சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று தீபாவளியை முன்னிட்டு சிறப்பாக பணியாற்றிய தொழிலாளர்களுக்கு கார் மற்றும் பைக் பரிசளித்துள்ளது
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் 'டீம் டீடெய்லிங் சொல்யூஷன்ஸ்' (Team Detailing Solutions ) என்ற நிறுவனம்செயல்பட்டு வருகிறது. இது Structural steel design and Detailing சேவைகளை வழங்கி வரும் நிறுவனம் ஆகும்.
தொழிலாளர்களுக்கு தீபாவளி பரிசு:
இந்நிறுவனம் சிறப்பாக செயல்பட்ட ஊழியர்களுக்கு கார், பைக் பரிசு வழங்கியுள்ளது. இந்நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்களின் நலனைக் கருத்தில் கொண்டும், உற்பத்தித் திறனை ஊக்குவிக்கும் நோக்கத்திலும் 28 கார்கள், 29 பைக்குகள் என சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு தீபாவளி பரிசாக அளித்துள்ளது.
நிறுவனத்தில் 180 பேர் வேலை பார்க்கின்றனர். அவர்கள் வாழ்க்கையில் கடினமான சூழ்நிலைகளில் படித்து முன்னேறி வேலைக்கு வந்திருப்பதாக நிறுவனம் சார்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் வாழ்க்கையில் முன்னேற்றத்தை உறுதி செய்ய சிறப்பான பணியாற்றிய நபர்களுக்கு மாருது சுசூகி, ஹூண்டாய் முதல் மெர்சிடஸ் பென்ஸ் ரக கார்கள் பரிசளிப்படுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்துப் பேசிய நிர்வாக இயக்குநர் ஶ்ரீதர் கண்ணம், " எங்கள் நிறுவனத்தில் வேலை செய்பவர்களின் உழைப்பை விலைமதிக்க முடியாதது. அவர்களைப் பார்த்து கொள்வது எங்கள் பொறுப்பும் கூட. இந்த கார், பைக் கொடுப்பது எங்கள் ஊழியர்கள் யாருக்கும் முன்னதாக தெரியாது. அவர்களின் உழைப்பிற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்து எடுக்கப்பட்ட முடிவு இது. அவர்களது கடின உழைப்பிற்குப் பரிசாகக் கிடைப்பதால் அவர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் இப்பரிசுகள் கூடுதல் மகிழ்ச்சியாக இருக்கும். அவர்களின் உழைப்பிற்குக் கிடைத்த பரிசு இது.”என்று தெரிவித்தார்.
மேலும்,இந்நிறுவனத்தில் ஊழியர்களுக்கு கார், பைக் பரிசளிப்பது இது முதல் முறை அல்ல. கடந்த 2022-ல் மூத்த ஊழியருக்கு பைக் வாங்கி கொடுக்கப்படுள்ளது. ஊழியர்களின் சிறப்பான பங்களிப்பின் அடிப்படையில் இந்தப் பரிசு வழங்கப்படும். இந்த நிறுவனத்தின் முன்னெடுப்பை பலரும் பாரட்டி வருகின்றனர்.
இந்த அங்கீகாரம் ஊழியர்களுக்கு கூடுதல் ஊக்கமளிக்கும். 2022-ல் முதல் முதலில் நிறுவனத்தில் 2 பேருக்கு கார் பரிசளித்தோம். இப்போது இந்தாண்டு 28 கார்கள், 29 பைக் பரிசாக வழங்கி உள்ளோம்; இனியும் பரிசளிக்கும் நடைமுறைகள் தொடரும் என நிறுவன உரிமையாளர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.