரட் அல்வா 

என்னென்ன தேவை?

கேரட் - 1 கிலோ            

பால் - 1 1/2 லிட்டர்

நெய் - 1 கப்

சர்க்கரை - 3/4 கப்

ஏலக்காய் - 4 ( பொடி செய்தது. )

உலர் பழங்கள் - தேவையான அளவு

முந்திரி, பாதாம் உள்ளிட்டவற்றை சேர்க்கலாம். 

செய்முறை:

  • கேரட்டை நன்றாக கழுவி, தோல் நீக்கவும். கேரட்டை சிறிதாக கேரட் சீவுவதில் சீவி எடுக்கவும்.
  • ஒரு கடாயில், நெய் ஊற்றி அதில் முந்திரியை பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். 
  • இதனுடன், சீவிய கேரட் சேர்த்து வதக்கவும். அதனுடன் மீதி இருக்கும் நெய் சேர்த்து அடி பிடிக்காமல் வதக்கவும்.
  • இதில் தண்ணீர் சேர்க்க வேண்டாம். கேரட் நெய்யில் வேக வேண்டும். இதனுடன் பால் சேர்த்து கொள்ள வேண்டும். மேலும் 5 நிமிடங்கள் வதக்க வேண்டும்.
  • கேரட் மென்மையாக மாறியதும் அதனுடன், சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.இவற்றை 5 -7 நிமிடங்களுக்குப் பிறகு கேரட் அல்வா தயாராகிவிடும். கேரட் அல்வா உடன் குங்குமப்பூ சேர்க்கலாம். 

சிறந்த கேரட்:

கேரட் அல்வா சுவையாக இருக்க வேண்டும் என்றால் தரமாக கேரட்களை தேர்வு செய்ய வேண்டும். நல்ல ஆரஞ்சு நிற கேரட்களை அல்வாவிற்கு தேர்ந்தெடுக்கவும். கேரட் ஃப்ரெஷ் ஆக இருக்க வேண்டும்.அப்போதுதான் அல்வா சுவையாக இருக்கும்.

சுத்தம் முக்கியம்:

கேரட் சுத்தம் செய்யும்போது நன்றாக தண்ணீரில் ஊற வைத்து அதன் பிறகு  தோல் நீக்கவும். தண்ணீரில் ஊற வைத்து எடுத்து ஒரு துணியில் காய வைக்கவும். கேரட்டின் ஈரப்பதம் காய்ந்தவுடன் அல்வா தயாரிக்கலாம்.

க்ரீம்:

கேரட் அல்வாவில் சேர்க்கும் பால் திக்காக இருக்க வேண்டும். இல்லையெனில் கண்டெக்ஸ்டு மில்க் அல்லது ஃப்ரெஷ் க்ரீம் சேர்க்கலாம். இது கேரட் அல்வாவிற்கு கூடுதல் சுவை தரும்.

சர்க்கரை:

சிலருக்கு இனிப்பு வகைகளில் கூடுதல் சர்க்கரை சேர்த்தால் பிடிக்கும். ஆனால், கேரட் அல்வாவில் கேரட்டில் இருக்கும் இனிப்பு சுவை மாறாமல் இருந்தால் கேரட் அல்வா நல்ல ருசியாக இருக்கும். எவ்வளவு கேரட் அல்வா செய்கிறீர்களோ அதற்கு ஏற்றவாறு சர்க்கரை சேர்ப்பது நல்லது.