வேலை, காலக்கெடு, அழுத்தம் எல்லாவற்றில் இருந்தும் கொஞ்ச நாள் தள்ளி இருக்க மனம் ஏங்குகிறதா? கொஞ்ச நேரம் கடலோரத்தில், காற்றில், மலை முகடுகளில், பனிச்சாரல்களில் ஊடுருவியிருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா? பட்ஜெட் குறைவு என்ற கவலை வேண்டாம்…
குறைந்த பட்ஜெட்டில் இந்தியாவின் அதிகம் எக்ஸ்ப்ளோர் செய்யப்படாத பகுதிகள் அழகையும் அமைதியையும் உங்களுக்காக ஒளித்து வைத்து காத்திருக்கின்றன. அதுபோன்ற பல இடங்கள் சமூக ஊடகங்கள் வந்த பின் பிரபலமாக மாறி இருந்தாலும், இன்னும் நாம் பார்க்க வேண்டிய இடங்கள் நிறைய இருக்கின்றன. தனியாக செல்ல விரும்பினாலும், நண்பர்களுடன் சேர்ந்து ஜாலி ட்ரிப் அடிக்க விரும்பினாலும், குடும்பத்தோடு செல்ல விரும்பினாலும், எளிதில் அணுகக்கூடிய இந்த இடங்கள் நம்மை குறைந்த செலவில் நிறைவாக உணரவைக்கின்றன. இந்தியா முழுவதும் உள்ள பட்ஜெட் சுற்றுலா தளங்களின் பட்டியலை காண்போம்.
கொடைக்கானல், தமிழ்நாடு
மலைவாசஸ்தலங்களின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானல், அழகிய இயற்கைக்காட்சிகள், அமைதியான ஏரிகள், வசீகரிக்கும் மலையேற்றங்கள் மற்றும் பைன் மரங்கள் கொண்ட பாதைகளை கொண்டுள்ளது. ஊட்டியைப் போல் அல்லாமல், கூட்டம் குறைவாகவே இருக்கும் இந்த இடத்தில் ஒப்பீட்டளவில் பட்ஜெட்டும் குறைவுதான்.
ஆலப்புழா, கேரளா
ஆலப்புழா அதன் உப்பங்கழிக்கு பிரபலமானது. கேரள கடல் உணவு வகைகளின் சுவையை அனுபவித்து, படகில் தங்கி மகிழலாம். சுற்றுலாப் பயணிகள் கலங்கரை விளக்கம், அருங்காட்சியகம் மற்றும் ஆலப்புழா கடற்கரை ஆகியவற்றைக் கண்டுகளிக்கலாம். இது மாநிலத்தில் மக்கள்தொகை குறைவான கடற்கரை பகுதிகளில் ஒன்றாகும். சிறந்த அம்சம் என்னவென்றால், உணவு மற்றும் தங்குமிடம் ஆகியவற்றின் பட்ஜெட் மிகக்குறைவாக இருக்கும்.
கசோல், இமாச்சல பிரதேசம்
பார்வதி நதியால் சூழப்பட்ட, குலு மாவட்டத்தில் உள்ள கசோலில், குறைந்த பட்ஜெட்டில் தங்குமிடங்கள் நிறைந்துள்ளது. உள்ளூர் உணவகங்கள் மற்றும் அழகான கஃபேக்கள் இங்கு மக்களை ஈர்க்கும் விஷயமாக உள்ளன. கீர்கங்காவிற்கு மலையேற்றம் செய்து செல்வது இங்கு ஸ்பெஷல். மேலும் உங்கள் அன்பானவர்களை மகிழ்விக்க நிறைய நினைவு பரிசுகளை இங்கு வாங்கலாம்.
டார்ஜிலிங், மேற்கு வங்காளம்
டார்ஜிலிங், பட்ஜெட்டுக்கு ஏற்ற சுற்றுலா தளமாக புகழ்பெற்றது. அதோடு தேநீர் இங்கு பிரபலம். புத்துணர்ச்சி தரும் காற்றின் மத்தியில் தேநீரை அனுபவிக்கலாம். கூம் மடாலயம், அமைதி பகோடா மற்றும் தேயிலை தோட்டங்களுக்குச் சென்று மகிழுங்கள். காலை நேரத்தில் டைகர் பாயின்ட்டிற்கு சென்று சூரிய உதயத்தைப் பார்க்கவும். மோமோஸ் மற்றும் துக்பா உள்ளிட்ட நாகா மற்றும் நேபாளி உணவு வகைகள் இங்கு மிகவும் பிரபலம்.
ஹம்பி, கர்நாடகா
அதிக சூடு இல்லாத பட்ஜெட்டுக்கு ஏற்ற பிப்ரவரி மாத பயணத்திற்கு, ஹம்பி சிறந்தது. வரலாற்று ஆர்வலர்கள் விருபாக்ஷா கோயில், மாதங்கா மற்றும் ஹேமகுடா மலைக் கோயில்களுக்குச் சென்று விஜயநகரின் கடந்த காலத்தை பற்றி தெரிந்து கொள்ளலாம். லோட்டஸ் மஹாலில் பைக் சவாரி செய்யலாம். குறைந்த பட்ஜெட்டில் கிடைக்கும் ஹோட்டல்களில் ஓய்வெடுக்கலாம்.