”கொரோனா பெருந்தொற்று இரண்டாம் அலையில் உச்சத்தை தொட்டு வரும் இவ்வேளையில், "காய்ச்சல், இருமல், அதீத உடல் சோர்வு" போன்ற அறிகுறிகளைப் புறக்கணித்து பரிசோதனை செய்யாமல் இருப்பது என்பது அலட்சியமாகும். அறிகுறிகள் தோன்றியவுடனே தங்களை வீட்டில் பிறரிடம் இருந்து தனிமைப்படுத்திக்கொள்ளவும். வீட்டில் அனைவரும் முகக்கவசம் அணியவும். தொற்றின் அறிகுறிகள் வெளிப்படுத்தும் நபர் இருக்கும் வீட்டில் இருந்து நபர்கள் பிற வீடுகளுக்கு செல்வது கூடாது” என்று பொது நல மருத்துவரான Dr.A.B.ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
அறிகுறிகள் தோன்றிய அன்றோ அதற்கடுத்த நாளோ கொரோனா RTPCR பரிசோதனை செய்யவும் ( பரிசோதனை முடிவுகள் கிடைப்பதற்கு அதிகபட்சம் ஒரு நாள் ஆகும் ) வீட்டின் பிற நபர்களுக்கும் நோயின் அறிகுறிகள் தோன்றுகின்றனவா என்று கண்காணித்து உடனே அவர்களுக்கும் பரிசோதனை எடுக்க வேண்டும்.
அபாய அறிகுறிகள்
அதிக காய்ச்சல் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மேல் அடிப்பது
இருமல்தன்மை கூடிக்கொண்டே செல்வது
மூச்சு விடுவதில் சிரமம்
மூச்சுத் திணறல்
நெஞ்சுப்பகுதியில் அழுத்தம்
சில தூரம் நடந்தாலும் மூச்சு இரைப்பது
நோய் அறிகுறி இருப்பவர், ஒரு நிமிடத்திற்கு 24 முறைக்கு மேல் சுவாசிப்பது
ஒரு முறை மூச்சு இழுத்து தம் கட்டி மனதுக்குள் ஒன்று முதல் இருபது எண்ணவேண்டும். அவ்வாறு இருபது வரை எண்ணமுடிந்தால் தொற்றானது அடுத்த நிலைக்கு சொல்லவில்லை என்பதை மறைமுகமாக அறியலாம். நுரையீரலில் நியூமோனியா உருவாகும் ஒருவரால் ஒரு மூச்சில் இருபது எண்ணமுடியாது.
ஃபிங்கர் பல்ஸ் ஆக்சிமீட்டர் கருவி இருந்தால், அதில் எப்போதும் உங்களுக்கு 94% க்கு மேல் இருக்க வேண்டும். கீழ் சென்றால் உடனே அலர்ட் ஆக வேண்டும். பரிசோதனையை முறையாக முதல் சில நாட்களிலேயே எடுக்காமல் இருப்பவர்கள் பெரும்பாலும் தொற்றை அலட்சியம் செய்கிறார்கள். அது நோயின் அடுத்த நிலைக்கு முற்றுவதையும் கண்டு கொள்வதில்லை. தொற்று அறிகுறிகள் ஆரம்பித்த இரண்டாவது வாரத்தின் கடைசி பகுதியில்
தீவிர மூச்சுத் திணறல் நிலையை அடைந்த பின் மருத்துவமனையை அடைகின்றனர். இது ஆபத்தானதாகும்
எனவே பரிசோதனையை செய்து கொள்ள முந்துங்கள். RTPCR பரிசோதனையை காலம் தாழ்த்தினால் அது நெகடிவ் என்று வரும் வாய்ப்பு அதிகம். RTPCR நெகடிவ் என்று வந்தாலும் ஏழு நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். அறிகுறிகள் முற்றினால் மருத்துவர் அறிவுரையின் படி நெஞ்சுப்பகுதி அதி தெளிவான கணிணி துணைகொண்டு செய்யப்படும் குறுக்கு வெட்டு நுண்கதிர் வரைவி (High Resolution Computed Tomography - CHEST )
பரிசோதனை செய்ய வேண்டும்
முதல் கோணல் முற்றிலும் கோணல். ஆனால் முதல் அடியை சரியாக எடுத்து வைத்தால் பாதி வெற்றி. நோயை முதல் வாரத்தில் கண்டறிபவர்கள்
நோயை இரண்டாவது வாரத்தில் கண்டறிபவர்களை விட அதிகம் உயிர் பிழைக்கிறார்கள். பிறருக்கு பரப்பாமல் தொற்றுச்சங்கிலியை உடைக்கவும் உதவுகிறார்கள். விரைந்து பரிசோதனை செய்யுங்கள். ஆபத்து அறிகுறியை அறியுங்கள்