வேட்டைத்துணைவன் - 12


 


கன்னி / சிப்பிப்பாறை நாய்கள் – பகுதி 4


பொலிகர்களுக்குப் போதுமான விளக்கங்கள் குடுத்தாகிவிட்ட நிலையில் poligar hound என்ற வரையறைக்குள் வரும் நாயினங்களுக்கும் அவர்களுக்கும் தொடர்புண்டு என்பதை மீண்டும் விளக்கத்தேவையில்லை. கூடவே, இப்போது நாம் தொகுத்துப் பார்ப்பதெல்லாமுமே கூர்முக அமைப்பு கொண்ட நாய்கள் குறித்தான செய்திகள்தான் என்பதையும், அவையே கன்னி / சிப்பிப்பாறை இனங்களின் மூதாதையர்கள் என்பதையும் தெளிவாக புரிந்து நகரும் பட்சத்தில் இனம் சார்ந்து வரும் குழப்பமோ சிக்கலோ எழ வழியில்லை.


தமிழகத்துக்கு இவ்வைகை கூர்முக நாய்கள் இந்த ஆண்டு,  இந்த நாளில், இந்தக் கணத்தில் “டப்” என வந்து குதித்தது எனத் திருத்தமாகக் கூற இயலாத போதும் நமக்கு கிடைத்த தகவல்கள் அடிப்படையிலும் பலர் மூலமாக கேட்டறிந்த கதைகள் அடிப்படையிலும் இவை நாயக்கர் ஆட்சி காலத்தில் தமிழகம் வந்திருக்க வேண்டும் என்பதை அறிய முடிகிறது. பிரித்தானியர் பெயரிடும் முறைப்படி பார்த்தாலும் கூட இவை தெளிவாக புரிந்து கொள்ளக்கூடிய ஒன்றுதான். இஸ்லாமிய மன்னர்கள் மூலம் வட இந்தியாவிலும் காலப் போக்கில் தக்கணத்திலும் இந்த கூர் முக நாய்கள் பெருகின, அதே தக்கனத்தில் கிளம்பிய விஜய நகர அரசு படை பரிவாரங்களுடனும் ,மக்களுடனும், ஆனிரைகளுடனும் மட்டும் இங்கு வந்து குடி அமரவில்லை ! நாய்களுடனும் தான் குடி புகுந்தார்கள் . சமீன்கள் சிலர் வேட்டை நாய்களுக்கு என்று குதிரை லாயம் போல தனி கொட்டகை அமைத்து இருந்தனர். அப்படி ஒன்று எட்டையபுர ராஜாவிடமும் உண்டு என்ற கதை கரிசல் கிராமங்களில் உண்டு.


கரிசல் எழுத்தாளர் பூமணி தனது “அஞ்ஞாடி” நாவலில் கூட எட்டயபுர அரண்மனையில் வேட்டைக்காகவே தங்கி இருக்கும் ஆயாக்கமார்கள் ( ஜமீன் உருவுக்கார்கள் ) பற்றி ஒரு வரி சொல்லி இருப்பார்.  1835 ஆண்டு வெளியான “Alexander’s east india col.magazine. vol.10 “ யில்,“வேட்டையாடுவதில் அதீத ஆர்வம் உடைய பொலிகர்களிடத்தில் இருந்த அதிக அளவிலான நாய்கள் கால்நடை வளர்ப்பு மற்றும் பறிமாறத்தில் பெரிய பங்கு வகித்தது. அவர்கள் மத்தியில் அதற்க்கு நல்ல மதிப்பும் கூட இருந்தது. மேலும் அவர்களுக்கு பிடித்தமான நாய்களுக்கு பதிலாக குதிரைகளைக் கொடுத்து வாங்கும் வழக்கமும் இருந்தது. அவர்கள் தெலுங்கு மொழி பேசும்  கம்பளத்தராக இருக்கின்றனர்” என்ற குறிப்பை கான முடிகிறது. இதயே பல படித்தன poligar hound பற்றிய குறிப்புகளில் மறுபடி மறுபடி பார்க்க முடிகிறது.  முன்பு நாம் பார்த்த oriental greyhounds தலைப்பில் வெளியான amherst கட்டுரையும் தெளிவு படுத்தியது இதைத்தான்.


வருடம் ஒரு முறை தொட்டியநாயக்கர் என்றழைக்கப்படும் கம்பளத்து நாயக்கர் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் தங்களின்  முக்கிய தெய்வமான ஜக்கம்மாவுக்கு சிவராத்திரி அன்று இந்நாய்களுடன் சென்று வேட்டையாடிப் படைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். படப்பு வேட்டை என்றும் இதற்குப் பெயர். இப்படிச் சடங்குகளோடும் இந்நாய்களுக்கு தொடர்பு கொண்டுதான் இருக்கின்றன. மேலும் கரிசல் வட்டாரங்களிலும் அநேக தென் மாவட்டங்களில் (அதே விருதுநகர் / தூத்துக்குடி / நெல்லை / தென்காசி தான்)   கம்பளத்து நாயக்க மக்கள் குழுவாக வாழும் கிராமங்களிலும் வீட்டுக்கு ஒரு வேட்டை நாய் வளர்ப்பதை நாம் இப்போதும் கூட பார்க்கலாம். இந்தத் தொடர்பு நீடித்து வரக் காரணம், இவர்கள் இந்நாய்களைக் கொண்டு வந்தது மட்டுமே அல்ல ! அவர்கள் சடங்கோடு இவை இறுக்கமான தொடர்பு கொண்டு இருப்பதும்தான்.  பாளையப்பட்டுகள் மதுரைக்கு கீழ் இருந்ததும்,  தென்மாவட்டங்களுக்குள் இந்த மக்கள் அதிகம் நிலை கொண்டததும் தான் இன் நாய்கள் அப்படியே இந்த நான்கு மாவட்டத்துக்குள் மட்டும் சுருங்கக் காரணம்.


