இந்த கொரோனா காலகட்டத்தில் வெளியில் சென்று உடற்பயிற்சி மேற்கொள்ள முடியாத சூழ்நிலையில், வீட்டில் இருந்து உடற்பயிற்சி செய்ய தொடங்கிய நிலையில், வீட்டில் இருந்து செய்வதற்கு முதல் பயிற்சியாக யோகா பயிற்சி பலரது தேர்வாக இருந்தது. யோகா பயிற்சி உடல் ஆரோக்கியம் மற்றும் மனஆரோக்கியம் சார்ந்தது. இந்த பயிற்சிகளை ஆன்லைன் வழியாக வீட்டில் இருந்தே செய்ய பழகி கொண்டனர். இந்த பயிற்சிகளை செய்யும் போது தவிர்க்க வேண்டிய சில விஷயங்களை பற்றி தெரிந்து கொள்வோம்.
உடல் சோர்வாகமல் பார்த்து கொள்ளுங்கள். முதலில் எளிமையான பயிற்சிகளை செய்யுங்கள். இப்போது தான் பயிற்சிகளை ஆரம்பிக்கிறீர்கள் என்றால் உடலுக்கு தகுந்த பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள். அதிகம் டயர்ட் ஆக்கும் பயிற்சிகளை நீண்ட நேரம் செய்யாதீர்கள்
மூச்சு பயிற்சி - யோகாசன பயிற்சிகள் செய்யும் போது மூச்சு கவனம் இருக்க வேண்டும். உள்ளே செல்லும் காற்றையும், வெளியே செல்லும் காற்றையும் கவனிக்க வேண்டும். எந்த பயிற்சிகளிலும், மூச்சை இழுத்து வைக்க கூடாது. பயிற்சியாளர் ஆலோசனைக்கு பிறகு மூச்சை நிறுத்தும் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். மூச்சு கவனத்துடன் பயிற்சிகளை மேற்கொள்ளும் போது உடலும் மனமும், இயல்பாக இருக்கும்.
உணவு - சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் முன்னதாக பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். சாப்பிட பிறகு 2-3 மணி நேரம் கழித்து உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். சாப்பிட உடனே பயிற்சிகளை செய்ய கூடாது.
முதன் முறை யோகா பயிற்சிகளை கற்றுக்கொள்ளும் போது , பயிற்சியாளர் ஆலோசனையுடன் யோகா செய்ய வேண்டும். எடுத்தவுடன், வீடியோ பார்த்து செய்வது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். இதனால் சில தவறுகள் நடக்க வாய்ப்பு இருக்கிறது.
இறுக்கமான ஆடைகளை தவிர்க்க வேண்டும். இறுக்கமான ஆடைகள் அணியும் போது பயிற்சிகளை முழுமையாக செய்ய முடியாது..
குளித்தல் - பயிற்சி முடிந்தவுடன் குளிக்க கூடாது. பயிற்சிகள் செய்து முடித்த பிறகு வியர்வை அடங்கிய பிறகு, தான் குளிர்ந்த நீர் அல்லது, வெதுவெதுப்பான நீரில் குளிக்க வேண்டும்.
மாதவிடாய் நேரத்தில் யோகா பயிற்சிகள் செய்வது, அவரவர் விருப்பத்திற்கு செய்யலாம். அதிகமான இரத்த போக்கு, உடல் சோர்வு, வலி, இருந்தால் பயிற்சிகளை தவிர்த்திடுங்கள். பயிற்சிகள் செய்வதற்கு உடல் ஏதுவானதாக இருந்தால் யோகா செய்யலாம்.
தண்ணீர் - பயிற்சிகள் செய்து கொண்டிருக்கும் போது , நடுவில் தண்ணீர் தாகம் எடுத்தால் மட்டும் குடியுங்கள். அதிகமாக தண்ணீர் குடித்தால் பயிற்சிகளை செய்ய முடியாது.