அதிகாலை எழுந்து அவசர அவசரமாகக் கிளம்புவது முதல், பணிக்கு சென்று நாள் முழுவதும் வேலை என எல்லாவற்றையும் முடித்து வீடு திரும்புவது வரை இன்றைக்கு அனைவரின் உழைப்பும் அதிகரித்துள்ளது.  உடற்சோர்வைப் போக்கவும், மனச்சோர்வு அகற்றி ஞாபகத் திறனை மேம்படுத்தவும் சரியான, சத்துகள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.


சத்தான உணவுகளைச் சாப்பிடாததால்  சோர்வு, மனஅழுத்தம், உடல்சூடு, ரத்தச்சோகை உள்ளிட்ட பல நோய்களும் ஏற்படுகிறது. இதனால் மறதி அதிகரிக்கிறது. இதிலிருந்து விடுபட உங்களின் உணவு சத்துகள் நிறைந்ததாக இருக்க வேண்டும். அதற்கு உங்களுடைய உணவில் ஃபைபர் சத்துக்கள் அதிகளவு இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும்.


1980 ஆம் ஆண்டுகளில் இருந்து டிமென்சியா எனும் ஞாபக மறதியை அதிகரிக்கும் நோயின் பாதிப்பைக் குறைக்க உணவு பழக்கங்கள் கைக்கொடுக்கும் என்று ஜப்பானில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, ஃபைபர் அதிகம் உள்ள உணவுகள் மறதியைக் குறைக்க உதவும் என்று தெரிவித்துள்ளனர்.


ஃபைபரில் இரண்டு வகைகள் உள்ளன.  சொலியூபல் ஃபைபர் (Soluble fiber) மற்றும் இன் சொலியூபல் ஃபைபர் (Insoluble Fiber) என்பவை. தண்ணீரில் கரையும் ஃபைபர் உணவுகள் உடல்நலனுக்கு மிகவும் நல்லது.


குடலுக்கும் மூளைக்கும் இடையே நடக்கும் இடைவினைகளுக்கும் ஞாப சக்திக்கும் தொடர்பு இருக்கிறது.  கரையக்கூடிய நார்ச்சத்து குடல் பாக்டீரியாவின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துவதாக ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. நரம்பு அழற்சி டிமென்ஷியா ஏற்படுவதில் பங்கு வகிக்கிறது.  நார்ச்சத்து உணவுகள் டிமென்ஷியாவுக்கான பிற ஆபத்து காரணிகளை குறைக்கலாம்.  உடல் எடை, இரத்த அழுத்தம், கொழுப்பு மற்றும் குளுக்கோஸ் அளவு அதிகரிப்பது ஆகியவற்றை குறைப்பதில் ஃபைபர் சிறப்பாக செயல்படுகிறது.


கரையும் ஃபைபர் இருக்கும் உணவுப் பொருட்களை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்.


 மூளையின் செயல்பாட்டிற்கு உதவும் உணவு வகைகளில் சிறந்தது மீன் உணவுகள் ஆகும். டூனா, சாலமன், சார்டைன் உள்ளிட்ட மீன்களில், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகளவில் உள்ளன.  இவை மூளையின் செயல்பாடுகள் சிறந்து விளங்க உதவுகிறது. இதனால் ஞாபகத்திறன் அதிகரிக்கிறது.


சாக்லேட்களில் உள்ள கோகோவில், ஆன்டி ஆக்சிடண்ட்களின் ஒருவகையான பிளேவனாய்டுகள் உள்ளது. ஆன்டி ஆக்சிடண்ட்கள், மூளையின் செயல்பாட்டுக்கு துணைபுரிவதோடு மட்டுமல்லாது, ஞாபக சக்தி தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வாக உள்ளது.


பச்சைக் காய்கறிகள்,  கீரைகள், பரோக்கோலி உள்ளிட்டவைகளில் உள்ள அத்தியாவசிய வைட்டமின்கள், மினரல்ஸ்,  ஆன்டி ஆக்சிடண்ட்கள் மூளையின் வளர்ச்சி மற்றும் செயல்பாடுகள் சிறந்து விளங்க உதவுகிறது.


அவகேடோவில் இருக்கும் மோனோசாச்சுரேடட் கொழுப்பு அதிகளவில் உள்ளது. இது மூளைக்கு செல்லும் ரத்தத்தின் அளவை அதிகரிக்க செய்கிறது. ஆகவே, மூளை எப்போதும் சுறு சுறுப்புடன் இயங்கும்.   முட்டையில் வைட்டமின் பி 12 போலிக் அமிலம், வைட்டமின் பி6,  கோலின் போன்ற சத்துக்கள் ஞாபக சக்தியை அதிகரித்து, மகிழ்ச்சியான மனநிலைக்கு உதவுகிறது. பாதம், வால்நட் போன்ற நட்ஸ் வகைகளில் உள்ள சத்துக்கள் மூளையின் ஆரோக்கியத்தைப் பாதுகாத்து மறதி தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வாக அமைகிறது.