நமது வாழ்வில் அன்றாட தேவைகளில் ஒன்று தினமும் தூக்கம். ஒரு நபர் சராசரியாக 7-8 மணி நேரம் தூங்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுரை தருகின்றனர். ஒரு சிலர் இதைவிட மிகவும் குறைவான தூங்கும் பழக்கத்தை வைத்துள்ளனர். மற்றவர்கள் அதிக நேரம் தூங்கும் பழக்கத்தை வைத்துள்ளனர். இவை இரண்டுமே நமது உடலுக்கு அதிக தீங்கு விளைவிக்கும் செயல். அதிலும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கு காரணமாக நாம் அனைவரும் வீட்டிலேயே முடங்கி இருக்கிறோம். இந்தச் சூழலில் பலரது வாழ்வியல் நேரங்கள் அனைத்தும் மாறியுள்ளன. குறிப்பாக பலர் தங்களது உணவு பழக்கம் மற்றும் தூக்கம் ஆகிய இரண்டையும் கனிசமாக மாற்றியுள்ளனர். இரவு நேரங்களில் விழித்து இருந்து வேலை பார்த்தால், படம் பார்த்தால் என பல வகையான வேலைகளை செய்வதால் உடல் நலத்திற்கு கேடு உண்டாகிறது.
இதன் காரணமாக அவர்கள் காலையில் சற்று தாமதாக எழ நேரிடுகிறது. இந்தச் சூழலில் நாம் சரியாக தூங்கி காலையில் சீக்கிரம் எழுவதால் வரும் நன்மைகள் என்னென்ன?
உடம்பில் நிறையே புத்துணர்ச்சி:
நாம் இரவு நேரத்தில் விரைவாக தூங்கி காலை சூரிய உதயத்திற்குள் எழுந்தால் நம்முடைய உடலுக்கு அதிக புத்துணர்ச்சி கிடைக்கும். அதாவது சூரிய உதயத்திற்கு முன்பாக காற்றில் அதிகளவில் மாசு அற்ற ஆக்சிஜன் இருக்கும் இதை நாம் சுவாசிக்கும் போது நம்முடைய உடலுக்கு ஒரு நல்ல புத்துணர்ச்சி கிடைக்கும். இந்த நேரத்தில் நாம் உடற்பயிற்சி செய்யும் போது அது உடலுக்கு மேலும் நல்ல பயன்களை தரும்.
அமைதியான சூழல்:
காலையில் சீக்கிரம் எழுவதால் மனதிற்கு ஒருவிதமான அமைதியான சூழல் கிடைக்கும். ஏனென்றால் அப்போது அதிக இடர்பாடுகள் இருக்காது. அத்துடன் உங்களுடைய மூளை நன்றாக சிந்திக்க ஏதுவான ஒரு சூழல் அமையும். நீங்கள் அமைதியாக உங்களின் எண்ண ஓட்டத்தை சரியாக கொண்டு செல்ல முடியும். மேலும் அப்போது வெகு சிலர் மட்டும் எழுவதால் உங்களுக்கு தனியாக சிந்திக்க சற்று நேரமும் கிடைக்கும். இவ்வாறு நீங்கள் செய்யும் போது உங்களுடைய மனதில் நிறைவு மற்றும் அமைதி நிலவும்.
தாமதம் என்ற பேச்சுக்கு வாய்ப்பில்லை:
தினமும் சக்கரம் போல் சுழன்று கொண்டு ஓடும் நமது வாழ்வில் நாம் அனைவரும் கூறும் ஒரே விஷயம் எனக்கு நேரமில்லை என்பது தான். அதிகாலையில் எழும் போது உங்களுக்கு அந்த பிரச்னையே இல்லாமல் இருக்கும் சூழல் உண்டாகும். அதாவது அந்த சமயத்தில் நீங்கள் எழுந்திருக்கும் போது நீங்கள் ஏற்கெனவே திட்டமிட்டு நேரம் இல்லாமல் செய்ய தவறிய வேலைகளை செய்ய முடியும். அத்துடன் நீங்கள் தினமும் அவசரமாக செய்யும் சில வேலைகளை செய்ய தற்போது கூடுதல் நேரம் கிடைக்கும். இது உங்களுக்குள் இருக்கும் அவசரத்தை போக்கும். அத்துடன் நீங்கள் எந்த வேலையையும் நேரம் இல்லை என்று தள்ளிப்போடவோ அல்லது தாமதமாகவே முடிக்க தேவை இருக்காது.
அதிக மகிழ்ச்சியுடன் இருக்கலாம்:
கனடாவிலுள்ள டோரான்டோ பல்கலைக்கழகம் ஒன்று ஒரு ஆய்வை நடத்தியது. அதில் அதிகாலை எழுபவர்கள் மற்றும் தாமதமாக எழுபவர்கள் ஆகிய இருவரிடமும் பல கேள்விகளை முன்வைத்தது. அதில் இருவரும் தங்களுடைய தூங்கும் நேரம் திருப்தியாக உள்ளது என்று பதிலளித்தனர். ஆனால் இவருவருக்கும் இருந்த ஒரு முக்கியமான வித்தியாசம் இந்த ஆய்வில் வெளியானது. அதாவது அதிகாலை எழுபவர்கள் தாமதமாக எழுபவர்களைவிட அதிக மகிழ்ச்சி, மனநிறைவு மற்றும் நல்ல உடல் ஆரோக்கியம் ஆகியவற்றுடன் இருந்தனர். ஏனென்றால் அவர்களுக்கு தங்களது உடலில் மீது அக்கறை செலுத்த அதிக நேரம் கிடைக்கிறது. இதே தாமதமாக எழுபவர்களுக்கு தங்களுடைய வேலைகளை செய்து முடிக்கவே நேரம் சரியாக உள்ளது என்று ஆய்வில் தெரிவித்தனர்.
வேலை பளு குறையும்:
நீங்கள் தினமும் சீக்கிரம் எழுவதன் மூலம் உங்களுடைய பிற வேலைகளை விரைவாக செய்து முடித்துவிடலாம். இதனைத் தொடர்ந்து உங்களுடைய அலுவலக வேலைகளை செய்ய தொடங்கலாம். அப்போது மற்ற வேலை செய்ய வேண்டும் என்ற கவலை இருக்காது. இதன் காரணமாக நீங்கள் அலுவலக வேலையில் முழு ஈடுபாடு உடன் செயல்படலாம். இதனால் உங்களுடைய வேலை பளு சற்றே குறைய நேரிடும்.
அதிகாலை எழுவது என்றால் இரவு சீக்கிரம் தூங்க வேண்டும் என்ற கருத்து மேலோங்கி உள்ளது. ஆனால் அது தவறு நீங்கள் உங்களுடைய தூக்கத்தை சரியாக திட்டமிட்டால் அதிகாலை எழ முடியும். எனவே கொரோனா ஊரடங்கு காலத்திலாவது ஒரு இந்த பழக்கத்தை நாம் தொடங்க முயற்சி செய்வோம்.