ஆரோக்கியமான உணவுமுறை, உடற்பயிற்சி, மகிழ்ச்சியாக இருப்பது - இவை ஃபிட்னஸ் உடன் இருக்க உதவும் என பரிந்துரைக்கிறது மருத்துவ உலகம். நாளுக்கு நாள் துரித உணவு வகைகள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. நிதானமாக உணவு உண்ணுவது, அதற்கான தயாரிப்புகளில் ஈடுபடுவது போன்றவை சவாலானதாக இருக்கிறது. ஏதாவது ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டும் என்றால் எல்லாருக்கும் முதலில் கிடைப்பது துரித உணவு, பாக்கெட்களில் அடைக்கப்பட்ட உணவுகள்தான். பாக்கெட் உணவுகள் என்றாலே அது ஆபத்தானது அதில் ஆரோக்கியம் இல்லை என்றே மருத்துவ உலகம் சொல்கிறது.


அப்போ, ஆரோக்கியமிக்க ஸ்நாக்ஸ் எப்படி சாப்டறதுங்கிற கேள்விக்கு பதிலளிக்கிறார் சான்யா நிறுவனத்தை உருவாக்கிய  ஊட்டச்சத்து நிபுணர் ட்ரான்ஸ்ஸெரோ.. "ஆரோக்கியமான ஸ்நாக்ஸ், உணவுக்கும் ஸ்நாக்கிங்குக்கும் இடையே இருக்கும் ஒரு நல்ல பழக்கம் எனலாம். ஆனால், என்ன சாப்பிடுகிறோம் என்பது முக்கியம். நம் ஒட்டுமொத்த நல்வாழ்வை ஆதரிக்கும் ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளாக இருக்க வேண்டும்.  பழங்கள், காய்கறிகள் மற்றும் குறைந்த பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தேர்ந்தெடுப்பது, நல்லது.” என்கிறார்.


தயாரிப்பது முக்கியம்


சுவையான ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டும். அதேவேலை நல்ல ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் அதை நாமே தயாரிக்க வேண்டும். ஆரோக்கியமான சிற்றுண்டியை உறுதி செய்வதற்கான எளிய வழிகளில் ஒன்று முன்கூட்டியே தயாரிப்பதாகும். ஒவ்வொரு வாரமும் புதிய பழங்கள் மற்றும் காய்கறிகளை நறுக்கி அதில் யோகர்ட் சேர்க்கலாம்.  நட்ஸ் சேர்த்து புரோட்டீன் பிஸ்கட்கள் செய்யலாம். இவற்றை வீட்டிலேயே செய்யலாம். கடலை மிட்டாய் நல்ல ஆப்சன். புரதம் அதிகம். சிறிது நேரம் செலவிடுங்கள். பழங்கள் ஸ்டாக் வைத்திருந்தால், ஏதாவது சாப்பிட வேண்டும் என்ற தோன்றும்போது அவற்றை சாப்பிடலாம். 


Whole Foods


’Whole Foods’ அதாவது இயற்கையான உணவுகள். பதப்படுத்தப்படாதவை. பாக்கெட்டில் அடைக்கப்படாதவை. பச்சை காய்கறிகள், பழங்கள், நட்ஸ், உப்பு சேர்க்காத பிஸ்தா, பாதம் உள்ளிட்டவை. 


புரோட்டீன் நிறைந்த சிற்றுண்டி


ஸ்நாக்ஸ் நிச்சயம் புரதம் இருப்பதாக பார்த்து கொள்ளுங்கள். இதனால் அடிக்கடி சாப்பிட வேண்டும் என்ற உணர்வு வெகு சீக்கிரத்தில் ஏற்படாது. க்ரீக் யோகர்ட் - இவற்றை தேர்வு செய்யலாம். 


போலவே,  கிண்ணம், தட்டு உள்ளிட்டவை சிறியதாக இருக்கட்டும். அப்போதுதான் போதுமான அளவு சாப்பிட்டுவிட்டோம் என்ற உணர்வு வரும். என்ன சாப்பிடுகிறோம் என்பதை உணர்ந்து ருசித்து சாப்பிடவும்.


தண்ணீர்


 சில நேரங்களில், தாகம் எடுப்பது பசி என்று தவறாக கருதப்படுகிறது. சிற்றுண்டி சாப்பிடுவதற்கு முன், ஒரு கிளாஸ் தண்ணீர் குடித்துவிட்டு, உங்கள் பசி குறைகிறதா என்பதைப் பார்க்க சில நிமிடங்கள் காத்திருக்கவும். போதுமான அளவு நீர் அருந்துவதும் மிகவும் அவசியமானது.


சில்லி கார்லிக் டோஃபு (Chilli Garlic Tofu)


தேவையான பொருட்கள்:



  • டோஃபு சிறிய துண்டுகளாக நறுக்கியது - 500 கிராம்

  • பச்சை மிளகாய் - 1

  • சிகப்பு மிளகாய் - 2

  • பொடியாக நறுக்கிய பூண்டு - ஒரு முழு பூண்டு

  • இஞ்சி - அரை துண்டு பொடிதாக நறுக்கியது

  • சோயா சாஸ்

  • ரெட் சில்லி சாஸ்

  • உப்பு - தேவையான அளவு

  • காய்கறி - ஒரு கப் (உங்கள் சாய்ஸ்)

  • ஸ்பிரிங் ஆனியன் - 3 டேபிள் ஸ்பூன்

  • கார்ன் ஃப்ளார் - ஒரு டேபிள் ஸ்பூன்

  • எண்ணெய் - ஒன்றரை டேபிள் ஸ்பூன்


செய்முறை:


சிவப்பு, பச்சை மிளகாய், நறுக்கிய பூண்டு, இஞ்சி எல்லாவற்றையும் ஒரு பாத்திரத்தில் சேர்க்கவும். அதோடு, உப்பு, ரெட் சில்லி சாஸ், சோயா சாஸ் சேர்த்து நன்றாக கலக்கவும்.


இதனுடன் டோஃபு, காய்கறிகள் சேர்த்து கலக்கவும். ஸ்பிரிங் ஆனியன் சேர்த்து, கார்ன் ஃப்ளார் மாவு சேர்த்து கொள்ளவும். 


அடுப்பில் கடாயில் எண்ணேய் ஊற்றி சூடு பண்ணவும். டோஃபு கலவையை அதில் போட்டு 2-3 நிமிடங்கள் வரை வதக்கிவைக்கவும். அவ்ளோதான் ரெடி. ருசித்து சாப்பிடுங்க.


ஸ்நாக்ஸ் ருசியாக இருக்க வேண்டும் என்றால் அதை உங்களுக்கு ஏற்றவாறு உருவாக்கிட வேண்டும். அப்போதான் ஆரோக்கியமான வாழ்க்கை முறையும் இருக்கும் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள். அதுக்கு கடையில், பாக்கெட் உணவுகள் சாப்பிடவே கூடாது என்கிறீர்களா என்று கேட்டால், அதை குறைத்துவிடுவது உங்கள் உடல்நலத்திற்கு நன்மை பயக்கும் என்பது பதிலாக இருக்கும்.