தீபாவளி , கிறிஸ்துமஸ் , புத்தாண்டு என அடுத்தடுத்த கொண்டாட்டங்கள் வரவுள்ளன. இந்த மாதிரியான பண்டிகை காலங்களில் இனிப்புகள் மற்றும் விருந்துகள் இல்லாமல்  கொண்டாட்டங்கள் களைகட்டாது. அளவுக்கு அதிகமான இனிப்புகள் உங்களது நீண்ட நாள் டயட் பிளானையும் சொதப்பக்கூடும் . அதே நேரம் அதிக கலோரிகள் உடலில் எக்குத்தப்பான எடை  அதிகரிப்பிற்கும் வழிவகுக்கும். எனவே பண்டிகை  நாட்களில் நமது உடல் ஆரோக்கியம் என்பது முக்கியமானது. எனவே விழாக்களை ஆரோக்கியமான முறையில் எப்படி கொண்டாடுவது என்பது குறித்து இங்கே தொகுத்துள்ளோம்.


 






வீட்டில் இனிப்புகள் செய்யுங்கள்:


இனிப்புகள் இல்லாமல், இந்திய கொண்டாட்டங்கள் முழுமையடையாது. ஒவ்வொருவருக்கும் அவர்கள் எதிர்பார்க்கும் விருப்பமான ஸ்வீட் பண்டிகையில் இருக்க வேண்டும் . முன்பெல்லாம் வீட்டில் இனிப்புகள் செய்த கலாச்சாரம் மாறி , தற்போது பலரும் கடைகளில் இனிப்புகளை வாங்க ஆசைப்படுகின்றனர்.அவை சர்க்கரை, கொழுப்பு, சுத்திகரிக்கப்பட்ட மாவு மற்றும் சாயங்களால் உருவாக்கப்பட்டவையாக இருக்கும்.


எனவே இந்த ஆண்டு தின்பண்டங்களை வாங்குவதற்குப் பதிலாக, உயர்தர பொருட்கள் மற்றும் ஆரோக்கியமான மூலப்பொருட்களை கொண்டு நீங்களே வீட்டில் தயாரிக்கலாம். வீட்டில் இனிப்புகளை தயாரிக்கும் போது பயன்படுத்தப்படும் சர்க்கரை மற்றும் கொழுப்பின் அளவு உங்களுக்கு தெரியும் . நீங்கள் பக்குவமாக கையாளுவீர்கள் அல்லவா !


ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் :


பொதுவாக பண்டிகை நாட்களில் குழுவாக அமர்ந்து பேசுவது , உறவினர்களுடன் கார்ட்ஸ் விளையாடுவது போன்ற செயல்கள் நமக்கு உற்ச்சாகமாக இருக்கும். அந்த சமயத்தில் நமக்கு கொரிப்பதற்காக வைக்கப்படும் ஸ்நாக்ஸ் வகைகளிலும் கவனம் வேண்டும். உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும் வகையில் திண்பண்டங்களை எடுத்துக்கொள்ளாமல்  வறுத்த கொண்டைக்கடலை, வேர்கடலை , வேர்கடலை பர்ஃபி, வேக வைத்த பச்சை பயிறு ,பாதாம் , முந்திரி , உலர் பழங்கள் உள்ளிட்டவற்றை எடுத்துக்கொள்ளலாம்.




இதற்கு பதில் இது!


சரிவிகித உணவை உட்கொண்டால் உங்களுக்குப் பிடித்த உணவுகள் மற்றும் இனிப்பு வகைகளை நீங்கள் கைவிட வேண்டியதில்லை. இருப்பினும், உணவின் முக்கிய நோக்கம் உங்கள் உடலுக்கு எரிபொருளை வழங்குவது என்பதை நினைவில் கொள்ளுங்கள். சில உணவுப்ப்பொருட்கள் இல்லாமல் நமக்கு பண்டிகை நிறைவடையாது. உதாரணமாக சர்க்கரை . ஆனால் அதில் அதிக அளவு கலோரிகள் இருக்கின்றன. மேலும் வெள்ளை சர்க்கரை உடலுக்கு குந்தகம் ஏற்படுத்தும் . எனவே அதற்கு பதிலாக மாற்றுகளை பயன்படுத்தலாம் வெல்லம்  அல்லது தேன் இவற்றுள் எதையாவது பயன்படுத்தலாம். அதே போல மைதாவிற்கு பதில் கோதுமையை பயன்படுத்தலாம்.


உணவை சரியாக எடுத்துக்கொள்ளுங்கள் :


நீங்கள் 5 வேளையாக உணவை பிரித்து சாப்பிட வேண்டியது அவசியம் . நீங்கள் ஒரு வேளை உணவை ஒதுக்கினால் அது அதிக பசிக்கும் வழிவகுக்கும் எனவே இடையிடையே ஸ்வீட் சாப்பிட வேண்டும் என தோன்றலாம் . அதிலிருந்து தப்பிக்க நீங்க மூன்று வேளை அல்லது ஐந்து வேளைக்கான உணவை சரிவர சாப்பிட வேண்டியது அவசியம் .