வாழைப்பழம் ஊட்டச்சத்து நிறைந்தது. எளிதாக கிடைக்க கூடியது. தினமும் சாப்பிடுவது பரிந்துரைக்கப்படுகிறது. பொட்டாசியம், நார்ச்சத்து நிறைந்தது.வாழைப்பழம் சாப்பிடுவதால் இருமல், சளி ஏற்படும் என்று நம்பப்படுகிறது. இதில் உண்மையா என்பது பற்றி ஊட்டச்சத்து நிபுணர்கள் விளக்கம் அளிக்கின்றனர்.
வாழைப்பழம் சாப்பிட்டால் சளித்தொல்லையா?
வாழைப்பழத்தில் உள்ள ஊட்டச்சத்துகள் உடலின் செரிமான மண்டலத்தை சீராக செயல்பட வைக்கிறது. குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. வாழைப்பழம் சாப்பிடுவது சளி, இருமல் உள்ளிட்ட பிரச்சனைகளை ஏற்படும் என்று சொல்லப்படுவது உண்மையா என்ற கேள்விக்குப் ஊட்டச்சத்து நிபுணர் அமிதா காட்ரே பதில் அளித்துள்ளார்.
அதில் அவர் கூறும்போது, ”சளி, இருமல் பிரச்சனை காற்றில் உள்ள வைரஸ் தொற்று காரணமாக ஏற்படுகிறது. வாழைப்பழம் சாப்பிடுவதால் அல்ல. சிலருக்கு ஒவ்வாமை இருக்கலாம். மழை காலத்தில் சாப்பிட்டால் சிலருக்கு சளி ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. ஒவ்வாமை இருப்பவர்கள், ஏற்கனவே சளி பிரச்னை இருப்பவர்கள் ஆகியோருக்கு அதன் உற்பத்தியை அதிகரிக்கும். இதனால் சளி ஏற்படும் வாய்ப்பு இருக்கும். ஆனால், வாழைப்பழம் சாப்பிடுவதால் சளி தொல்லை ஏற்படாது. “என்று விளக்கம் அளிக்கிறார்.
உடல்நிலை சரியில்லாதபோது வாழைப்பழம் சாப்பிடுவதை தவிர்க்கலாம். இதுவும் ஒவ்வொருவரின் உடலினை பொறுத்தே அமைகிறது. அதற்கேற்றவாறு வாழைப்பழத்தை சாப்பிட வேண்டும். குறிப்பாக ஆஸ்துமா, ஒவ்வாமை இருப்பவர்கள் வாழைப்பழம் அடிக்கடி சாப்பிடுவதை தவிர்க்கலாம்.இவர்களுக்கு வாழைப்பழம் சாப்பிட்டவுடன் சளி ஏற்படலாம். இதனால் சளி தொந்தரவு இருக்கும்போது வாழைப்பழம் சாப்பிட வேண்டாம் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.
சளி, இருமல் பிரச்சனைகளை வீட்டில் உள்ள பொருட்களை வைத்து சரிசெய்யலாம். உணவு முறைகளில் மாற்றம் செய்தால் அதுவே மருந்தாகிவிடும். பூண்டு, மஞ்சள், துளசி, பாதாம், நெல்லிக்காய், எலுமிச்சை, சர்க்கரை வள்ளிக்கிழங்கு உள்ளிட்டவை ஊட்டச்சத்து நிறைந்தது. தினமும் சரிவிகித உணவும் சீரான உடற்பயிற்சியும் உடல் ஆரோக்கியமாக இருக்க உதவும்.