உடற்பயிற்சி மேற்கொள்வது ஃபிட்டான உடலமைப்பு, ஆரோக்கியமான மனம், நல்ல வாழ்க்கை முறை ஆகியவற்றை வழங்கக் கூடியது. வாரத்தில் குறைந்தது இரண்டு அல்லது மூன்று முறை உடற்பயிற்சி மேற்கொள்பவர்களுக்கும் உடல்நலனில் நேர்மறையான விளைவுகளைத் தருகிறது. அதே வேளையில், உடற்பயிற்சி மேற்கொள்வதால் பாலியல் நலம் மேம்படுகிறதா? சமீபத்திய சில ஆய்வுகளின் முடிவுகள் இந்தக் கேள்விக்குப் பதில் தருகின்றன.
சமீபத்தில் `பாலியல் மருத்துவத்திற்கான இதழ்’ என்ற ஆய்விதழில் இடுப்புப் பகுதியில் அதிக சுற்றளவு கொண்டிருக்கும் ஆண்களுக்கும், உடல் உயரத்திற்கு ஏற்ற எடை இல்லாமல் அதிகமாக எடை கொண்டிருக்கும் ஆண்கள் ஆகியோருக்கு விறைப்புத் தன்மை குறைபாடு ஏற்படுவதன் வாய்ப்பு அதிகம் என்றும், உடல் எடை அதிகமாக கொண்டிருக்கும் பெண்கள் பாலியல் ஆசையும், பாலியல் செயல்பாடும் குறைந்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேசிய உடல்நல நிறுவனத்தின் ஆய்வின்படி, உடல் எடை அதிகம் கொண்டவர்களுள் 43 சதவிகிதம் பெண்களுக்கும், 31 சதவிகித ஆண்களுக்கும் பாலியல் செயல்பாடு குறைந்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இவர்கள் உடற்பயிற்சி எதுவும் மேற்கொள்ளாதவர்கள்.
வாரத்தில் சுமார் 6 மணி நேரம் உடற்பயிற்சி மேற்கொள்ளும் பெண்களுக்குப் பாலியல் திறன் அதிகரித்திருப்பதாகவும், உடற்பயிற்சியின் காரணமாக பாலியல் செயல்பாடு, உச்சநிலை, ஆசை முதலானவை அதிகரித்திருப்பதாகவும் இந்த ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
உடற்பயிற்சி மேற்கொள்வதைப் பழக்கமாக வைத்திருப்பவர்களுக்குப் பின்வரும் பலன்கள் கிடைக்கின்றன.
1. ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது
உடற்பயிற்சி மேற்கொள்வது ரத்த ஓட்டத்தைச் சீர் செய்வதோடு, இதய நலனை உறுதி செய்கிறது. நல்ல ரத்த ஓட்டம் இருப்பது ஆண்களுக்கு விரைப்புத் தன்மையை அளிக்கிறது. பெண்களுக்குப் பெண்ணுறுப்பில் உணர்ச்சி அதிகரிக்கவும் இது பயன்படுகிறது.
2. தாங்கும் வலிமையை அதிகரிக்கிறது
சுமார் அரை மணி நேரம் பாலியல் செயல்பாட்டின் போது ஆண்களுக்கு 125 கலோரிகளும், பெண்களுக்கு 100 கலோரிகளும் ஆற்றல் செலவிடப்படுகின்றன. இது மணிக்கு சுமார் 3 மைல் நடந்து செல்வதற்கு ஒப்பானது. உடற்பயிற்சி மேற்கொள்வது அதிக கலோரிகளைப் பயன்படுத்தவும், அதனைத் தாங்கும் வலிமையையும் அளிக்கிறது.
3. மன அழுத்தம் குறைந்து தன்னம்பிக்கை அதிகரிக்கிறது
மன அழுத்தம் ஏற்படுவதும் ஒருவரின் பாலியல் வாழ்க்கையில் குறைபாட்டை ஏற்படுத்தலாம். இதனைச் சரிசெய்வதற்கு உடற்பயிற்சி மேற்கொள்வது மன அழுத்தத்தைக் குறைக்கும் செயலாக இருக்கிறது. இதன்மூலம் தன்னம்பிக்கையும் அதிகரிக்கிறது. அதிக தன்னம்பிக்கை கொண்ட ஆண்கள் மீது பெண்களுக்கு அதிக விருப்பம் இருப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
4. மொத்த உடல்நலனும் அதிகரிக்கிறது
தொடர்ந்து உடற்பயிற்சி மேற்கொள்ளும் நபர்களுக்கு மொத்த உடல்நலனும் மேம்படுகிறது. இதன்மூலம் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் முதலானவற்றில் இருந்து பாதுகாப்பு கிடைக்கிறது. எனவே குறைந்த அளவிலான உடற்பயிற்சிகளும் ஒருவரின் பாலியல் நலனை அதிகரிக்கிறது.