அடிப்படையில் தங்கள் வாழ்வாதாரத்திற்கு கால்நடைகளையே நம்பி இருந்த இம்மக்கள் தமிழகதில் குடியமர்ந்ததும், அதையே வாழ்வாதாரமாகக் கொண்டு இங்கு இயங்கிக்கொண்டிருந்த  ஆயர் சமூக மக்களிடம் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டனர்.  அங்கும் நாய்கள் பகிரப்பட்டது.  அதைத் தொடர்ந்து மறவர் ஜமீன்கள் சிலர், வேட்டை ஆர்வத்துக்கு இந்நாய்கள் இசைவு தர நட்பின் பொருட்டு கூட்டு வேட்டையில் அங்கும் பகிரப்பட்டது.


பின்னர் வெள்ளையர் வருகை நிகழ்ந்ததும் .  தன்னை மேலானவன் என்று கட்டிக்கொள்ள காசு வாய்க்கப் பெற்றவன் அத்துணை பேரும் வெள்ளையரை நகல் எடுத்ததுக் கொண்டிருந்த காலம் ஒன்று உருவானது. வெள்ளையர்கள்  மேல் குவிந்த மோகம் அவர்கள் நாய்களிலும் குவிந்தது. அதற்கு hunts club இறக்குமதி வியாபாரங்கள் தூபமும் போட்டது. எதாவது நாயுடன் நிக்கும் ஒரு கருப்பு வெள்ளை ஜமீன்தார் படத்தைப் பாருங்கள் தொன்னூற்றி ஒன்பது சதவிகிதம் அதில் அந்நிய நாயினம் தான் இருந்திருக்கும். ஆம் அந்தக் காலகட்டத்தில் தான் கனவான்கள் இந்நாய்களை கைவிட்டார்கள்.அதே காலகட்டத்தில்  சாமானியர்கள்  அதை இறுக்கமாக பற்றிக்கொண்டனர்.


அதில் தொடக்க காலத்தில் பங்கு கொண்ட சமூகங்கள் என்றால் அது  ஒரு சிறுவட்டம் என்பது தெரியும்.  நாயக்கர், மறவர், ரெட்டியார், கோனார் போன்ற சொற்ப இடைநிலை சமூகங்களை உள்ளடக்கிய அவ் வட்டம் . பல ஆண்டுகளாக தன்னை  விரிவு படுத்திக்கொள்ளவே இல்லை. அதற்குள்ளேயே சுழன்றது . தங்களுக்குள்ளேயே போட்டி இட்டுக் கொண்டது. 70 களுக்கு பின்பு பட்டியல் இனத்துக்கு மக்களுக்களும் ஒரு சிறு பிரிவுக்கு இந்நாய்கள் சென்று சேர்ந்தது. சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு கூட நிலவிய கதை இதுதான்.  மேல குறிப்பிட்டது போல முதலில் நாய்களை பற்றிக் கொண்டவர்கள் எல்லாம் முதல் தலைமுறையை சேர்ந்தவர்கள் என்று எடுத்துக் கொண்டால்,  அப்படியாக முதல் தலைமுறையினர்  அத்துணை பேரும் மிகுந்த பிரயதனத்துக்கு பிறகே இந்நாய்களைப் பெற்றனர். அதனாலயே அவர்கள் மத்தியில் இந்நாய்கள்  கௌரவத்தின் குறியீடாக மாறி இருந்தது.




கல்வியிலும் சரி பொருளாதாரத்திலும் சரி எவ்வளவோ நலிந்த நிலையில் உள்ளவராயினும் தனது நாய்கள் பற்றி பேசும் போது தன்னியல்பாக ஒரு தோரணையை முகத்தில் கொண்டு வரும் பெரியவரையோ – நடுத்தர வயதுக்காரரையோ- பொடியனையோ இன்றைக்கும்  நீங்கள் வந்து தேடினால் வேண்டிய அளவுக்குப் பார்க்கலாம். அன்றைய நாளில்  அந்த குட்டிக்கும் விலை உண்டு. ஆம் அவர்கள் கௌரவத்திற்கான விலை.  சொல்லப் போனால் வாங்க விரும்புபவனின் கெளரவம்தான் விலை.  நாய்ககாரர்கள் ( நாய் உரிமையாளர் )  தோரணையில் ஈர்க்கப் பட்டவர்களில் எவர் தன் கௌரவத்தை நாய்க்காரர்  முன்பு வலிந்து சமர்ப்பணம் செய்கிறாரோ அவரே குட்டி வாங்கி வளக்க தகுதி உடையவர். இனவழி பிறந்தது அங்கு இருந்து தான்.


இன்னார் வழி நாய்கள் என்ற வரியை வேட்டை நாய்களில் புழங்கிய நாலாவது நாளே நீங்கள் கேள்விப்பட்டக் கூடும். அது இல்லமால் இந்த நாய்களே இல்லை. எழுதப்படாத வரலாற்று சித்திரம். தரச் சான்று, பொருள் பெருமை என எல்லாமும் அதில் அடக்கம்.. தொடர்ந்து பார்க்கலாம்.