கோடை வெயில், நீர்ச்சத்து இழப்பினால் சிறுநீரக கல் உருவாகுமா? என்ற ஆராய்ச்சியை அண்மையில் அமெரிக்கா செய்துள்ளது. அதன்படி கோடை வெயிலால் ஏற்படும் நீர்ச்சத்து நிச்சயமாக சிறுநீரகக் கற்களை உருவாக்க அதிக வாய்ப்பு இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
அண்மையில் ஹைதராபாத்தைச் சேர்ந்த மருத்துவர் ஒரு நபரின் சிறுநீரகத்தில் இருந்து 206 கற்களை அப்புறப்படுத்தியுள்ளனர்.
கீஹோல் சர்ஜரி எனப்படும் நவீன அறுவைசிகிச்சை மூலம் இந்த கற்கள் அகற்றப்பட்டன. கிட்டத்தட்ட ஒரு மணிநேரத்துக்கும் மேல் இந்த அறுவை சிகிச்சை நடந்துள்ளது. இந்நிலையில், சிறுநீரக கல் குறித்து தகவல்கள் கவனம் பெற்றுள்ளன.
குறிப்பிட்ட இந்த நபருக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்களில் ஒருவர், கோடை காலத்தில் அதீத வெப்பநிலை நிலவும்போது மனிதர்களுக்கு நீர்ச்சத்து குறைபாடு ஏற்படுவது வழக்கமானது. அதுமாதிரியான நேரங்களில் சிலருக்கு சிறுநீரக கற்கள் தோன்றலாம் அல்லது நெஃப்ரோலிதியாசிஸ் என்ற நோயும் ஏற்படலாம்.
இது குறித்து விரிவாக அலசுவோம்:
2014ல் அமெரிக்காவின் நேஷனல் சென்டர் ஃபார் பயோடெக்னாலஜி இன்ஃபர்மேஷன், வெப்ப அலையால் ஏற்படும் நீர்ச்சத்து இழப்பு சிறுநீரக கற்களை உருவாக்கும் என்று கூறியுள்ளது. அட்லான்டா, ஜார்ஜியா, சிகாகோ, இலினாய்ஸ், டலாஸ், டெக்சாஸ், லாஸ் ஏஞ்சல்ஸ், கலிஃபோர்னியா, பிலடெல்ஃபியா, பெனிசில்வேனியா போன்ற மாகாணங்களில் சிறுநீரக கற்கள் பிரச்சனை அதிகரிக்கும் வெப்பம் காரணமாக அதிகரிப்பதாகக் கூறப்படுகிறது.
கல் உருவாகக் காரணம் என்ன?
கோடையில் சிறுநீரக கற்களுக்கு மிக முக்கியமான காரணம் போதிய அளவு தண்ணீர் குடிக்காததே என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இதனால் கால்சியம் இன்னும் பிற தாத்துக்கள் சிறுநீரகத்துடன் வெளியேறாமல் தேங்கி சிறு கற்களாகிவிடுகின்றன.
மும்பை செம்பூர் எஸ்ஆர்வி மருத்துவமனை சிறுநீரக சிகிச்சை நிபுணர் மருத்துவர் நஸ்ரீன் கீதே கூறுகையில் வெப்ப அலையால் நீர்ச்சத்து குறையும்போது சிறுநீரில் உள்ள அமிலத்தன்மை நிறைந்த தாதுக்கள் சிறு கற்களாக மாறிவிடுகின்றன என்றார்.
உலகம் வெப்பமயமாதலால் காலநிலை மாற்றம் ஏற்பட்டு வருகிறது. உலகெங்குமே சராசரி வெப்பநிலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கோடை காலத்தில் சிறுநீரக் கற்கள் ஏற்படும் தொந்தரவு இனி வரும் காலத்தில் அதிகரிக்கும் என்றே கருதப்படுகிறது.
உங்கள் சிறுநீரகத்தில் கல் அடைப்பு இருப்பதை கண்டறிவதற்கு சில அறிகுறிகள் உள்ளன. சிறுநீர் கழிக்கும்போது வலி இருந்தாலோ, அடிவயிற்றில் ஏதோ அசவுகரியத்தை உணர்ந்தாலோ அல்லது சிறுநீரில் ரத்தம் கலந்து வந்தாலோ கல் இருப்பது உறுதி.
கல்லின் அளவை அறிய முதலில் ஸ்கேன் செய்யப்படும். அதற்கேற்ப மருத்துவர் மருந்துகளைத் தருவார். சில நேரங்களில் கல்லின் அளவு மிகப் பெரியதாக இருக்கக் கூடும். அப்படியிருந்தால் அறுவை சிகிச்சை தேவைப்படும்.
தவிர்க்க என்ன செய்யலாம்?
சிறுநீரகக் கற்களைத் தவிர்க்க தண்ணீர் அதிகமாக அருந்த வேண்டும். சிறுநீரை அடக்கக்கூடாது. கோடை காலத்தில் 11 மணிமுதல் 4 மணிவரை அதிகமாக வெளியில் சுற்றித் திரியக்கூடாது.